டிசம்பர் 2, 2012 அன்று டாலஸில் நடந்த 'ஆயிரம் கரங்கள் நீட்டி' என்ற தமிழ் இசை, நாடக, நாட்டிய விழாவைக் காண ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் திரண்டனர். ராதிகா கணேஷின் தலைமையில் 110 பேர் கொண்ட குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முழுக்க உள்ளூர்க் கலைஞர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இதில் பங்கேற்றனர் என்ற பெருமை இதற்கு உண்டு. திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கான தனிப்பாடல்களும் இயற்றி இசையமைத்து இணைத்திருந்தனர்.
எட்டுக்குள்ளே உலகம் இருக்கு என்ற தலைப்பில் ஒரு குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளான பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நட்பு, மணமுடிப்பு, புது உறவு, உழைப்பு-உயர்வு, ஊரும் உறவும், இறப்பு, மீண்டும் பிறப்பு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மேடைக்கதை அமைத்திருந்தார் பிரபல நடனக்கலைஞர் மற்றும் இயக்குனர் ராதிகா கணேஷ். அனிருத் பேரனாகவும், பிரேமா வெங்கட் பாட்டியாகவும் அறிமுகமான முதல் காட்சியிலேயே அரங்கம் அதிர ஆரம்பித்து விட்டது. மஞ்சள் முகம் நிறம் மாற என்ற கர்ணன் படப் பாடலுக்கு பெண்கள் வளைகாப்பு நடனமாடினர். கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான், அத்தை மடி மெத்தையடி போன்ற பாடல்கள் சிறந்த பாவனைகளுடன் வீட்டில் நடப்பதை விவரித்தன. நட்பு பரிமாணத்தில் கிராமம், நகரம் எனக் காட்சிகளை டோண்ட் ஒர்ரி முஸ்தபா உள்ளிட்ட உரிய பாடல்களுடன் அமைத்திருந்தனர். ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பதையும் மேடையிலேயே நடத்திக்காட்டினர். திருமண மண்டபத்திற்கான பொருட்களை பாலா, மீரா, சங்கீதா ஆகியோர் கொண்டு வந்து குவித்துவிட்டனர். அன்னபூரணி, புவனா மற்றும் வந்திதா உள்ளிட்ட நடன ஆசிரியர்களும், அவர்களுடைய நடனப் பள்ளி மாணவ மாணவியரும் காட்சிகளுக்கேற்ற சிறப்பு நடனங்கள் ஆடினர்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட 65,000 டாலர், திருவண்ணாமலையில் 'உதவும் கரங்கள்' அமைப்பின் மனவளர்ச்சி குன்றிய பெண்கள் காப்பகக் கட்டிட நிதிக்கு வழங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் வேலு, தமிழ்மணி, டாக்டர். பிரபாகர், விஸ்வநாதன், கணேஷ் ஆகியோர் உதவும் கரங்கள் அமெரிக்க அமைப்பின் தலைவர் டாக்டர். பத்மினி ரங்கநாதனிடம் காசோலையை வழங்கினர்.
திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் ஹூஸ்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “உள்ளூரிலேயே திறமைகள் கொட்டிக்கிடக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து கலைஞர்களை அமெரிக்காவுக்கு ஏன் அழைக்க வேண்டும்? அமெரிக்கத் தமிழ்க் கலைஞர்கள், தமிழகத்திற்கு வந்து நிகழ்ச்சிகள் நடத்தித் தரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை ஆயிரம் கரங்கள் நீட்டி நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.
செய்தி: தினகர், டாலஸ் புகைப்படம்: சுஸ்ருத்தா சாட்டர்ஜி |