சங்கர நேத்ராலயா: ஜாலியான இசை நிகழ்ச்சி
ஜனவரி 12, 2013 அன்று SOCAL தமிழ் சங்கத்தின் சார்புடன் சங்கர நேத்ராலயாவின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலஸ் நகரின் லாங் பீச்சில் நடைபெற்றது. 'ஜேனில் ஜாலி' என்ற இந்தத் தமிழ் மெல்லிசை நிகழ்ச்சியில் MuzikLovers, RiffsNRagaas, TREAT, Sangamam குழுவினருடன் டாலஸ் கலைஞர்கள் பிரபுவும், சுருதி பிரபுவும் பங்கேற்றனர். தமிழ் சங்கத் தலைவர் சுப்பு ஷண்முகம் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கண்களைப் பற்றிய பாடல்களே இதில் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. இடைவேளையில் சங்கர நேத்ராலயாவின் இலவச கண் சிகிச்சை பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த பாலாஜியும், விஜேதாவும் பல பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். நேத்ராலயாவின் சார்பில் சந்தானம் முள்ளூர் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

சங்கர நேத்ராலயாவின் பலவகைச் சேவைகளில் ஒன்று, Uncorrected Refractive Error எனப்படும் திருத்தப்படாத பார்வைக் குறைபாட்டின் காரணமாக அன்றாட வாழ்க்கையை சிரமத்துடன் கழிக்கும் கிராம மக்களுக்கு உதவ, கிராமங்களுக்கே சென்று, பரிசோதனை செய்து, தேவைக்கேற்பக் கண்ணாடிகளை உடனடியாகத் தயார் செய்து வழங்கும் சேவை ஆகும் (Mobile Spectacle Dispensing Unit). தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும், கொல்கத்தாவில் மிட்னாபூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும், ஏழை எளியோருக்கு இலவசச் சேவை பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்துவருகிறது.

மேலும் அறிய: நேத்ராலயாவின் வலைமனை

நளினி முள்ளூர்

© TamilOnline.com