சி.ஏ. ராணி: பிரேமா
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரேமா. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொல்லியூர் கிராமத்தில் பிறந்தவர். மழை பொய்க்க, பரம்பரைத் தொழிலான விவசாயம் வாட, குடும்பத்துடன் மும்பைக்குச் செல்கிறார் தந்தை ஜெயகுமார். அங்கு ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்தினார். பிரேமா மலாடு செகண்டரி பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். மும்பை பல்கலையில் எம்.காம். பட்டம் பெற்றார். தொடர்ந்து திருமணப் பேச்சு நடைபெற, அக்கவுண்டன்ட் படித்துச் சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கூறி திருமணத்தை மறுத்த பிரேமா, தம்பி தன்ராஜுடன் இணைந்து சி.ஏ.வுக்குப் படித்தார்.

சிறிய வாடகை வீடு. வசதிக் குறைவான சூழல். போதுமான வருமானமின்மை போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும் பிரேமா குறிக்கோளுடன் முயன்று படித்தார். இன்று அகில இந்திய அளவில் சாதனை படைத்திருக்கிறார். 607/800 மதிப்பெண் பெற்றுள்ளார் பிரேமா. இவரது தம்பியும் சி.ஏ.தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் சி.ஏ. தேர்வு எழுதுகின்றனர். அதில் 30% மட்டுமே இறுதித் தேர்வுக்குத் தகுதி பெறுகிறார்கள். இதிலும் சி.ஏ. பட்டதாரிகளாக வெளியே வருவது சுமார் 10 சதவிகிதத்தினர் மட்டுமே. இந்தக் கடினமான தேர்வில், கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தமிழ் மீடியத்தில் படித்து சாதித்திருக்கும் பிரேமா ஒரு சாதனையாளர்தான்.

இவரது சாதனையை மெச்சி, தமிழக முதல்வர் ரூ. 10 லட்சம், மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளனர். தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர். பரிசுகளும், பாராட்டுக்களும் குவிகின்றன பிரேமாவுக்கு. இது குறித்து பிரேமா, “இந்த வெற்றி என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றிக் கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவவேண்டும். சி.ஏ. படிக்கும் பிற மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்கிறார்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com