ஹரிகதை வாணி: சிந்துஜா
ஹரிகதையின் பாரம்பரிய வடிவத்தை அப்படியே அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர் சிந்துஜா. இவருக்கு இசையார்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது. பள்ளிக் கல்வியோடு இசையையும் பயின்றார். தாய் உஷாவுக்கும் இசையார்வம் அதிகம்தான். சிறுவயதிலேயே பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் உபன்யாசத்தைத் தொடர்ந்து கேட்டு, அவர் கூறும் ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து ஆசி பெற்றவர். அந்த ஆர்வம் சிந்துஜாவுக்கும் இயல்பானது. இவரது ஹரிகதை அரங்கேற்றம் 12வது வயதில் நிகழ்ந்தது. “சின்ன வயசிலேயே அம்மாவோடு கச்சேரிகளுக்கும், கதா காலட்சேபங்களுக்கும் போவேன். கதையும், இசையும் கலந்த அந்தப் பாணி, எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கதாகாலட்சேபம் செய்யும் ஆசை ஏற்பட்டது. பன்னிரண்டு வயதில் முதல் முறையாக சங்கீத உபன்யாசம் செய்தேன்” என்கிறார் சிந்துஜா. 'விநாயக பிரபாவம்' என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உபன்யாசத்திற்கு நல்ல வரவேற்பு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். படித்துக் கொண்டே கச்சேரிகளும் செய்தார். காஞ்சி மகா பெரியவர் மீதான 'மஹா பெரியவா சத்சரித்திர உபன்யாசம்' இவருக்குப் புகழ்தேடிக் கொடுத்தது. “மகாபெரியவா குறித்து கணேச சர்மா நடத்தற சொற்பொழிவுகளுக்குத் தவறாமல் போவேன். அவர் சொல்லும் விஷயங்களைக் குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். ஒருநாள் அவற்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நாமும் ஏன் ஒரு சங்கீத உபன்யாசமாகச் செய்யக்கூடாது என்று தோன்றியது. சேகரித்த தகவல்களின் இடையிடையே பொருத்தமான கீர்த்தனை, பஜன் இவற்றைக் கோத்து ஹரிகதையாகச் செய்தேன்” என்கிறார். கிட்டத்தட்ட நூறுமேடைகளைக் கண்டுவிட்ட இவரது பெரியவா சத்சரித்திரம், 'தெய்வத்தின் கதை' என்ற பெயரில் குறுந்தகடாக வெளியாகியுள்ளது.

ஆன்மிகம் மட்டுமல்லாது இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் சிந்துஜா. கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதையொட்டி, மாணவர்களுக்கு நடந்த திருக்குறள் போட்டியில் கலந்து கொண்ட இவர், 576 பேர்களுக்கு நடுவே, முதல் பரிசு வென்றார். இதனால் 'திருக்குறள் மாமணி' என்ற பட்டமும், தமிழக அரசின் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயும் கிடைத்தது. 'திருக்குறள் இசைச் செல்வர்', 'கலாரத்னா' உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

விஜய் டி.வியின் பக்தித் திருவிழா, சங்கரா டி.வியின் பக்தி அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இவருடைய உபன்யாசங்கள் ஒளிபரப்பாகின்றன. இவருடைய ஹரிகதைகளில் பல குறுந்தகடுகளாக வெளியாகியுள்ளன. மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் உபன்யாசங்களை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, புழல் போன்ற சிறைச்சாலைகளில் கைதிகளின் மனநிலை மாற்றத்துக்காகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். சுவாமி ஐயப்பனைப் பற்றிய இவரது பக்திச் சொற்பொழிவு மிகப் பிரபலம். கணீரென்ற குரலில், இனிய தமிழ்ப்பாடல்களை, உச்சரிப்பு சுத்தமாய், காதுக்கு இனிமையாகப் பாடி, கருத்தை விளக்கி, கேட்போரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி வரும் சிந்துஜா, மகான்களின் வாழ்க்கை, தெய்வத் திருமணங்கள், நாம சங்கீர்த்தனம், அபங்கம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஹரிகதை செய்து வருகிறார்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com