ஓர் ஆற்றின் கரையில் குரங்கு, முயல், நரி எனப் பல மிருகங்கள் வசித்து வந்தன. குரங்கு மரத்திற்கு மரம் தாவி தனது உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளும். முயலுக்குக் காட்டில் விளைந்த கீரையும், காய்கறிகளும் போதுமானதாக இருந்தது. ஆனால் நரி, தன் உணவிற்காக அங்கும் இங்கும் அலைய வேண்டி இருந்தது. அதனால் அது பிற மிருகங்கள்மீது பொறாமைப்பட்டது.
அந்த ஆற்றுக்கு மீனைத் தின்பதற்காகத் தினந்தோறும் ஒரு கொக்கு வரும். நேரம் வரும்வரை காத்திருந்து மீனைப் பிடித்துத் தின்னும். அதைக் கவனித்த நரிக்கு கொக்கின் மீதும் பொறாமை ஏற்பட்டது. அதை எப்படியேனும் அவமானப்படுத்த நினைத்தது. ஆனாலும் கூரிய அலகு கொண்ட கொக்கைக் கண்டு அதற்குக் கொஞ்சம் பயமும் இருந்தது. ஆகவே அதனுடன் பேசிப் பழகி நண்பனானது.
ஒருநாள் கொக்கை விருந்துக்கு அழைத்தது நரி. முதலில் மிகவும் தயங்கிய கொக்கு, நரி வற்புறுத்தவே ஏற்றுக் கொண்டது.
கொக்கை அமரச் சொன்ன நரி, சுவையான சூப்பைத் தயாரித்தது. பின் அதை பெரிய ஒரு தட்டில் ஊற்றிக் குடிக்குமாறு கூறியது. கொக்கு தனது நீண்ட, கூரிய அலகால் சூப்பை உறிஞ்சிக் குடிக்க முயன்றது, முடியவில்லை. அதனால் அப்படியே நின்று கொண்டிருந்தது.
கொக்கை அவமானப்படுத்திய மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நரி, "நீ இந்த விருந்தை ரசித்துச் சாப்பிடுவாய் என நினைத்தேன். ஆனால் மீன், தவளை போன்றவற்றைத்தான் உன்னால் உண்ண முடியும் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும்" என்றது போலியான வருத்தத்துடன்.
"பரவாயில்லை" என்று கூறி விடைபெற்றுச் சென்றது கொக்கு.
சில மாதங்கள் சென்றன. தனது வீட்டிற்கு விருந்துண்ண நரியை அழைத்தது கொக்கு. நரி ஆர்வத்துடன் சென்றது. நரியை வரவேற்ற கொக்கு, உணவு மேசைக்கு அழைத்துச் சென்றது. அதில் நீண்ட கழுத்தும், குறுகிய வாயும் கொண்ட பெரிய ஜாடியில் சுவையான உணவு வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நரி, "அடடா, அன்று நாம் அவமானப்படுத்தினோமே! அதுபோல் இன்று கொக்கும் நமக்குச் செய்துவிட்டதே!" என்று நினைத்தது.
அப்போது சமையல் அறையிலிருந்து வெளியே வந்த கொக்கு, "நண்பா, இதோ உனக்கான உணவு கொண்டு வந்திருக்கிறேன். உண்ண வேண்டும்" என்று சொல்லி, ஒரு தட்டில் உணவுகளை நரிக்குப் பரிமாறியது.
தனது சிறுமையையும், கொக்கின் பெருந்தன்மையையும் நினைத்துத் தலை கவிழ்ந்தது நரி.
சுப்புத்தாத்தா |