டாக்டர் பூவண்ணன்
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். பள்ளியில் படிக்கும்போதே எழுத்தார்வம் தொடங்கிவிட்டது. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, எழுத்தாளர் எத்திராஜன் ஆகியோர் ஊக்ககுவிக்க, கதை, கவிதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 'பாலர் மலர்', 'பூஞ்சோலை', 'டமாரம்' போன்ற சிறுவர் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. கல்லூரிக் காலத்தில் பெரியோர்களுக்காகவும் எழுதத் துவங்கினார். கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்த இவர் நாடகம், இலக்கியம், திரைப்படம் என படைப்பின் பல தளங்களிலும் முத்திரை பதித்தார். இவரது 'ஆலம்விழுது' புதினத்தொடர் கன்னடம், ஹிந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் திரைப்படமாகி வெற்றி பெற்றது. 'காவேரியின் அன்பு', 'அன்பின் அலைகள்' போன்ற புதினங்களும் திரைப்படமாகிப் பாராட்டுப் பெற்றன. 'சிறந்த குழந்தைகள் படக் கதாசிரியர்' என்ற தமிழக அரசின் விருதும், தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். இது தவிர, 'பாலர் இலக்கிய ஜோதி', 'இந்தியாவின் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர்', 'குழந்தை இலக்கிய மாமணி', 'செந்தமிழ்ச் சிற்பி', 'தமிழ்நெறிச் செம்மல்', 'தமிழண்ணல்', 'இலக்கியச் செம்மல்' போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். இவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பூவண்ணனுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மனைவி வத்சலா கோபாலகிருஷ்ணனும் ஓர் எழுததாளர்தான்.

குழந்தை இலக்கியச் சாதனையாளர் பூவண்ணன் அவர்களுக்குத் தென்றலின் அஞ்சலி.

டாக்டர் பூவண்ணன் தென்றலுக்கு அளித்த நேர்காணலை வாசிக்க: செப்டம்பர், 2005 இதழ்.

© TamilOnline.com