TEAM உறுப்பினர் கூட்டம்
டீம் (Team for Educational Activities in Motherland) என்ற தொண்டு நிறுவனம் 2000-ம் ஆண்டு கலி·போர்னியாவில் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின், கிராமப்புறங்களில் கவனிப் பாரற்றுக் கிடக்கும் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே.

ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும் இந்த அமைப்பின் 18-வது கூட்டம் 2006 ஜனவரி 7-ம் தேதி மவுண்டன் வியூ, கலி·போர்னியாவில் நடைபெற்றது. இறைவணக்கத்தோடு கூட்டம் ஆரம்ப மானது. நளினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அஸ்வினின் வரவேற்புரைக் குப் பின்னர் அழகிரிசாமி, சுதந்திரா, மற்றும் செந்தில் ராமசாமி ஆகியோர் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் செய்யப்பட்ட டீமின் நலத்திட்ட அனுபவங்களைப் பற்றி நினைவு கூர்ந்தனர். குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்பட்ட 60 உறுப்பினர்களின் பெயர்களும் செயலாக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் பற்றி ஜனா விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த மேசன் பைல்ஸ் அவர்கள் இந்தியப் பள்ளிகள் சிலவற்றோடு தமக்கு உள்ள தொடர்பை விவரித்து, டீம் ஆற்றி வரும் அரும்பணி களைப் பாராட்டிப் பேசினார். இவர் HP நிறுவனத்தில் பல ஆண்டுகள், பல நிலைகளில் பணியாற்றியதோடு, HP இந்தியாவின் தலைமைப் பொறுப்பையும் வகித்து ஓய்வு பெற்றவர்.


கலைநிகழ்ச்சி

உணவு இடைவேளைக்குப் பின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கருணாகரன் பழனிசாமி எழுதி இயக்கிய 'நிமிஷம் 15' என்ற நகைச்சுவைத் திரைநாடகமும், ஸ்ரீதரன் மைனர் மற்றும் ராஜாமணி வழங்கிய புதுமையான வீடியோகீ (Videoke) தமிழ்த் திரைப்படப் பாடல் நிகழ்ச்சியும் நடை பெற்றன. இவர்கள் செவிக்கினிய வீடியோகீ பாடல்கள், இடையில் நாடகத்தின் காட்சிகள் என மாறிமாறி நிகழ்ச்சியைத் தொய்வின்றி வழங்கினர்.

திரைப்படப் பாடல் காட்சிகளின் துணுக்குகள், பாடகர்களின் பாடலுக்கேற்ற நடனம் மற்றும் நடிப்பை ஸ்ரீதரன் மைனர் ஏற்கனவே நேர்த்தியாகக் குறுந்தகட்டில் (DVD) ஒளிப்பதிவு செய்திருந்தார். வீடியோகீ பாடல்களின் போது பாடலுக்கேற்ற அந்தக் காட்சிகளையும், மேடையில் பாடகர்கள் நடன அசைவுகளுடன் பாடிய தையும் மிகப் பொருத்தமாகக் கலந்து ஸ்ரீதரன் மைனரும், கார்த்திக்கும் திரை யிட்டனர். 'சுட்டும் விழிச் சுடரே', 'அண்டங் காக்கா கொண்டைக் காரி' போன்ற புதிய பாடல்களை தனது அச்சு வெல்லக் குரலில் துள்ளல் நடனத்துடன் பாடிய ராஜா, சுதா கணபதி கிருஷ்ணன், 'ஆத்தங்கர மரமே', 'ஒத்தையா ரெட்டையா' பாடல்களைச் சிறப்பாகப் பாடிய ஸ்ரீதரன் மைனர், மாலா, 'காற்று வாங்கப் போனேன்' பாடலுக்கு எம்.ஜி.ஆரின். நடன அசைவுகளுடனும் பாவனைகளுடனும் ஆடிப்பாடிய கருணா கரன் பழனிசாமி, சுருதி கதிரேசன், அம்லு நடேசன் மற்றும் மாலா என்று அனைவருமே ஈடுபாட்டுடன் செய்திருந்தனர். 'மயில் போலப் பொண்ணு' ஒண்ணு பாடலுக்குத் திரையிடப்பட்ட குழந்தைகள் நடனமும், 6 வயதான ஸ்டெ·பனி ரிச்சர்டு 'நானொரு சிந்து காவடி சிந்து' பாடலைத் தெளிவான
உச்சரிப்புடன் அழகாகப் பாடியதும் அரங்கத்தினரை மிகவும் கவர்ந்தது.

பாடல்களுக்கிடையில் வந்த 'நிமிஷம் 15' நாடகத்தைக் கருணாகரனும், ஸ்ரீதரரும் தயாரித்திருந்தனர்.

நாடகம் முதலிலேயே வெவ்வேறு இடங் களில் எடுக்கப்பட்டு, பின்னணியிசை மற்றும் சிறப்பு உத்திகளோடு அமைத்துத் திரையிடப்பட்டது.

மதுரை ஜகநாதன் 'மஜா', சிதம்பரம் ராமநாதன் 'C.D. ராம்' என அமெரிக்காவுக்கு வந்தவுடனே தமிழ்ப்பெயர்கள் எப்படி சுருக்கப்படுகின்றன என ஆரம்பிக்கும் நகைச்சுவை, மூக்குத் துடைத்து ராதா போடும் டிஷ்யூ-வை
அவளிடம் தந்து அவளது காதலைப் பெற அசடு வழிவது, ஹிப்னாடிசத்தின் போது பழைய ஞாபகத் தைக் கொண்டு வர முகத்தின் முன் டாக்டர் விரலால் வேகமாகச் சுற்றிவிடக் குழந்தைப் பருவ நினைவில் அழுவது, விஜய் ஞாபகத் திற்காக வைத்துள்ள மஜாவின் போட்டோ வில் "இவன் வெறுக்கப் பட வேண்டியவன்" என்று எழுதி வைத்திருப்பது, அமெரிக்கா வந்தாலும் மாமா மொக்கைசாமி அரிவாளோடு நாட்டாமை செய்ய முயல்வது என
அமர்க்களப் படுத்தியிருந்தார்கள்.

பின்னணி இசையமைத்ததுடன் நாயகன் விஜய் கிருஷ்ணாவாகவும் நடித்திருந்தார் ஸ்ரீதரன் மைனர்.

பாட்டு, நடனம், பட்டிமன்றம் என்று வளைகுடாப் பகுதியில் கலக்கும் ராஜாமணி மஜாவாகவும், இதற்கு முன்பு சிரிப்பு நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ள கருணாகரன் டாக்டர் C.D. ராம் ஆகவும் அசத்தியிருந்தனர்.

கதாநாயகியாக வந்த ஸ்ரீதேவி கிருஷ்ணன் இயல்பாக நடித்தி ருந்தார். அப்பாவாகக் கதிரேசனும், மாமா மொக்கைச்சாமியாக T.S. ராமும், மேனேஜ ராக கோவிந்த் ஹரிதாசும் திறம்பட நடித்திருந்தனர்.

செயல்பாடுகள்

அமெரிக்காவில் நான்கு கிளைகள், இந்தியாவில் ஒரு கிளை, தவிர இங்கிலாந்து, சிங்கப்பூர், மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் கிளைகள் எனக்கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் தன்னார்வ அமைப்பு வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவில் ஒரு கிளை ஆரம்பிக்க உள்ளனர்.

இதில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் 10 டாலர் வீதம் ஆண்டுக்கு 120 டாலர் நன்கொடை அளிக்கின்றனர். குலுக்கல் முறையில் உறுப்பினர் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரவர் விரும்பும் அரசாங்கப்பள்ளிக்குத் தலா 500 டாலர் எனக்கொடுத்து உதவு கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் மறுசுற்று வரும்வரை குலுக்கலிலிருந்து நீக்கப்பட்டு
விடுவதால், 50 மாத சுற்றுக்காலம் முடிவதற்குள் எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கிறது.

உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு அருகில் இருக்கும் உறுப்பினரின் பெற்றோரோ, உறவினர்களோ, நண்பர்களோ பள்ளியின் தேவையை அறிந்து திட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.

இவ்வாறு இது வரை 460 பள்ளிகள் மேஜை, நாற்காலி, பெஞ்சு, கரும்பலகை, குடிநீர்த்தொட்டி, சுற்றுச்சுவர் எனப் பல அடிப்படை வசதிகளைப் பெற்று பயனடைந்திருக்கின்றன. டீம் 501(c)(3) வரிவிலக்கு அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம்.

இந்தச்சேவை நிறுவனத்தைப்பற்றி மேலும் அறிய: www.indiateam.org

கந்தசாமி பழனிசாமி மற்றும் லோகநாதன் பழனிசாமி

© TamilOnline.com