பாசம்
தொலைக்காட்சியில் Bears Vs. Packers கேமை அலசிக்கொண்டிருந்தார்கள்.

"ரொம்ப முக்கியம்! காலையிலை உக்கந்தாச்சா? போய்ப் படிக்கற வழியப் பாரு," 9 வயது மகன் ரமேஷிடம் எரிந்து விழுந்தார் ரகு. அலுத்துக்கொண்டான் மகன்.

"குமோன் பண்ணினியா?"

"யெஸ், ஐ டிட்" அலறினான் ரமேஷ்.

"ராத்திரி முழுக்க ஃபோன்ல பேச வேண்டியது. காலையில கண்ல கெடைக்கறவனக் கடுப்பு அடிக்கவேண்டியது. போயி காப்பி குடிங்க," இது மனைவி சுசி. "இன்னிக்கி வீட்லேருந்தே வேலயா?" மீண்டும் சுசி.

"ஆமா" உர்ர் என்று பதிலளித்தார் ரகு.

"சரி. நான் கடைக்கு போய், இன்னிக்கி ரமேஷ் ஃபுட்பால் பார்ட்டிக்கு வேண்டியதை வாங்கிட்டு வரேன். கொஞ்சம் லீலாவைப் பாத்துக்கோங்க. இன்னிக்கி வெள்ளிகிழமை." லீலா இவர்கள் வீட்டுச் செல்லப் பிராணி.

போன வருடம் இந்தியா சென்றிருந்த பொழுது, ரமேஷ் ஒரு தெரு நாயைப் பார்த்து, "டாட், இதை வீட்டுக்குக் கொண்டு போகலாமா?" எனக் கேட்க, "அமெரிக்காவிலயே ஒண்ணு வாங்கிக்கலாம். இங்கேருந்து கொண்டு போறதெல்லாம் கஷ்டம்" என்று சொல்லி அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரகு. அது முடிவில்லா ஆரம்பம்போல அமெரிக்கா வந்தததும் தொடங்கியது.

"அப்பா, நாய் வாங்கலாம்னியே, எப்ப?" நாளுக்கு நாள் இந்தக் கேள்வி அதிகமானது. ஏதேதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார், எதுவும் எடுபடவில்லை. ரமேஷ் கேட்டு ரகுவால் தட்டமுடியாது!

மனைவியிடம் பேசினார் ரகு, "நாயா!" ஆச்சரியத்துடன் கேட்டாள் சுசி. எதிர்ப்பு இல்லை என்பதைப் புரிந்துக்கொண்டு தேட ஆரம்பித்தார். "வாங்கினா கோல்டன் டூடில் அல்லது கோல்டன் ரெட்ரீவர்தான். டூடில் அலர்ஜி கிடையாது. ரெட்ரீவர்தான் பெஸ்ட்!" - ரகு

எனக்கு அல்சேஷன்தான் வேணும் என்றாள் சுசி.

"ஜெர்மன் ஷெப்பர்டா?" என்றார் ரமேஷ்

"எங்க தாத்தா அதுதான் வச்சிருந்தார். நாம ரெட்ரீவர் வளர்ப்போம்" என்றார் ரகு.

"போதுமே உங்க தாத்தா கதை. அல்சேஷன்தான்."

"ஆமாம் டாட். ஜெர்மன் ஷெப்பர்டே வாங்கலாம். They are awesome" என்றான் தன் பங்குக்கு ரமேஷ். பெண்மை வென்றது.

பிரீடர் தேர்வு செய்து, இன்டர்நெட்டில் நாய்குட்டி எப்படி வாங்க வேண்டும் என அலசி ஆராய்ந்து, "குட்டியை கையில் தூக்கி மல்லாக்க படுக்க வைக்கணுமாம். அது ஒரு செகண்ட் அமைதியா இருந்தா அது ஆல்ஃபா டாக் இல்லை" சுசி சொல்ல, "கை தட்டிக் கூப்பிட்டால் நம்மை நோக்கி வரவேண்டும்" என்றான் ரகு.

இது எதுவுமே இல்லாமல், ஒரு குட்டி நேராக ரமேஷிடம் வந்து வாஞ்சையாய் வால் ஆட்டித் தனது குட்டிக் காலைத் தூக்கி அவன்மேல் வைக்கப் பார்த்தது. "ஓ! திஸ் இஸ் மை டாக்!" முடிவானது.

"லீலா" சுசி வைத்த பெயரைப் பின்மொழிந்தார் ரகு. வீட்டின் பின்புறத்தில் ரமேஷுடன் ஓடி விளையாடியது லீலா. ஒரே சந்தோஷம் ரகுவுக்கு.

"ராத்திரி க்ரேட்டுக்குள்ள விட்டு, பிளாங்கெட் போட்டு மூடுங்க, நல்லாத் தூங்கும்" சுசி, நெட்டில் படித்ததைத் தெரிவித்துவிட்டு, நித்திரைக்குப் போனாள்.

ஆனால் அன்று இரவு சிவராத்திரியானது; நிறுத்தாமல் அழுதது லீலா. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கதறல் அதிகமானது. வெளியில் கூட்டிச் செல்வதும், பின் க்ரேட்டில் போடுவதுமாய் இருந்தார் ரகு. இது நாலு நாள் தொடர்ந்தது. இரவு நேரம் வழக்கம்போல் லீலாவை வெளியில் கூட்டிச் சென்றார். லீலா விளையாட ஆரம்பித்தாள். 10 நிமிடம் ஆகியும், வர மனம் இல்லாமல் விளையாட்டைத் தொடர்ந்தாள்.பொறுமை இழந்த ரகு, வேகமாக கழுத்துப் பட்டையை இழுக்க, அந்தச் சமயம் பார்த்து ஒரு மிகப் பெரிய டிரக் வேகமாக அவர்கள் வீட்டைக் கடந்து "கிரீச்..." சத்தத்துடன் நிறுத்த, மிரண்டு, அடைக்கலம் தேடி, ரகுவின் பின்னால் ஒளிந்துக்கொண்டாள் லீலா. குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டார் ரகு. அன்று முதல் லீலாவின் பயம் டிரக் சத்தம் கேட்டால் அதிகமானது.

பொதுவாக லீலா மிகவும் புத்திசாலி நாய். ரமேஷை ஒருவரும் நெருங்கவிடாது. லீலாவின் திறமையைப் பார்த்து, பக்கத்துக்கு வீட்டு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி 'Search and Rescue' வேலைக்குப் பயிற்சி கொடுத்து, தேர்விற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் லீலாவின் பலவீனம் டிரக் சத்தம், கேட்டால் பயம். ஆனால் அதே வண்டியைக் கண்ணால் பார்த்தால் பயம் இல்லை.

இன்று வெள்ளிகிழமை, குப்பை எடுக்கும் நாள். சுசி கடைக்குக் கிளம்பியதும், "டாட், வெளியே ஃபுட்பால் விளையாடிக்கிட்டிருக்கேன்," பதிலுக்குக் காத்திராமல் போனான் ரமேஷ். இன்றைக்குள் முடிக்கவேண்டிய அலுவல்களில் மூழ்கினார் ரகு.

மறுசுழற்சிக் குப்பை டிரக் வந்து கிரீச்...கிரீச் சத்ததுடன் நின்று ஒவ்வொரு வீட்டிலும் நீலநிறா டப்பாவை எடுத்துக்கொண்டு இருந்தார் ஓட்டுனர். லீலா தாவி வந்து முனகலுடன் ரகுவின் நாற்காலிக்கு அடியில் பதுங்கினாள். தவிர்க்க முயன்ற ரகு நாற்காலியை நகர்த்த அவர்மேல் தாவி, முகம் புதைத்து நடுக்கம் அதிகமானது லீலாவுக்கு.

"கோ அவே" ஆவேசமாக ரகு கத்த, லீலாவின் நடுக்கம் அதிகமானது. வால் வளைந்து, காது மடங்கி, கண்கள் பணிந்து, போர் வீரன் நிராயுதபாணியாக நிற்பதைப் போல் நின்றாள் லீலா. "கோ டு யுவர் க்ரேட்…." அடித் தொண்டையிலிருந்து கத்தினார் ரகு. பயத்தில் மெதுவாக அது க்ரேட் பக்கம் நகர, பிடித்துத் தள்ளி தாளிட்டார்.

சிறிது நேரத்தில் மீண்டும் கிரீச்...கிரீச். இம்முறை பச்சை நிற குப்பைத் தொட்டிக்காக. லீலா தனது 90 பவுண்டு பலத்தையும் கொண்டு க்ரேட்டை உடைத்து வெளியேறினாள். குட்டியாக இருந்தபொழுது தன்னைத் தூக்கியதைப் போல் ரகு தூக்க வேண்டும் என்ற எதிர்பார்போடு தாவினாள். சற்றும் எதிர்பார்க்காத ரகு நிலை தடுமாற, லீலாவின் கால்கள் லேப்டாப்பின் விசைகளை அழுத்த, இரண்டு முன்று எழுத்துக்கள் உடைந்ததன. நகர்த்தும் முயற்சியில் ரகு குனிய, அவர் முகத்தில் கால் பதித்து, நகம் முகத்தில் கீறியது. ஆத்திரம் பொங்கிற்று ரகுவிற்கு. "போ" என்று கத்திக்கொண்டே லீலாவைக் கிழே தள்ளினார், முடியவில்லை; இன்னும் கோபம் பொங்க "சனியனே போய்த் தொல" காலைப் பிடித்து இழுத்து, முதுகில் அறைந்தார். 'வழ்வ்' கத்திகொண்டே லீலா மீண்டும் அவரிடம் தஞ்சம் ஆனது. அருகில் இருந்த செயினை எடுத்து அடிப்பதுபோல் ஓங்க, நகர்ந்தது லீலா. உடனே இன்னும் கோபமாகக் கத்திகொண்டே செயினைக் கார்ப்பெட்டில் அடித்தார்; ஏற்கனவே பயத்தில் இருந்த லீலாவுக்கு இன்னும் பயம் ஏறியது. செய்வதறியாமல் வீட்டைச் சுற்றினாள். வீரத்துடன் பாய்ந்து நாயைத் துரத்தினார் ரகு, லீலா தன்னை ஒன்றும் செய்யமாட்டாள் என்று தெரிந்துக்கொண்டு!

அந்நேரம், சுசி வந்தாள்; லீலா சுசியிடம் தஞ்சம். "வாம்மா, என்னாச்சு?" தாய்ப்பாசம்.

"சனியன். கொண்டு போய் வித்துடு. பயந்தாங்குளி. ஒரு வேலை பண்ணமுடியல வீட்ல. வீடா இது?" ரகு எகிறினார்.

"ஒரு அஞ்சு நிமிஷம் டிரக் வரும்போது வெளியே போய் லீலாவோட விளையாடினா சரியாப் போயிருக்கும், இப்போதான கொஞ்சம் கொஞ்சமா பயம் தெளியுது. அதுக்குள்ள மறுமடியுமா? சொல்லப்போனா உங்களாலதான் அவ இப்படி ஆனா. குட்டில டிரக் வரும்போது கத்தினீங்க. அதுல பயந்தவதான். முடியலைன்னா முடியாதுன்னு சொல்லிட்டு போங்க! சும்மா கடுப்படிசிக்கிட்டு.... நான் லேட்டா வேணா போயிருப்பேன் கடைக்கு."

கோபமாகக் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ரகு. மூளை மனைவி சொன்னத்தின் பொருள் உணர்ந்தது, மனம் மறுத்தது. காரின் கண்ணாடி ஜன்னல்களை இறக்கிவிட்டு ஓட்டினார். ஜில்லென்று காற்று வீச, மனது லேசானது. லீலாவின் அப்பாவித்தனம் புரிந்தது. தான் செய்த தவறும்தான். அடுத்த எக்ஸிட்டில் காரை திருப்பி வீட்டுக்குப் போனார்.

மட்டற்ற மகிழ்ச்சியில் தாவினாள் லீலா, ஏதும் நடக்காதது போல்! வால் ஆட்டி, கீறல் விழுந்த கன்னத்தை நக்கி, முன்னும் பின்னும் ஓடினாள். மெல்லக் குனித்து தலையைத் தடவினார் ரகு.

ரகுவின் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன. பாசம் என்பது தூய்மையானது. நீ என்னைத் திட்டினால் நான் உன்னைத் திட்டுவேன். நீ என்னை அவமதித்தால் நான் பழிவாங்குவேன். நான் உனக்காக எவ்வளவு செய்து இருக்கிறேன், நீ என்ன செய்தாய்? நான் துன்பத்தில் இருந்தபோது கண்டுகொள்ளாத உன்னை, நான் ஏன் மதிக்கவேண்டும்? - இவையல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது பாசம்.

நாய் தன் எஜமானரை ஒருபொழுதும் பழிவாங்க நினைப்பதில்லை. மாறாக எஜமான் தன்னிடம் கோபப்படும்படி தான் நடந்து கொண்டதை நினைத்து சோகப்படும். அடுத்தமுறை அந்த தவறைத் தவிர்க்கப் பார்க்கும் - முடிந்தவரை.

தான் நேசிக்கும் மனிதர்களைச் சோதிப்பது வேண்டுமானால் கடவுளின் குணமாகப் புராணங்கள் சித்திரிக்கலாம். ஆனால் பாசம் என்பது தாய்ப்பால் போன்று தூய்மையானது, நாம் எவரிடம் அதைக் காட்டுகிறோமோ, கணக்கிடமுடியாது, கணக்கிடவும் கூடாது. அதைப் பெறுபவன் எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் அந்தக் கடனை திரும்ப அடைக்க முடியாது, பதிலுக்கு அவன் பாசம்தான் பொழியமுடியும். பெற்றோரை மதிக்காத கேடு கெட்ட பிள்ளைகள் உண்டு - ஆனால் எஜமனரை மதிக்காத நாய் இவ்வுலகில் இல்லை.

கோபம் என்பது பாசம் உள்ளவர்களிடம் வரக்கூடாது, வரவும் வராது, லீலாவைப் போல். லீலா நினைத்திருந்தால் ரகுவைப் புரட்டிப் போட்டு இருக்க முடியும், அதற்கான பயிற்சியும், பக்கத்துக்கு வீட்டுக்காரர் கொடுத்திருக்கிறார். ஆனால் லீலா அதற்கான முயற்சிகூடச் செய்யவில்லை.

ரகுவிற்குப் பாசத்தின் பண்பு புரிந்தது லீலாவிடமிருந்து. லீலா போதி மரம் ஆனது!

வெட்கத்தில் தலை குனிந்து மெல்லத் தபால் எடுக்கச் சென்றார் ரகு. லீலா 'search and rescue' - Human Remains and Detection (HRD) பிரிவில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்புத் தபால். ஆனால் ஒரு நிபந்தனை எஜமானர் இதற்கான தேர்வு எடுக்காததால், பிராணி எங்களிடம் இருக்கவேண்டும். வேண்டுமானால், மாதம் ஒருமுறை நீங்கள் உங்கள் வீட்டுக்குக் கூட்டிச் செல்லலாம் விடுப்பில், என எழுதியிருந்தது. நொடியும் யோசிக்காமல் கிழித்தார் தபாலை.

லீலா இன்னும் வால் ஆட்டிக்கொண்டு இருந்தது. கம்பீரமாய் காது நிமிர்ந்து, நாக்கு தொங்க, கண்கள் ஜொலிக்க. பாசம் நெகிழ அணைத்தார் லீலாவை.

வேலி ஓரத்தில் சிறுவன் ஒருவன் ரமேஷைத் துரத்தி விளையாட, பிடரி சிலிர்த்து நான்கு கால் பாய்ச்சலில், அடி வயிற்றில் உருமலுடன் குரைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தது லீலா.

மேசையில், காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின், தெய்வத்தின் குரல் புத்தகம் , திறந்து இருந்தது: "ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் பாவமே செய்யாதவர்களா என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யாவிட்டாலும் மனதிலாவது நினைக்கத்தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத்தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது"

(Note: This I dedicate to the heroic canines of 9/11. During the chaos of the 9/11 attacks, where almost 3,000 people died, nearly 100 loyal search and rescue dogs and their brave owners scoured Ground Zero for survivors, many loyal dogs sacrificed their lives. Now, twelve years on, just 12 of these heroic canines are alive today and I salute them!)

அகிலா,
நேப்பர்வில், இல்லினாய்

© TamilOnline.com