வாழ்வென்பது....
கைபேசியில் சுபத்ராவின் முகத்தோடு, குழலிசையும் ஒலிக்க, அருண் அதை வெறித்துப் பார்த்தான். அது மீண்டும் மீண்டும் இசைத்தது. நேற்றுவரை பாய்ந்து எடுத்து காதலோடு பேசியவன், இன்று மௌனமாயிருந்தான். நாலைந்து முறை அது அழைத்துவிட்டு ஓய்ந்தது.

சற்று நேரத்தில் வீட்டுத் தொலைபேசி அடித்தது. அவளாகத்தான் இருக்கும். கீழே அம்மா எடுத்திருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அம்மா அவன் அறைக்கு வந்தாள். தூங்குவது போல் பாவனை செய்தான் அவன்.

"ஏண்டா அருண், தூங்கறயா? சுபத்ரா போன் பண்ணினாளாம். நீ எடுக்கலயாம்! எடுத்துப் பேசுடா அவ லைன்ல இருக்கா பார்."

"அப்பறம் பேசறேன்னு சொல்லு"

"என்னடா ஆச்சு? உங்க ரெண்டு பேர்க்கும் ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் இல்ல நீ போ" அவன் திரும்பி படுத்தான்.

சற்று பொறுத்து மொபைலில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் படித்தான்.

"சிவில் சர்விஸ் ரிசல்ட் வந்திருக்கு அருண். நான் செலக்ட் ஆகிட்டேன்."

எவ்வளவு திமிர். நான் தோற்றது தெரியாமலா இருந்திருக்கும்! அது குறித்துக் கொஞ்சமும் வருத்தப்படாமல் தன் வெற்றியைக் கொண்டாடுகிறாள்! அவன் வெறுப்போடு மொபைலை வைத்தான். பதில் அனுப்பவில்லை.

பள்ளிப் பருவத்துக் காதல் கல்லூரியிலும் தழைத்து வளர, இரு குடும்பமும் அவர்களது காதலை அங்கீகரித்து, மகிழ்ச்சியோடு மணநாள் நிச்சயித்திருந்தது. இருவருமே பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் நம்பர் ஒன்தான். ஆளுக்கு இரண்டு தங்க மெடல்கள் வாங்கியிருந்தார்கள். எம்.பி.ஏ. முடித்ததும் சிவில் சர்வீஸ் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

"ஒரு வீட்டுல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ். ஆகப் போறோம். நம்ப மரியாதை எங்கயோ போய்டும் இல்ல?"

"அதுலயும் ஒரு கஷ்டம் இருக்கு. ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்க முடியுமான்றது சந்தேகம்."

"கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுட்டா அப்பறம் ஒரே இடத்துல கூட இருக்கலாம்."

"குழந்தைகள்னு பிறந்தா?"

"அது இல்லாமலா? உன்ன மாதிரி ஒரு பெண், என்ன மாதிரி ஒரு பையன். ரெண்டுத்தையும் உங்கம்மாவும் எங்கம்மாவும் பார்த்துப்பாங்க."

"அதுகளையும் ஐ.ஏ.எஸ். ஆக்கிடணும். நல்லார்க்கும் இல்ல?"

இருவரும் நிறையக் கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே!

ஆனால் கணக்கு தவறிவிட்டது. அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையையும் ஐ.ஏ.எஸ். கனவில் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த முறை முயன்றால் வெற்றி கிடைத்துவிடும். ஆனால் பணியில் அவள் அவனைவிட சீனியாராகி விடுவாள். ஒரு வேளை அடுத்த முறையும் தோற்றுவிட்டால். தலை நிமிர்ந்து நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேயே ஏளனப் பார்வைகள் எழும்பும். அவன் எழுதவே இல்லை என்றால் வேறு. எழுதித் தோற்பது என்பது மதிப்பைக் குறைத்து விடும்.

ஒரு மிகப் பெரிய வாய்ப்பு தனக்குக் கை நழுவிப் போனதைவிட, அது அவளுக்குக் கிடைத்திருப்பது, அவனது மன உளைச்சலை அதிகரித்தது. வெளி உலகத்தைக் காணக்கூடப் பிடிக்காமல் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தான் அவன்.

*****


மாடிப்படியில் காலடி சப்தம் கேட்டது. அம்மா என நினைத்தவன் உள்ளே வந்த உருவத்தைக் கண்டதும் திகைத்தான். சுபத்ராதான். அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவள் வெற்றிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால் பொறாமை என்றாகி விடும். "வாழ்த்துக்கள்." அவன் மெல்லிய புன்னகையோடு சொன்னான்.

"என்னாச்ச்சு அருண்? உடம்புக்கென்ன?" அவள் கவலையோடு தொட்டுப் பார்த்தாள்.

"ஒண்ணுமில்ல"

"பொய். நீ அப்செட் ஆயிருக்க. அதனால் என்ன அருண். அடுத்த முறை நிச்சயம் ஜெயிக்கப் போற."

"அதுவரை உனக்கு டவாலி உத்தியோகம் பார்க்கச் சொல்றயா?" அவன் வெடுக்கெனக் கேட்க அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட அனலில் அவள் ஒரு விநாடி திகைத்துப் போனாள்.

"என்னாச்சு அருண்? ஏன் இவ்ளோ நெகடிவா பேசற?"

"வேற எப்டி பேசச் சொல்ற. இந்தக் கடவுளுக்கு கண்ணே கிடையாது. உன்னைவிட நா எந்த விதத்துல அறிவுல குறைஞ்சவன்? எங்கயோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அதான் நா செலக்ட் ஆகல."

"இதுக்கு எதுக்கு கடவுள இழுக்கற அருண்?

"ஏதோ ஒரு முட்டாளைக் கொண்டு என பேரை ரிஜக்ட் பண்ண வெச்சிருக்கானே அதான் அப்டி சொன்னேன்."

"கமான் அருண். உன் புத்திக்கு நீ கோடி கோடியா சம்பாதிக்கலாம். நமக்கு முன்னாடி ஏகப்பட்ட பாதைகள் இருக்கு."

"உனக்கென்ன பாஸ் பண்ணிட்ட சந்தோஷத்துல உபதேசத்தை அள்ளி விடுவ."

சுபத்ரா அவனை உற்றுப் பார்த்தாள். இது தாழ்வு மன நிலையில் வரும் வார்த்தையா. அல்லது பொறாமையில் பொங்கும் குதர்க்கமா? அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான், அவள் மன ஓட்டம் புரிந்ததுபோல்.

ச்சே! அப்படி பேசியிருக்க வேண்டாமோ? என்ன நினைத்துக் கொள்வாள் அவள்! வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம்? எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன்? நான் இவ்வளவு மோசமா? ஒரு தோல்வி வந்ததும் உள்ளே இருக்கும் மிருகம் மேலே வந்து விடுமா? அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். தொண்டையில் ஏதோ அடைத்தது.

சுபத்ரா அவனை இரக்கத்தோடு பார்த்தாள். பாவம் தோல்வி கொடுத்த அதிர்ச்சியில் பேசுகிறான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

"நாம் வெளில போயிட்டு வரலாம் வாயேன் அருண்."

"நா வரல. என்னைக் கொஞ்சம் தனியா விட்டுட்டு கிளம்பு சுபத்ரா."

"தன்னிரக்கம் தப்பு அருண்."

"அறிவுரைக்கு நன்றி. கிளம்பு."

"இதோட எல்லாம் முடிஞ்சுட்டதா ஏன் சோர்ந்து போற? நீ இப்டி டல்லா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு. நா பாஸ் பண்ணினது எப்டி எதிர்பாராததோ அதே மாதிரி நீ செலெக்ட் ஆகாததும் எதிர்பாராததுதான். இதனால் நா ரொம்ப புத்திசாலின்னோ நீ முட்டாள்னோ அர்த்தமில்ல."

"நா பச்சக் குழந்தையில்ல சமாதானம் சொல்ல. மேல மேல பேசி என்னை எரிச்சல் படுத்தாதே."

சுபத்ரா சற்றே வேதனையோடு வேறு வழியின்றி கிளம்பினாள்.

மனிதன் போடும் சில கணக்குகள் பிழையாகும்போது சந்தோஷம் எப்படி வடிந்துவிடுகிறது! இருவரும் தேர்வாகியிருந்தால் இந்நேரம் எவ்வளவு உற்சாகமாகி இருப்பான். ஏன் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன்? ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி என்று எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமும் தன்னிரக்கமும் மன உளைச்சலும் ஏற்படப் போகிறது. போகட்டும், இந்த வரைக்கும் உள்ளொன்று, புறமொன்று என்றில்லாமல் தன் குமுறல்களை வெளிப்படையாய் கொட்டினானே. நான்கைந்து நாளில் எல்லாம் சரியாகி விடும, யோசிக்க யோசிக்க மனசு தெளியும். தெளியும்போது அவனே பேசுவான்.. கீழே இறங்கி வந்தாள் அவள்.

"என்ன ஆச்சு சுபா அவனுக்கு.? ஏன் இப்டி மூட் அவுட் ஆகி இருக்கான்?"

அவள் சிவில் சர்வீஸ் முடிவுகளைச் சொன்னாள். அவன் தாயின் முகமும் சற்றே மாறியது. அப்டியா என்றாள் சுரத்தில்லாமல்.

"அவனுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மிதான். இந்த காலத்துல மூளைக்கு எங்கே மதிப்பிருக்கு? அதான் இப்டி வாடிப் போயிருக்கானா? இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ!"

சுபத்ரா என்ன சொல்வதென புரியாது திகைத்தாள். தன் வெற்றிக்கு மகிழக்கூட முடியாமல் வீட்டுக்கு வந்தாள். ஆண் தோற்று, பெண் ஜெயிப்பதை பெண்ணே விரும்ப மாட்டாளா? அவளுக்குப் புரியவில்லை.

*****


வீடு உற்சாகமாயிருந்தது. அவள் பயிற்சிக்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்துவிட்டால் நல்லது என நினைத்தது.

"அப்பா இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்."

"ஏம்மா?"

"அருண் செலக்ட் ஆகலப்பா. இப்போ போய் பேசினா அவங்க எப்டி எடுத்துப்பாங்கன்னு தெரியல."

"இதுல என்னம்மா இருக்கு. நீ பாஸ் ஆனதுல அவனை விட யார் சந்தோஷப்படப் போறாங்க. தவிர அடுத்த வாட்டி எழுதி அவனும் செலக்ட் ஆகிடப் போறான். நா போய் நாளைக்கு பேசிட்டு வரேன்."

அன்றிரவு அருண் அவளுக்கு போன் செய்தான்.

"உங்கப்பா நாளைக்கு வர்றதா சொன்னாராம்?"

"ஆமா."

"வேண்டாம்னு சொல்லு சுபி. கல்யாணம் செய்துக்கற மனநிலையில் நா இப்போ இல்ல."

"அதையும் இதையும் ஏன் முடிச்சு போடற அருண்? கண்டிப்பா நீ அடுத்த வருஷம் செலக்ட் ஆகத்தான் போற. எனக்கு நம்பிக்கை இருக்கு."

"அப்போ அதுவரை காத்திரு. ஒரு வேளை மறுபடியும் ரிசல்ட் எனக்கு சரியா வரலன்னா நீ வேற ஒரு ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் செய்துக்கோ."

"பைத்தியம் மாதிரி பேசாதே அருண். இதுக்கா நாம இவ்ளோ காலம் காதலிச்சோம்? உன்னைத்தவிர வேற யாரும் எனக்குப் புருஷனாக முடியாது."

"ஒருவேளை நா மறுபடியும் தோத்துட்டேன்னு வையி. என்னால ஒரு ஐ.ஏ.எஸ்.-க்கு புருஷனா இருக்க முடியாது."

"எதையுமே பாஸிடிவா யோசிக்க மாட்டயா நீ?"

‘இதுநாள் வரை பாசிடிவாதான் இருந்தேன். எப்போ புத்திக்கு மதிப்பில்லாம போச்சோ அப்பறம் வேற எப்டி யோசிக்கறது?"

"சரி உன் வழிக்கே நானும் வரேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதையும் மீறி நீ சொல்றபடி நடந்துச்சுன்னா நா என் வேலையை ராஜினாமா பண்ணிடறேன். போதுமா? உன்னைவிட எனக்கு அது முக்கியமில்ல" அவள் சொல்ல, அருண் போனை வைத்தான். பின்னால் நிழலாடத் திரும்பினான்.

அவனையே பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தார் அப்பா.

"என்னடா பேசிட்டயா? நா உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா சிவில் சர்வீஸ்ல மட்டுமில்ல, வாழ்க்கைலயும் தோற்கப் போற அடிமுட்டாள் நீன்னு இப்போதான் புரியுது."

"என்ன சொல்றீங்க?" அவன் புருவம் சுருங்கக் கேட்டான்

"உன் இடத்துல நா இருந்தா இந்நேரம் என்ன செய்திருப்பேன் தெரியுமா? நா செலக்ட் ஆகாட்டி என்ன, சுபத்ரா ஐ.ஏ.எஸ். ஆனதுல எனக்கு அளவுகடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏத்துக்க முடியல. இது ஒரு சின்னச் சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐ.ஏ.எஸ். பதவியை உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப்படுவ. நீ ஐ.ஏ.எஸ். ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு இருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா? இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா? நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா."

அப்பா போய்விட்டார். அவன் துவண்டு அமர்ந்தான். இரவு கனமாய் நகர்ந்தது.

மறுநாள் அவன் இரண்டு பை நிறைய இனிப்பு வகைகளுடன் சுபத்ராவின் வீட்டுக்குக் கிளம்பினான், அப்பாவையும் அழைத்துக்கொண்டு. குழந்தைப் பருவத்தில் அவன் தடுமாறிக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்து அவன் எழுவதற்கு உதவி செய்த அப்பா இப்போதும் அவன் நிமிர்ந்து எழ உதவியதற்கு அவன் அவருக்குப் போகும் வழியில் நன்றி சொன்னான்.

வித்யா சுப்ரமண்யம்

© TamilOnline.com