புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்
அண்ணா (பொறியியல்) பல்கலைக் கழகம் 'செல் பேசி' உபயோகம் மற்றும் மாணவர் உடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது, நான் பலமாகக் கண்டித்தேன். கொண்டுவரப்பட்ட விதிமுறைகளை மட்டும் நான் பிரச்சினையாகக் கருதவில்லை. அவற்றின் அடிப்படைகளும், அதன் பின்விளைவுகளும் எனக்குக் கவலை தந்தன.

'வகுப்புக்களில் பிறருக்குத் தொந்தரவு விளைக்கக் கூடிய எதையும் அனுமதிக்கலாகாது. வகுப்பறைகளுக்குள் செல்களைத் தடை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை; இருக்கக் கூடாது. அதே போல் செயல்முறை வகுப்புக்கள் - பாதுகாப்பு நோக்கம் கருதி - உடைகளை நெறிப்படுத்துவதும் மிகச் சரியே'.

ஆனால், பல்கலைக் கழகத்தின் ஆணைகள் இந்த மாதிரிக் காரணங்களால் உந்தப் பட்டதாகத் தெரியவில்லை. செல், மற்றும் உடைகள் நமது கலாசாரத்துக்குத் தகாதவை என்ற அடிப்படையிலேயே இவ்வாணைகள் பிறப்பிக்கப் பட்டதாகத் தோன்றியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது! தனிநபர் சுதந்திரத்தை மீறுவது பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாகி விட்டது. பெஞ்சமின் ·ப்ராங்க்ளினை இன்னுமொரு முறை மேற்கோள் காட்டுகிறேன்: "கொஞ்சம் பாதுகாப்புக்காகத் தங்கள் உரிமைகளைக் கொஞ்சம் விட்டுக்கொடுப்பவர்களுக்கு இரண்டுமே கிட்டாது" ( "Those willing to give up a little liberty for a little security deserve neither security nor liberty") சில நாட்களாக இந்த உண்மையின் ஆழத்தை மறந்திருந்த பலருக்கு நினைவுத் தூண்டலாக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் நன்றி! இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஒற்றுமைகள் கடந்த சில வருடங்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்திய அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், இந்த உரிமைப் பறிப்பு செய்வதில் அமெரிக்காவுடன் ஒற்றுமை தேடாமலிருந்தால் நல்லது.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரது செயல்பாடுகள், அவர்கள் போருக்குச் சம்மதிக்க வைத்த விதம், NSA மூலம் சட்ட விரோதமாகக் குடிமக்களை வேவு பார்க்க முயன்றது இவையனைத்தும் இந்த ஆட்சியைப் பற்றி அறிய முயன்றுள்ள எவருக்கும் ஆச்சரியமாக இருக்கமுடியாது. உலகின் பெரும் மக்களாட்சிகளில் ஒன்று மக்களை மாக்களாக்கவும் தனக்கு ஆதாயம் தேடவும், பயமுறுத்தல், பொய் சொல்லுதல் போன்ற காரியங்களிலும் ஈடுபட்டது என்பதே உண்மை.

இதற்கு நடுவே சில நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளும் உள்ளன. நீதித்துறையிலுள்ள சிலரது கண்டனம், பதவி விலகல் போன்றவையும், Intelligent Design பற்றிய தீர்ப்பும் அமெரிக்கா தனது தனிநபர் சுதந்திரம் மற்றும் முற்போக்கு எண்ணங்களை முற்றிலும் அடகு வைத்து விடவில்லை என்று எண்ணவைக்கிறது.

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

தென்றலின் நீடிப்புக்கு ஒரே காரணம் வாசகர்களது ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும்தான். நாங்கள் எங்கள் பணியைத் தொடர, உங்களது தொடர்ந்த ஆதரவை இப்புத்தாண்டில் வேண்டுகிறோம்.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
ஜனவரி 2006

© TamilOnline.com