ஒட்பம் என்பதன் நுட்பம்
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. இவற்றில் மஹாபாரத சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் வடமொழியில் குணாக்ஷர நியாயம் என்றொன்று இருப்பதாகச் சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுக்கிறார். கிட்டத்தட்ட அவர் நடையில் சொல்வதானால், 'இப்போ... இந்த பீச்சுக்குப் போறோம். கரை கிட்டக்க சங்குப் பூச்சிகள் நகந்துண்டே போகும்போது போன எடத்துல ரெண்டு கோடு விழும். அது ஏதோ அதுனோட போக்குல சுத்திண்டே போகும்போது, விழற கோடு, தற்செயலா 'அ' அப்படிங்கற எழுத்து மாதிரி விழுந்துடறதுன்னு வச்சிப்போம். அது 'அ'தான். அத யாராலயாவது இல்லேன்னு சொல்ல முடியுமோ? பாத்தா 'அ'ன்னு படிக்க முடியறதே! ஆனா அதுக்காக அந்த சங்குப் பூச்சி காலேஜுக்கெல்லாம் போயி, எம்மே படிச்சிருக்குன்னு சொல்ல முடியுமோ? இதுக்குதான் குணாக்ஷர நியாயம்னு பேரு.....'

கேட்டுக் கொண்டிருக்கும்போதே என் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது. 'அடடா! இங்க இருக்குடா நம்ம ஏரலெழுத்து' என்று உடனே திருக்குறளை எடுத்தேன். குறளில் ஒரு பகுதி புரிந்துவிட்டது. இரண்டு முக்கியமான சாவிச் சொற்களுக்குப் பொருளை வரையறை செய்துகொள்ள முடியவில்லை. 'ஒட்பம்', 'அறிவுடமை' என்ற இரண்டு சொற்கள் 'கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்' என்ற குறளில் வெளிப்பட்டிருப்பதால், வள்ளுவருடைய நோக்கிலிருந்து இந்தச் சொற்களின் பொருள் வரையறையைத் திட்பமாக அறிந்து கொண்டால்தான், ஏன் கல்லாதாருடைய 'ஒட்பம்' கழிய நன்று--ஆயினும் கொள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'ஒட்பம்' என்பதற்குப் பரிமேலழகர் 'அறிவுடைமை' என்றும், இதே பாடலின் உரையில் மணக்குடவர் 'ஒண்மை எனினும், அறிவு எனினும் அமையும், இது கல்லாதார் ஒள்ளியார் ஆயினும் மதிக்கப்படார் என்றது' என்றும் பொருள் செய்திருப்பதால், அறிவுடைமையும் ஒட்பமும் ஒருபொருட் பன்மொழி எனப்படும் சினானிம் வகைதானோ என்று தோன்றத்தான் செய்கிறது. ஆனால், இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பொருள் வரையறை செய்கிறார் வள்ளுவர், 425வது குறளில்.

உலகந் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு


என்று. இப்படி, ஒவ்வொரு முறை பேசும்போதும், ஒட்பம், அறிவு என்ற இருநிலைகளைத் தனித்தனியாகவும் சில சமயங்களில் எதிரெதிரான தன்மை உடையனவாகவும் பேசுவதையும்; ஒவ்வொரு முறையும் ஒட்பம் என்ற சொல்லை, அறிவுடைமை என்ற நிலைக்கு ஒருபடி கீழாகவே வைத்துப் பேசப்படுவதை கவனிக்கும் போதும், அறிவுடைமைக்கும் ஒட்பத்துக்கும் ஏதோ ஒரு சிறிதளவாவது வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது; அவற்றை ஒருபொருட் பன்மொழியாக வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்தக் குறளுக்கு, பரிமேலழகரின் உரை, கொஞ்சம் தடுமாறத்தான் வைக்கிறது. "உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம். அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையானதாவது அறிவாம்" என்ற உரையில், இந்தப் பாவுக்குள் நட்பு எங்கிருந்து வந்தது என்றொரு கேள்வி எழுந்தாலும், நட்பைப் பற்றிப் பேசுவதுதான் இந்தக் குறளின் அடிநாதம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதற்குள் இப்போது போகவேண்டாம். ஆனால், இவரும், 'ஒட்பம்', 'அறிவுடைமை' இரண்டுக்கும் வேற்றுமை இல்லாமல்தான் பொருள் சொல்லியிருப்பதைப்போல் படுகிறது. ஆனால், முன்னர் சொன்னதுபோல், ஒவ்வோரிடத்திலும், 'ஒட்பம்', 'அறிவுடைமைக்கு' ஒரு மாற்றுக் குறைவானது என்ற தொனியில்தான் வள்ளுவர், இந்தச் சொற்கள் வரும் அனைத்துக் குறட்பாக்களிலும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தொனிப்பொருளால் தெளிவாகிறது.

நான் பெரிதும் பரிமேலழகரைப் பின்பற்றுபவனாயினும் அங்கே தடுமாற்றம் ஏற்படும்போதெல்லாம் மணக்குடவரை நாடத் தயங்குவதில்லை. இந்தக் குறளுக்கு மணக்குடவர் செய்திருக்கும் உரை பொருத்தமாகப் படுகிறது. "ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது; அதனை நீர்ப்பூப் போல மலர்தலும் குவிதலும் இன்றி ஒருதன்மையாகச் செலுத்துவது அறிவு." இது மணக்குடவர் உரை. இதற்குள் உள்ள நீர்ப்பூ, மலர்தல், குவிதல், இவையிரண்டும் ஆகாமல் ஒரே தன்மையாக எப்போதும் விளங்குதல் எல்லாம் இப்போதைக்கு நமக்குத் தேவையற்றவை. ஒட்பத்துக்கும் அறிவுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்ன என்றுதான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறோம். 'ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது' என்ற விளக்கம் நாம் தேடிக்கொண்டிருப்பதற்கு நெருங்கி வருகிறது.

'ஒளிபொருந்திய அறிவு, wisdom என்றெல்லாம் பலர் பலவிதமான பொருள்களைச் சொல்லியிருந்தாலும், 'உலகந் தழீஇயது ஒட்பம்' (உலகத்தைத் தழுவியது ஒட்பம்) என்ற சொற்றொடருக்கு, 'உலகத்தோடு பொருந்தியது' என்ற உரையே நேரடியானதாக இருக்கிறது என்பது என் கருத்து.

அப்படியானால், 'கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்' என்ற குறளுக்கு என்ன பொருளைக் கொள்வது, இது, 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற குறளுக்கு முரண்படாமல் நிற்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி எழுகிறது. ஏரல் எழுத்து இன்னமும் முழுமையாக விளக்கம் பெறாமல் நிற்கிறது. அதையும் கவனத்திலிருந்து தவறவிடவில்லை.

ஒட்பம் என்பதற்குச் சொல்லப்படும் 'ஒளிபொருந்திய அறிவு' என்பது என்னவோ அன்னியமானதும் பிடிபடாததுமான ஒரு 'ஒளிவட்டம்' சுழன்று கொண்டிருக்கும் சொல் என்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது. சாதாரணர்களுக்கு ஏற்படாத ஏதோ ஒரு பெரியநிலை போலும் என்று தோன்ற வைக்கிறது. 'ஒளி பொருந்திய அறிவு' என்று சொன்னால், அது கட்டாயம் 'அறிவு' என்பதற்கு ஒருபடி கூடுதலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், வள்ளுவர் இந்த இரண்டு சொற்களையும் ஒன்றாகப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் இந்த 'ஒளிபொருந்திய அறிவு' என்று சொல்லப்படுவததை, 'அறிவு' என்ற சொல்லுக்கு, ஒருபடி கீழ்ப்பட்ட பொருளுள்ள சொல்லாகத்தான் பயன்படுத்துகிறார். அதுவும் இங்கே, 'கல்லாதான் ஒட்பம்' என்று ஒரு க்வாலிஃபையர் வேறு போட்டிருக்கிறார். கற்றவர்களுக்கு உள்ளது அறிவு என்றால், கல்லாதவர்களுக்கு 'ஒளிபொருந்திய அறிவு' எங்கிருந்து வாய்த்தது! குழப்புகிறதே! இந்த ஒட்பத்துக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்த பிறகல்லவா, 'கொள்ளார் அறிவுடையார்' என்பது என்ன என்பது பிடிபடும்? இங்கே 'ஒட்பமே' முடியைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது.

இப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம் நான் இவற்றை வாழ்க்கையோடு ஒட்டவைத்துப் பார்ப்பது வழக்கம். எல்லாக் குறட்பாக்களும் சரி; மற்ற எழுத்துகளும் கவிதைகளும் சரி; வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவையே என்றாலும், பொருள் புரியாத சமயங்களில் இந்த உத்தி, கைகொடுப்பது என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

இப்போது, புத்தகங்க விளக்கங்களைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்போம். தெருவில் போகும் காய்க்காரி, கூடைக்காரியிலிருந்தும் தொடங்கலாம். நான் ஒரு பழுதுபார்க்கும் வினைஞனையும் (mechanic) பொறியிலாளரையும் (engineer) ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்கிறேன். அடிப்படையில் இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். ஒருவர் வடிவமைக்கிறார்; இன்னொருவர் அதன் பயன்பாட்டில் ஏற்படும் பழுதை நீக்குகிறார். வடிவமைத்தவருக்கும் பழுது நீக்கத் தெரியும். பழுது நீக்குபவருக்கு வடிவமைக்கத் தெரிந்துதான் இருக்க வேண்டுமென்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், பழுதுநீக்குபவருக்கு, என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். வடிவமைத்தவருக்கோ ஏன் செய்யவேண்டும் என்பது தெரியும். வழக்கம்போல் ஆங்கிலத்தில் எளிமைப்படுத்துகிறேன். A mechanic knows what has to be done to repair any particular appliance or gadget. An Engineer knows, why it has to be done 'in that particular way' in order that the fault is rectified.

சரி, இப்போது அடுத்த படியை எடுத்து வைப்போம். பெரிய தொழிற்சாலைகளில் எப்போதும், மையப் பகுதிகளும் உப பகுதிகளும் உண்டு. ஒரு குறிப்பிட்ட இயந்திரம் இயங்காவிட்டால், தொழிற்சாலையே நின்றுபோய்விடும் படியான வெகுமுக்கியமான பகுதிகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒரு தொழிற்சாலை இயங்க நீராவியின் சக்தி தேவைப்படுகிறது என்றால், அங்கே கொதிகலன் (Boiler) முதன்மையான இடத்தைப் பெறுகிறது. ஒரு பாய்லரில் மிகமிகச் சிறியதும் அற்பமானதுமான கேஜ் க்ளாஸ் வெடித்துவிட்டால், அதன் காரணமாக பாய்லரையே இயக்க முடியாது; பாய்லர் இயங்க முடியாததால் தொழிற்சாலையே முடங்கிவிடும். அந்தச் சமயத்தில் தொழிற்சாலையில் கேஜ் க்ளாஸ் உடனடியாகக் கிடைக்கும் நிலையில் இல்லாவிட்டால், அது வந்து சேரும் வரையில் தொழிற்சாலை நின்று கிடக்க வேண்டியதுதான்.

இதுபோலவே, மிக முக்கியமான இயந்திரங்களும் தொழிற்சாலைகளில் உள்ளன. சிலவகையான தொழிற்சாலைகளில், இப்படிப்பட்ட இயந்திரங்களைக் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும்தான் கையாள்வார்கள். நாள் முழுவதும் அதன் கூடவே நிற்பதால், அதன் ஓசை சற்றே மாறினாலும் இந்த ஆபரேட்டருக்கு, 'இயந்திரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது' என்பது தெரிந்துவிடும். ஏனெனில் அவர் அந்த இயந்திரத்தோடேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் மணக்குடவர் சொல்லும் வகையில், 'உலகத்தோடு பொருந்திய அறிவை' உடையவராக இருக்கிறார்.

சிந்திக்கச் சற்றே நேரம் கொடுக்கிறேன். இந்தத் தொழிற்சாலை உவமையை இன்னும் சற்றே விரித்துப் பாருங்கள். அடுத்த இதழில் நம் குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வோம்.

(தொடரும்)

ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com