கணிதப் புதிர்கள்
1) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்குத் தலா 1/2 என்றும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எவ்வளவு பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?

2) ராஜேஷின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 42. ராஜேஷ் வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 914 வருகிறது. ராஜேஷின் வயதைவிட அவன் தம்பியின் வயது எட்டு வருடம் குறைவு என்றால் ராஜேஷின் வயது என்ன, அவன் தம்பியின் வயது என்ன?

3) அது ஒரு நான்கு இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை பதினொன்று. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று. மூன்று மற்றும் நான்காம் எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று. முதல் மற்றும் இறுதி இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று என்றால் அந்த எண் எது? அதே போன்ற வேறு எண் எது?

4) வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

101, 83, 67, 53, ........ ?

5) ஒரு தோப்பில் ஒவ்வொரு ஐந்து தென்னை மரங்களுக்கும் இரண்டு மாமரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 12 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருக்கும் மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com