சாரு ஜெயராமன்
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த சாரு ஜெயராமன் Restaurant Opportunities Centers United (ROC-United) அமைப்பின் இணை-நிறுவனரும் இயக்குனரும் ஆவார். உணவகப் பணியாளர்களின் சம்பளம், பணிச் சூழ்நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 11ம் தேதியின் பின்விளைவாக வேலையிழந்த உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உணவகப் பணியாட்களை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்க உதவியுள்ளார். பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையின் உணவகத் தொழிலாளி ஆய்வு மையத்தின் இயக்குனரும் ஆவார். பணியிடத்தில் நீதி கிடைப்பதற்கான பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ள இவர், பல உணவக நிர்வாகங்கள் பொறுப்போடு நடந்துகொள்ள உதவியதோடு, கூட்டுறவு உணவகங்களையும் தொடங்கியுள்ளார். "முடியாததென்று எதுவும் கிடையாது" என்று உறுதியாகக் கூறும் சாருவைப் பற்றிய கட்டுரை த நியூ யார்க் டைம்ஸில் வெளியானதுண்டு. நியூ யார்க்கின் மிகச் செல்வாக்கான நபர்களில் ஒருவர் இவர் என நியூ யார்க் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. 'Crain's 40 under 40' பட்டியலில் இவர் பெயர் உண்டு. சாரு எழுதிய Behind the Kitchen Door என்ற நூல், உணவகத்துக்குச் செல்லும் ஒவ்வொரும் படித்தாக வேண்டிய ஒன்று என்று கருதுகிறார் எரிக் ஷ்லோஸர். தவிர The New Urban Immigrant Workforce பத்திரிகையின் இணையாசிரியும் ஆவார் இவர். தமது பொதுநல இலக்குகளை அடைய அமெரிக்கக் காங்கிரஸின் கதவுகளையும் தட்ட அஞ்சாத சாரு ஜெயராமன் யேல் சட்டக் கல்லூரி மற்றும் ஹார்வர்டின் கென்னடி அரசியல் பள்ளி ஆகியவற்றில் பயின்றவர். தென்றலுக்காக அவரோடு உரையாடியபோது......

அம்பாள்: நீங்கள் எங்கு பிறந்தீர்கள், வளந்தீர்கள் என்பவை பற்றிச் சொல்ல முடியுமா?
சாரு: என் பெற்றோர்கள் தென்னிந்தியர்கள். என் அப்பா முதலில் இங்கு வந்தார். ரோச்செஸ்டர், நியூ யார்க்கில் ஒன்றரை வருடம் இருந்தார். அதன்பின் அம்மா வந்தார். ஒரு வருடத்தில் நான் பிறந்தேன். எனக்கு 3 வயதாக இருக்கும்போது சான் டியேகோ சென்றனர். பிறகு லாஸ் ஏஞ்சலஸுக்கு மாறினர். லாஸ் ஏஞ்சலஸில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். சட்டப் படிப்பை யேல் பல்கலையிலும், பொதுநலக் கொள்கை (public policy) முதுகலைப் படிப்பை ஹார்வேர்டிலும் படித்தேன்.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இடையே வேலை செய்யும் பொருட்டு பின் நியூ யார்க் போனேன். அங்கு இருந்தபோதுதான் 9/11 நடந்தது. அப்போது உலக வர்த்தக மையத்தின் (World Trade Centre) மேல்தளத்தில் இருந்த உணவகம் ஒன்றிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகுதான் ரெஸ்டராண்ட் ஆப்பர்சூனிடி சென்டர் யுனைடட் (Restaurant Oppurtunity Centres-United) அமைப்பை ஆரம்பித்தோம்.

அ: உங்களது 'பெண்களும், இளையோரும் ஒருவரையொருவர் ஆதரிக்கும் அமைப்பு' (Women and Youth supporting each other) பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் பள்ளிப் பருவத்தில் அதைத் தொடங்கினீர்கள், அல்லவா?
சா: இல்லை. கல்லூரிப் பருவத்தில் தொடங்கினேன். கல்லூரி சென்றவுடன் வீடற்ற குடும்பத்தினருடன் வேலை செய்யத் தொடங்கினேன். அவர்களில் பெரும்பாலோர் தனியான தாய்மார்களும் (single moms) அவர்களின் குழந்தைகளும். பெரும்பாலோர் மிக இளவயதிலேயே கர்ப்பமடைந்து, அதனால் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போனவர்கள். அதனால் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டும் திட்டம் ஒன்றைத் தொடங்கினேன். ஏனென்றால் 7வது 8வது படிக்கும்போதுதான் தமக்கு வேண்டியதைத் தெரிவு செய்யத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு சுயமரியாதை, கருத்தடை வழிமுறைகள், தன்னையறிதல் இவற்றைக் கற்பிக்கும் விதமாக ஒரு பாடத்திட்டம் வகுத்தோம். இதை UCLA யில் படிக்கும்போது தொடங்கினோம். பிறகு அதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றோம். மேற்படிப்பு நாட்களில் இதை ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடையச் செய்தோம். நிறையப் பணியாட்களை அமர்த்தி இத்திட்டத்தை ஒருங்கிணைத்துப் பல கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றோம். மேற்படிப்பை முடித்தவுடன் மற்ற தலைவர்களிடம் இப்பொறுப்பை விட்டுவிட்டேன்.

அ: நீங்கள் அதிபர் கிளின்டனிடமிருந்து பரிசு பெற்றீர்கள் அல்லவா? உங்கள் 19வது வயதில் முதல் மூவரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையாகவே பெரிய விஷயம்தான். அந்த வயதில் எப்படி உணர்ந்தீர்கள்?
சா: ஆமாம். அது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதிபரிடமிருந்து பரிசு பெறும் நோக்கத்தில் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. நான் மிகுந்த தன்னார்வத்துடன் வேலை செய்தேன். பரிசு மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், அதை என் வாழ்வின் பெரிய சாதனையாக எண்ணவில்லை.

அ: நல்லது. மிகக் கடினமாக உழைக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்ககாக, குறிப்பாகப் பெண்களுக்காக, வேலை செய்கிறீர்கள். இதற்கான உந்துதல் எங்கிருந்து வருகிறது? ஏதாவது முக்கியக் காரணம் உண்டா?
சா: பொருளாதார ஏற்றத்தாழ்வு அமெரிக்காவின் அடிப்படைப் பிரச்சனை. வேற்று இனத்தவரும், குடியுரிமை பெறாதவர்களும் சந்திக்கும் அநீதி, தாழ்த்தப்படுதல் போன்றவற்றுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. ஆனால் பொருளாதார சமத்துவமின்மையே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது என் கணிப்பு.

இங்கு அரசாங்கம், சட்டம் ஆகியவை பெரிய தொழில் நிறுவனங்களின் பிடியில் உள்ளன. சட்டங்கள் அவர்களுக்குச் சாதகமாகவே உள்ளன. இந்தத் தொழில் நிறுவனங்கள் பெரும்பான்மைத் தொழிலாளிகளின் சம்பளத்தைக் கீழ்நிலையில் வைக்கப் போராடி, வெற்றியும் பெறுகின்றனர். அதனால் எல்லா அமெரிக்கர்களும், அவர்கள் யாராக, எந்த நிலையில், என்ன வேலை செய்பவராக இருந்தாலும், குறைந்த சம்பளத் தொழிலாளிகளிடம் அக்கறை காட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களது பொருளாதார நிலை அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கிறது.

உதாரணமாக, உணவகத் தொழிலில் மிக அதிக அளவில் தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள். 10 மில்லியன் பேர் உள்ளனர். அதாவது, அமெரிக்கத் தொழிலாளிகளில் பத்தில் ஒருவர் உணவகத்தில் வேலை செய்பவர். ஆனால் அமெரிக்காவில் இந்தத் துறையில்தான் சம்பளம் மிகமிகக் குறைவு. டிப்ஸ் பெறாத தொழிலாளிகளின் குறைந்தபட்ச சம்பளம் 2.13 டாலர் என நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது! மிக அதிகத் தொழிலாளிகளைக் கொண்ட இத்துறை மிகக் குறைந்த சம்பளம் தருவது, அத்தொழிலாளிகளை மட்டுமல்லாமல், அமெரிக்கப் பொருளாதாரத்தையே மிகவும் பாதிக்கிறது. இதைத் தாழ்ச்சியை எதிர்த்துப் போரிடுவது மிக முக்கியம் என நான் நினைக்கிறேன்.



அ: நான் வசிக்கும் பகுதியில், பெரும்பான்மையான உணவகத் தொழிலாளிகள், குடியுரிமை பெறாத அன்னியர்களே. குறைந்த சம்பளத்துக்கும் குடியுரிமைக்கும் தொடர்பு உண்டா?
சா: வேறு காரணங்களும் கண்டிப்பாக உள்ளன. சில பகுதிகளில் வேண்டுமானால் வேற்று நாட்டவர்கள் வேலை செய்யலாம். ஆனால் பல பகுதிகளில் யாரெல்லாம் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாரோ, அவர்களையே பணியமர்த்துகின்றனர். உணவகத் துறையின் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாமே அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுத்து சம்பளத்தை விகிதத்தைக் குறைவாக நிர்ணயிக்குமாறு பார்த்துக்கொள்கின்றன. அதில் அந்நியர், ஆப்பிரிக்க அமெரிக்கர், ஏழை வெள்ளையர் என்ற பாகுபாடு இல்லாமல், யாரானாலும் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகின்றனர்.

நியூ யார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில் குடியுரிமை பெறாதவர்களைக் குறைந்தபட்ச சம்பளம்கூடத் தராமல் வேலைக்கு அமர்த்தலாம். ஏன் பல சமயம் குடியுரிமை அதிகாரிகளிடம் (INS) புகார் செய்துவிடுவோம் என மிரட்டிச் சம்பளமே தருவதில்லை. அன்னியர் அதிகம் இல்லாத பகுதிகளில் யாரை வேண்டுமானாலும் குறைந்த சம்பளத்திற்கு நியமிப்பார்கள். தேசிய அளவில் இத்துறையில் வெள்ளை இனத்தவரே அதிகம் வேலை செய்கின்றனர். இவர்கள் மிகவும் வறுமையில் வாடும் தொழிலாளிகள்.

அ: ஓ! இது மிகவும் வருத்தமான விஷயம். ரெஸ்டராண்ட் ஆப்பர்சூனிடி சென்டர்ஸ்-யுனைடட் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இருந்தும் இதைச் செய்வதற்கான பொறி எதுவாக இருந்தது?
சா: சட்டம் படித்துவிட்டு நான் லாங் ஐலண்டில், குடியேறித் தொழிலாளிகளுக்கான அமைப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். என் பெற்றோர்களும் குடிபுகுந்தவர்கள்தாம். அதனால் புலம்பெயர்ந்தவர்களின் பிரச்சனையை உணரமுடிகிறது. என்னுடைய சட்டப்படிப்பு அவர்களது உரிமைக்குப் போராட உதவும் என நினைத்தேன். குடியுரிமை பெறாதவர்கள் சுரண்டப்படுவது வேறொரு பெரிய பிரச்சனையின் அறிகுறிதான், குறைவான சம்பளம்தான் அதற்கு அடிப்படைக் காரணம் எனப் புரிந்து கொண்டேன். அவர்களது உரிமைக்காகப் போராடும்போது, பல இடங்களில் குடியுரிமை உள்ளவர்களும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வது தெரிந்தது. எங்கள் அமைப்பு குடியுரிமை பெறாதவர்களுக்காக மட்டும் போராடியது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

அந்த நேரத்தில்தான் உலக வர்த்தக மையத்தில் இருந்த உணவகங்களில் வேலைசெய்த தொழிலாளிகள் என்னைக் கூப்பிட்டனர். 9/11க்குப் பிறகு வேலையிழந்த அவர்கள், நான் அவர்களுக்காகச் சங்கம் ஆரம்பித்து, அவர்கள் காலூன்ற உதவமுடியுமா எனக் கேட்டனர். எல்லா இனத்தையும் சேர்ந்த பலதரப்பட்ட தொழிலாளிகளிடையே வேலை செய்ய அருமையான வாய்ப்பு அது. குடியுரிமை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் உதவமுடியும் என்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

'விண்டோஸ் ஆஃப் த வேர்ல்ட்' தொழிலாளிகளைச் சந்தித்தேன். அவர்களில் எல்லா தேசத்தவரும், எல்லா இனத்தவரும் இருந்தனர். மாற்றத்துக்காகப் போராடும் எல்லாத் தரப்பினரையும் இணைத்து, ஒரு பலம் வாய்ந்த அமைப்பை உருவாக்க அது ஒரு வாய்ப்பாக இருந்தது.

அ: உங்கள் கனவு நிறைவேறி ஒரு லட்சிய உலகம் உருவாகிவிட்டதாக வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும்?
சா: நான் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறேன். ஏனென்றால் இங்கு நடப்பதுதான் உலகம் முழுக்க நடக்கிறது. என் லட்சிய உலகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இருக்கும் அதே பலம் சாதாரண மக்களுக்கும் இருக்கும். அவர்கள் வார்த்தைக்கும் அதே மதிப்பு இருக்கும். ஒருவரது இனம், பாலினம், தேசம், குடியுரிமைத் தகுதி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குச் சமூகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் நிறுவனங்கள் தேச எல்லைகளைக் கடந்து செல்வது சுலபமாக இருப்பதுபோல் ஏனையவர்களுக்கும் எல்லைகளைக் கடப்பது சுலபமாக இருக்கும். எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும். இதுதான் என் கனவு உலகம். இங்கு வரும் மாற்றம், உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தொடக்கமாக அமையும்.

அ: உணவகத் தொழிலைப் பற்றி மறுபடியும் பேசுவோம். உணவக உரிமையாளர்களும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் நியாயமான சம்பளம் கொடுத்து அவர்கள் லாபம் பெற முடியுமா? வெற்றிகரமாகத் தொழில் நடத்த முடியுமா?
சா: தற்சமயம் நாங்கள் பொறுப்புணர்வோடு செயல்படும் 100 உணவக உரிமையாளர்களுடன் இணைந்து செயலாற்றுகிறோம். இதில் புகழ்பெற்ற சமையற் கலைஞர்கள், இனம்சார் (Ethinic) உணவகங்கள், கணவன்-மனைவி (mom and pop) நடத்தும் உணவகங்கள் என எல்லாம் அடக்கம். இவர்கள் நியாயமான சம்பளமும், நல்ல பணிச்சூழலும் தரவேண்டும் என நம்புவர்கள். அதைக் கடைப்பிடிப்பவர்கள். நாங்கள் ஒரு உணவகத்துறை வட்டமேஜையை (roundtable) உருவாக்கியுள்ளோம்.

சரியான வழியில் தொழில் நடத்த விரும்பும் உணவக உரிமையாளகள் இதில் பங்கேற்கலாம். நியாயமான சம்பளம், சம்பளத்துடன் கூடிய நோய்க்கால விடுப்பு ஆகியவை வழங்கிய பின் லாபகரமாகத் தொழில் நடத்துவது எப்படி என்பதை அந்த உரிமையாளர்களிடமிருந்தும், எங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமிருந்து நேரடியாக அவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

அ: கிரேட்! இந்த மாதிரி விஷயங்களைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதற்கான பட்டியல் வெளியிட்டுள்ளீர்களா?
சா: ஆமாம். எங்கள் 'National Diners Guide' கையேட்டில் மூன்று அடிப்படை விஷயங்களைக் கூறியுள்ளோம். அதில் முதலாவது சம்பளம். அன்பளிப்பு பெறும் தொழிலாளிக்குக் (tipped worker) குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 5 டாலர் எனவும், டிப்ஸ் பெறாத தொழிலாளிக்கு மணிக்கு 9 டாலர் எனவும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, நோய்க்கால விடுப்பு. நோய்வாய்ப் பட்டபோது சம்பளதோடு கூடிய விடுப்பு வழங்கப்படாவிட்டால், அவர்கள் நோயுற்றபோதும் வேலை செய்ய நேரிடுகிறது. அதனால் தொழிலாளி, வாடிக்கையாளர் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

மூன்றாவதாக, பணியுயர்வுக்கான வாய்ப்பு. பாத்திரம் கழுவுபவர், சமையல்காரர் போன்றவர் என எந்த வேலை செய்பவராக இருந்தாலும், அதிலேயே தேங்கிவிடுகிறார். அதிகச் சம்பளம் பெறும் வெய்ட்டர், பார் டெண்டர் ஆக முடிவதில்லை. அவர்கள் முன்னேறப் பயிற்சியும், வாய்ப்பும் உரிமையாளர்கள் வழங்க வேண்டும். அல்லது எங்களது பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்ப வேண்டும். இது மிக அவசியம்.

இந்த மூன்று விஷயங்களிலும் மாற்றம் மிக அவசியம் என நினைக்கிறோம்.

அ: சக்திவாய்ந்த, பெரிய உணவகத் தொடர்கள் (Restaurant chains) அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுத்துச் சம்பளத்தை குறைவாக வைத்திருப்பதாகக் கூறினீர்கள். அவர்களை எதிர்கொள்வது டேவிட்-கோலையத் யுத்தத்தைப் போன்றதல்லவா? இதில் வெற்றி, தோல்விகளைச் சந்தித்திருப்பீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.
சா: ஆமாம். நாங்கள் பெரிய சங்கிலி உணவகங்களுக்கு எதிராக 13 பரப்புரைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இது இடர்ப்பாடு மிக்கதுதான். அவர்கள் என்மீது வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்கள், தாக்கியிருக்கிறார்கள், ஊடகங்களில் என்னைப் பற்றி தவறாகப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை.

இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் பெரிய சவால். உணவகத் தொடர்களை எப்படியாவது வழி திருப்ப வேண்டும் என்பதுதான் அக்கறை. தொழிலாளியின் வேலைக்கும் பாதிப்பு வரக்கூடாது. ஆனால் இதுவரையில் வெற்றியைத்தான் சந்தித்திருக்கிறோம். இனியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உண்டு.



அ: பெரிய அளவிலான மாற்றங்கள் எளிதாகவோ, உடனடியாகவோ நடப்பதில்லை. சின்னச் சின்ன வெற்றிகள்தான் பெரிய வெற்றிக்கு வழி வகுக்கின்றன. அதனால் உங்களது உடனடி இலக்கு என்ன?
சா: உடனடி இலக்கு என்றால் டிப்ஸ் பெறாத தொழிலாளிகளின் குறைந்தபட்ச ஊதியத்தை 5 டாலர் என்றாவது உயர்த்துவது, நோய்க்கால விடுப்பு, பணி உயர வாய்ப்பு இவைதாம். .

அ: உணவகங்களில் மாற்றம் வரச் செய்வது கடினம்தான். ஆனால் அரசின் கொள்கை மற்றும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரச் செய்வது அதைவிடக் கடினமானது அல்லவா?
சா: கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதிலும் வெற்றி பெற்றுள்ளோம். நியூ யார்க் மாகாணத்தில் டிப்ஸ் பெறும் தொழிலாளிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மூன்று டாலரிலிருந்து ஐந்தாக உயர்த்தச் செய்துள்ளோம். ஃபிலடெல்ஃபியாவில் தொழிலாளியின் டிப்ஸிலிருந்து கடனட்டைக் கட்டணம் (credit card processing fee) கழிப்பது குற்றம் எனச் சட்டம் கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

தற்சமயம் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சி அவைத் தலைவர்கள் இவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். போன வருடம் குறைந்தபட்ச ஊதிய மசோதா காங்கிரஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் டிப்ஸ் பெறும் உணவகத் தொழிலாளியின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய மசோதாவில் உணவகத் தொழிலாளியும் சேர்க்கப்படுவது கடந்த 20 வருடங்களில் இதுவே முதல்முறை. இந்த மசோதாவைச் சட்டமாக்கச் செய்வதுதான் தற்போதைய பெரிய சவால். அதற்காகவே புத்தகம் எழுதியுள்ளேன். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நிறையப் படங்களும் வருகின்றன. டேனி குளோவர் (Danny Glover) நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. டைனர்ஸ் கைடு (Diners Guide), புத்தகம், சினிமா இவற்றின் மூலம் உணவக வாடிக்கையாளர்களை ஒன்று திரட்டுவது எங்கள் நோக்கம். அதன்மூலம் மாறுதல் வரும் என நம்புகிறோம்.

அ: நீங்கள் உணவகத் தொழிலாளிகள் உரிமைக்காகப் போராடலாம். ஆனால் அவர்களும் தங்களுக்காகப் போராட வேண்டும் அல்லவா?
சா: அடிப்படையில் அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் தொழிலாளிகளை ஒன்றுதிரட்டுகிறோம். அவர்கள் எங்களுடன் சேர்ந்து, தத்தமது பணியிடங்களில் மாற்றம் கொண்டுவரப் போராடுகிறார்கள். அப்படித்தான் இந்தப் போராட்டங்களில் வெற்றி கிடைத்துள்ளன. எங்கள் அமைப்பில் சுமார் 50 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் முன்னாள் உணவகத் தொழிலாளிகள். அவர்களுக்கு நாங்கள் தலைமைப் பண்புகளில் பயிற்சி அளித்துள்ளோம். நாங்கள் வகுத்துள்ள கொள்கை, சட்டம் தொடர்பான எல்லா வேலைகளையும் அவர்களே செய்துள்ளனர். நாங்கள் அவர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள், நகர அலுவலர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசப் பயிற்சி அளிக்கிறோம். ஊடகங்களில் பேசவும் பயிற்சி அளிக்கிறோம். இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் முன்னாள் உணவகத் தொழிலாளிகளே உள்ளனர். அத்துறை சாராத சிலரில் நானும் ஒருத்தி.

அ: சரி. உங்கள் புத்தகத்தைப் பற்றி சொல்லுங்கள். அது எப்படி இந்தப் பெரிய பிரச்சனையை தீர்க்க உதவும் என நினைக்கிறீர்கள்?
சா: 'Behind The Kitchen Door' என்ற என் நூலில் நிறைய புள்ளிவிவரங்களும், அமெரிக்காவின் பல பாகங்களிலும் உள்ள உணவகத் தொழிலாளிகள், உரிமையாளர்கள் இவர்களது கதைகளும் உள்ளன. போன பத்து வருடங்களாக இவற்றைத் திரட்டியுள்ளோம். இதற்கு 'Fast Food Nation: The Dark Side of the All American Meal' எனற மிகவும் பிரசித்தி பெற்ற புத்தகத்தை எழுதிய எரிக் ஷ்லோஸர் (Eric Schlosser) முன்னுரை எழுதியுள்ளார். அவர் புத்தகத்தைப் படித்த பலர் விரைவுணவை அடியோடு தவிர்த்து, உள்ளூரிலிருந்து வரும் ஆர்கானிக் மற்றும் ஆரோக்கிய உணவுகளையே உட்கொள்ள முடிவு செய்தனர். எங்களது புத்தகம் மற்றும் சினிமாக்களில் இவை மட்டுமல்லாமல், தொழிலாளிகளை நல்ல முறையில் நடத்தும் உணவகங்களையே ஆதரிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறோம். இவற்றின் மூலம் இத்துறையின் பிரச்சனைகளையும், சரிசெய்யும் வழிமுறைகளையும் மக்களுக்குக் கூறுவது எங்கள் நோக்கம்.

அ: உங்கள் முன்மாதிரி யார்?
சா: (புன்னகைக்கிறார்) இதற்கு நல்ல பதில் சொல்ல வேண்டும் என்றுதான் ஆசை! நிச்சயமாக, என் பெற்றோர்கள் என்று சொல்லலாம். புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் ஒரு பெரிய அடி எடுத்து வைக்கிறார். ஒரு புதிய நாட்டில் குடிபுகுவதென்பது மிகப்பெரிய விஷயம். என் அம்மா எது நீதி, எது அநீதி என்பதைப் பற்றி தெளிவான சிந்தனை உடையவர். அவர் தீவிர செய்தித்தாள் வாசகர். நான் சிறுமியாக இருந்தபோதே அவர் என்னிடம் உலக நடப்பு, சமத்துவமின்மை இவற்றைப்பற்றிப் பேசுவார்.

பலர் இங்கு பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் ஒருவர் ரிங்க்கூ சென். அப்ளைட் ரிசர்ச் சென்டர் (applied research centre) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். எல்லா இனத்தவருக்கும் சமநீதி என்பதை வலியுறுத்தும் நிறுவனம் அது. அவர் எனக்கு வழிகாட்டி. தவிர சமூகநீதி அமைப்புகளில் உள்ள சிலரும் எனக்கு முன்மாதிரிகள்.

அ: உணவகங்களில் எந்த உணவு உங்களுக்கு விருப்பமானது.
சா: புன்னகைக்கிறார். நல்ல முறையில் நடத்தப்படும் தொழிலாளி சமைக்கும் உணவே எனக்குப் பிடித்தமானது (சிரிக்கிறார்). எந்த உணவு பிடிக்கும் என்று கேட்டால் இந்திய உணவு என்றுதான் சொல்வேன் (பெரிதாகச் சிரிக்கிறார்).

அ: உங்களுக்கு மிகவும் பிடித்த மேற்கோள் என்ன?
சா: அப்படி எதுவும் கிடையாது. ஆனால் இன்று நான் படித்த அருந்ததி ராயின் ஒரு வாசகம் எனக்குப் பிடித்திருந்தது: "Another world is not only possible, she is on her way. On a quiet day, I can hear her breathing."

அ: பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?
சா: நான் சொல்ல விரும்பும் செய்தி 'முடியாதது என்று எதுவும் கிடையாது' (Nothing is impossible). அநீதி மற்றும் கொடுமைகள் பற்றிப் பேசும்போது, இவையெல்லாம் அப்படித்தான் இருக்கும் என மக்கள் சொல்வதைக் கேட்கிறேன். இவை இப்படியேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறையப்பேர் எல்லாத் தடைகளையும் தாண்டி, தங்கள் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் மற்றவர் வாழ்க்கையிலும் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளனர். நான் சொன்ன மேற்கோளில் உள்ளதுபோல் "Another world is not only possible. It is just around the corner". இதுதான் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது.

அ: நீங்கள் சமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம் எது?
சா: எனக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதனால் படிக்க நேரம் கிடைப்பது அரிது. நான் கடைசியாகப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் வட கலிஃபோர்னியாவுக்கு மெயில் ஆர்டரில் தருவிக்கப்பட்ட ஜப்பானிய மணப்பெண்களைப் பற்றியது. பெண்கள் என்ற வகையில் அவர்கள் சந்திக்க நேர்ந்த கடுமையான போராட்டங்களைப் பற்றிய வரலாற்று நூல் இது.

அ: உங்கள் சிந்தனைக்கேற்ற புத்தகம்தான்.
சா: ஆமாம். நான் வரலாற்றுப் புத்தகங்களை ரசித்துப் படிப்பேன்.

சாரு ஜெயராமனின் எதிர்காலத் திட்டங்களின் வெற்றிக்கும், நூல் வெளியீட்டுக்கும் வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகிறேன். ஒரு இனிய புன்னகையோடு நன்றி கூறுகிறார்.

உரையாடல்: அம்பாள் பாலகிருஷ்ணன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com