பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம்
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில் சிறப்பான பங்காற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'மெம்பர் ஆஃப் த ஆர்டர் ஆஃப் த பிரிட்டிஷ் எம்பயர்' (Member of the order of the British Empire) என்னும் இவ்விருது, இந்திய அரசு வழங்கும் 'பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரானது.

கீதா பிரிட்டனில் உள்ள 'தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த் சர்வீஸ்' என்ற மருத்துவப் பிரிவின் தலைவராகப் பணிபுரிகிறார். இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென்னிந்தியப் பெண் கீதாதான். காரைக்குடியில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த கீதா சென்னையில் தமிழ் மீடியத்தில் படித்தவர். தந்தையும் டாக்டர். மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். திருமணத்திற்குப் பின் லண்டன் சென்றவர், அங்குள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் (Royal Free Hospital) மகப்பேறு மற்றும் மகளிர்நலத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

மிகுந்த தமிழார்வம் கொண்ட இவர், பல்வேறு அமைப்புகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஐரோப்பிய வானொலிகளில் மகளிர் நலம் குறித்து உரையாற்றியிருக்கிறார். கணவர் நாகசுப்ரமணியமும் லண்டனில் புகழ்பெற்ற மருத்துவரே.

பா.சு.ரமணன்

© TamilOnline.com