கொள்ளாதே மௌனம்
அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன்
கருவறையில்
முகிழ்த்த கருக்கூட
அழுதது..

இந்த இடுக்கண்
வரக் காரணம், ஓர்
கிறுக்கன், அவன்
கையில் இருந்த
மூன்று கன்!

தன் தாயின் உயிரை
முதலில் எடுத்தான்.
பிறகு பல
தாய்களின் உயிரை
மட்டும் விடுத்து
மற்ற அனைத்தையும்
எடுத்தான்.

பள்ளியில் பிள்ளைகளைக்
கிள்ளலாம்; ஆனால்
கொல்லலாமா?
துப்பாக்கியால் பூக்களைப்
பறிக்கலாமா?

வெகுளிச் சிரிப்பு
கேட்கும் வகுப்பறையில்
வெடிகுண்டுச் சிரிப்பா?
சுண்ணாம்பு கட்டிகள்
சிதறும் வகுப்பறையில்
தோட்டாத் துண்டுகளா?

நகை வாங்கப் போனவர்கள்
திரும்பி வரலாம்
வெறும் சேதாரத்தோடு - ஆனால்
பிள்ளைகளைப்
பள்ளியில் விடப் போனவர்கள்
திரும்பி வரலாமா
பிணங்களோடு?

என்ன செய்தது
அந்த பிஞ்சு
விரல்கள் இப்படிப்
பிஞ்சு போவதற்கு?

எனது கண்மட்டும்
சிவக்கவில்லை
இமையில் இருக்கும்
இரப்பை கூடச்
சிவக்கிறது

அன்று
அவ்வீடுகளில்
பிள்ளை அழுதது
இன்று
அவ்வீடுகளில்
பெற்றோர் அழுகின்றனர்

அன்று
பிள்ளைகளுக்கு கிடைத்தது
பெற்றோரிடமிருந்து
சமாதானம் - ஆனால்
பெற்றோருக்கு இன்று
என்ன மிச்சம்
வெறும் மயானமா?

அமெரிக்காவே! உன்
அழகான மேனியில்
இது என்ன
அழுக்குத் தேமல்?

தேமல் வந்தால்
பாதிக்கும் தேகம் - அதுவே
தொழுநோயானால்
உண்டாகும் ஊனம்.
கொள்ளாதே இவ்விஷயத்தில்
மௌனம்....

குருபிரசாத் வெங்கடேசன்,
எல்லிகாட் சிட்டி, மேரிலேண்ட்

© TamilOnline.com