சங்கடம்.... இறுமாப்பல்ல!
அன்புள்ள சிநேகிதியே

எனக்கு இரண்டு பிரச்சனைகள். எதை முதலில் எழுதுவதென்று தெரியவில்லை. அப்புறம் நாள் ஆக, ஆக எது மனதிற்கு ஒரு பயம், சங்கடம் கொடுக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். என் மாமியாரின் வருகை. அவர் ஒரு பப்ளிக் ஃபிகர் எங்கள் ஊரில். எதைச் செய்வதற்கும் ஆட்கள் உண்டு. மாமனார் மிகவும் சாது. எதையும் கண்டுகொள்ள மாட்டார். வேலையை முன்னிட்டு அடிக்கடி வெளியூர் போய்விடுவார். மாமியாருக்கு பயந்துகொண்டு அப்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சிலர் மறைவில் பேசிக் கொண்டதை நான் ஒருமுறை அங்கே சென்றபோது கேட்டிருக்கிறேன். அம்மாவின் நிழலிலேயே இரண்டு பிள்ளைகளும், பெண்ணும் வளர்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையிலேயே என் கணவர் தன் அம்மாவை எதிர்த்துச் செய்த ஒரே காரியம் என்னைக் கல்லூரியிலேயே காதலித்தது. இங்கே M.S. செய்ய வந்தபோது என்னைத் திருமணம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார் என் கணவர். நான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற அதிர்ச்சியைவிட, ஐந்து வருடம் தன்னிடமே தன் மகன் காதலை மறைத்து வைத்துவிட்டான் என்ற கோபம்தான் அதிகம். சமூகத்தில் தன்னைத் தலைகுனிய வைத்துவிட்டது போன்ற அவமானம். எங்கள் வீட்டில் இதெல்லாம் சகஜம். என் அப்பா, அப்பா சம்மதித்து, ஆனால் இரு குடும்பத்தினரும் அருகில் இல்லாமல், இங்கேயே சிம்பிளாகத் திருமணம் செய்து கொண்டோம். இவருக்கு அம்மாவுடன் பேச்சு வார்த்தை இல்லை.

எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான். அதற்கும் மாமியார் மசியவில்லை. அப்பா, தங்கை, தம்பி பரவாயில்லை. அம்மாவின் சுபாவம் தெரிந்ததுதானே என்பது போலத்தான் சகஜமாக ஈ-மெயில்/ஃபோனில் செய்தி பரிமாறிக்கொள்வார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பு என் நாத்தனாரின் கல்யாணம் நடந்தது. அப்போதுதான் புது வேலையில் சேர்ந்திருந்தேன். ஒரே ஒருவாரம்தான் விடுப்பு. கையில் சின்னக்குழந்தை. இருந்தாலும் சமாதானம் செய்துகொள்ள இதுதான் வாய்ப்பு என்று நெட்டி, முட்டி கிளம்பிப் போனோம். 3 நாள் சென்னையில், 2 நாள் அவர்கள் ஊரில். பிடி கொடுக்காமல்தான் பேசினார். நான் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டேன் என்று எனக்கும் ரோஷம் வந்தது. அதிகம் பட்டுக் கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டேன். என் கணவரிடம் கோபத்தைக் கொட்டித் தீர்த்தேன். 2 வருடமாக அம்மாவுடன் நான் நாள், கிழமைகளில் பேசுவதைத் தவிர்த்தேன். அவ்வப்போது என்னைப்பற்றி அவர் விசாரிப்பதாக என் கணவர் சொல்வார்.

என் நாத்தனார் திருமணம் முடிந்து மே மாதத்தில் இங்கு வந்துவிட்டாள். இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். என் மாமியார் பிரசவத்துக்கு வரப்போவதாகக் கேள்விப்பட்டேன். போனவாரம் என் கணவர் திடீரென்று "அம்மா இங்கே நம்முடன் 2 மாதம் இருக்க வரப் போவதாகச் சொன்னார். நானும் 'சரி' என்றேன். ஏப்ரல், மேயில் தயாராக இரு" என்றார். முதலில் குழப்பமாக இருந்தது. அந்தச் சமயம் என் நாத்தனார் டெலிவரி சமயம். அப்புறம்தான் தெரிந்தது, அவளுடைய மாமனார், மாமியாரும் வரப்போவதாகத் திட்டம் என்று. அதனால் என் மாமியார் தன் பயணத் திட்டத்தை மாற்ற கௌரவம் இடம் கொடுக்காததால், எங்களுடன் வந்து இருக்கத் தீர்மானித்து விட்டார். அவருக்கு பிறருடன் அட்ஜஸ்ட் செய்துகொள்வது கஷ்டம். என் நாத்தனார் என்னிடம் மனம் திறந்து பேசினாள். மாமியாரை வரக்கூடாது என்று சொல்லுமளவுக்கு நான் கொடுமைக்காரி இல்லை. என் கணவரோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அம்மாவுடன் பழைய பாசத்தைக் கொண்டுவர நினைக்கிறார். எனக்கோ அவர்கள் வருவதை நினைத்தாலே நடுங்குகிறது. சுபாவம், பழக்க வழக்கங்கள் எல்லாமே - நாங்கள் வேறுவிதம். அவர் மடி, ஆசாரம் பார்க்கும் சமூகம். கொஞ்சம் வெடுக்கென்று பேசுவார். அதிகம் கௌரவம் பார்ப்பார். மரியாதை அதிகம் எதிர்பார்ப்பார். பண விஷயத்தில் ரொம்ப சாமர்த்தியம். யாரும் அவரை ஏமாற்ற முடியாது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். என் கணவருக்காகவாவது அவரை நன்றாக கவனித்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன். அசைவ உணவு வேண்டுமானால் சமைக்காமல் இருக்கலாம். மற்றபடி அவருடைய குணாதிசயங்களுக்கு எப்படி ஈடு கொடுத்து உறவை சுமுகப்படுத்துவது என்று தெரியவில்லை.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே


சில விஷயங்களை எதிர்பார்த்துவிட்டால், சில விஷயங்களைப் புரிந்துகொண்டு விட்டால் உறவுகளைக் காப்பாற்றிக் கொள்வதில் அவ்வளவு பயமோ, கஷ்டமோ இருக்காது. நான் கீழே கூறியுள்ளது போல யோசித்துப் பாருங்கள்.

* வருவது மாமியார். வயதில் பெரியவர். கணவரைப் பெற்று வளர்த்து இந்த நிலைமைக்குக் கொண்டு வர உழைத்தவர். கொஞ்சம் ஸ்பெஷல் ஆக ட்ரீட் செய்வதில் தவறில்லை. அதை நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள்.

* அவர் உங்கள் இடத்துக்கு வருகிறார். உங்களை எதிர்பார்த்துதான் இரண்டு மாதம் இருக்க வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும் சில நாட்கள் தன் மகன் மூலம்தான் தனக்கு வேண்டியதைக் கேட்பார். எவ்வளவுநாள் அப்படி இருக்க முடியும்? நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், உங்களிடம் தோழமையை ஆரம்பிப்பார். இல்லாவிட்டால் மன நெருடல் தொடரும்.

* உங்களுக்கு இருக்கும் state of discomfort அவருக்கும் இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகமாகவே. அவர்தான் உங்களிடம் பாராமுகமாக இருந்திருக்கிறார். மனதில் சிறிது குற்றவுணர்ச்சி இல்லாமல் போகாது. நீங்கள் நினைக்கும் அளவுக்கு தன்னுடைய அதிகாரத்தையோ, கோபத்தையோ இப்போதும் காட்டுவார் என்று சொல்ல முடியாது.

* நீங்கள் வேலைக்குப் போவதால் அவருடன் ஒருநாளில் இருக்கப்போவது சில மணி நேரம் மட்டுமே.

* குழந்தை ஒருவன் இருக்கிறான் உங்களுக்குப் பாலமாக.

* நீங்கள் உங்கள் மாமியாரை பப்ளிக் ஃபிகர் என்று குறிப்பிட்டீர்கள். அரசியலா, சமூக சேவையா, கல்விப் பணியா, கோவில் பணியா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதிகாரத் தொனியில் அந்தப் பதவியிலிருந்து பேசுபவர்களுக்குள்ளும் ஒரு குழந்தைத்தனமும், தங்களைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும். நீ்ங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், அந்தக் குழந்தைத்தனத்தையும் ஏக்கத்தையும் அடையாளம் கண்டுகொண்டால், உங்கள் உறவு நன்றாக பலம் கூடும்.

* உங்களைப்பற்றி உங்கள் மாமியார் இழிவாகப் பேசியிருக்கலாம். அது ஒரு தாயின் ஏமாற்றம், கோபமாக உங்களைக் குறி பார்த்திருக்கிறது. எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே பார்க்கும்போது, வீட்டு மனிதர்களைத் தவிர எல்லோருமே அந்நியர்கள்தான். அன்னியோன்னியம் காட்ட முடிவதில்லை. பழகப் பழக பழக்கங்கள் மாறும். அந்தத் தாயின் கோணம், குணம் வழியாக ஒருமுறை உங்களைப் பார்த்து விடுங்கள். அப்புறம், அவர் உங்களை எப்படி நடத்தினாலும் உங்களைப் பாதிக்காது

* கணவர் வீட்டைச் சார்ந்த மனிதர்கள் இரண்டு மாதம் தங்க ஏற்பாடு செய்யும்போது, மனதில் சங்கட உணர்ச்சி நேரத்தான் செய்யும். இந்தச் சங்கட உணர்ச்சிதான், உங்களை ஒரு மனிதராக இனம் கண்டுகொள்ள உதவுகி்றது. "மாமியார்?! - நான் போனபோது சரியாக நடத்தவில்லை. இப்போது இது என் வீடு. இதன் சட்டதிட்டங்களுக்கு அடங்கித்தானே போக வேண்டும். வந்து விட்டுப் போகட்டும்" என்ற இறுமாப்பில் நீங்கள் இருந்தால், இந்தப் பகுதிக்கு நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள். Hats off to you! And, good luck.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com