கல்லூரியில் சேருபவர்களுக்கு
ஜனவரி 5, 2013 அன்று சான் ஹோசேயின் சான் ஃபெர்னாண்டோவிலுள்ள மார்ட்டின் லூதர் கிங் நூலகத்தில் கோபால் மற்றும் குழுவினரின், கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளை அலசும் பட்டறை ஒன்று நடைபெற்றது. சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்தப் பட்டறையில், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆறு மாணவியர் கல்லூரி வாழ்க்கை, கல்லூரியில் நுழைவதற்கான தகுதிகள் மற்றும் தொடர்புடைய செய்திகளை விளக்கிப் பேசினர். ஹன்சா கோபாலகிருஷ்ணன், இலக்கியா பழனிசாமி, கார்த்திகா செல்வகணேசன், நிவேதிதா ஜெயசேகர், சுகிதா கார்த்தி, ஸ்வேதா பிரபாகரன் ஆகியோர் தமது அனுபவ அறிவைப் பகிர்ந்துகொண்டனர்.

GPA என்றால் என்ன, Pre SAT எவ்வாறு கல்வி நிதி பெற உதவுகிறது, SAT-1 மதிப்பெண்களின் முக்கியத்துவம், அதற்குத் தயார் செய்யும் முறை, SAT-2வைப் பள்ளியில் எந்தச் சமயத்தில் எடுத்தால் கல்லூரியில் சேரப் பயன்படும், எப்படிப்பட்ட AP கோர்ஸ்கள், எத்தனை எடுக்கலாம் போன்ற விவரங்களைக் கூறினர். மாணவர்கள் கற்கும் பிற கலைகள், தன்னார்வத் தொண்டு போன்றவையும் கல்லூரியில் நுழைய உதவும் என்று விளக்கினர்.

விண்ணப்பதாரரின் நுழைவுக் கட்டுரை அவரைப்பற்றிக் கூறுவதோடு, அந்தக் கல்லூரியில் படிப்பதற்கான ஆர்வத்தைத் தெளிவுபடுத்தவேண்டும்; தாங்கள் விரும்பும் கல்லூரிகள் குறித்த விவரங்களை முனைந்து சேகரிக்க வேண்டும்; பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் மாணவர்கள் விரும்பும் கல்லூரி, மற்றும் துறைகளைத் தேர்ந்தெடுக்க முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பவை சில முக்கிய அறிவுரைகளாகும்.

பட்டறை நடக்க ரேவதி ஸ்ரீதர், வேணு சுப்ரமணியன், வெங்கடேஷ் பாபு, பிரபு வெங்கடேஷ், அம்பாள் ஆகியோர் உதவினர். கோபால் போன்று இந்தியர் அனைவரும் ஆர்வத்தோடு வருங்கால சந்ததியினருக்கு உதவ முன்வர வேண்டும்.

தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com