தீவிர எலும்புக் காற்றறை அழற்சி (சைனஸைடிஸ்)
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வதுண்டு. தலைவலி, பல்வலி இவற்றுடன் மூக்கடைப்பும் ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு என்ன நிவாரணம் என்று காண்போமா?

நமது முகத்தின் எலும்புகளில் ஆறு குழிவுகள் உள்ளன. இவை Frontal, Ethmoid, Maxillary sinuses எனப்படும். இவை நெற்றியில் ஆரம்பித்து, மூக்கு வழியாக இணைகின்றன. கன்னத்திலும், மூக்கும் கண்களும் இணையும் பகுதியில் இருக்கின்றன. இவை எலும்புக் காற்றறைகள். இவை தொண்டை வழியே காதுகளின் உட்பகுதிக்கு இணைக்கப் பட்டுள்ளன. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் வலி பெருகும். இந்தக் குழிவுகளில் அடைசல் ஏற்பட்டால் அதில் நுண்ணுயிர்க் கிருமித் தொற்று ஏற்படலாம். அதில் கோழை சேர்ந்து அடைப்பு ஏற்பட்டால் அது சைனஸைடிஸ் எனப்படுகிறது. சிலருக்கு இந்தக் காற்றறைகள் குறுகலாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு மூக்கின் நடுப்பகுதி கோணலாக இருக்கலாம். இதனால் அடிக்கடி இந்தக் காற்றறை அடைப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்
* தலைவலி-குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் நெற்றியில் வலி, முகம், வாய், காது மற்றும் பல்வலி, அல்லது இந்தப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது வலி வரலாம்.
* சளி, மூக்கடைப்பு ஏற்படலாம். கோழை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வரலாம்.
* காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்படலாம்.
* தொண்டை கரகரத்து இருமல் வரலாம். குறிப்பாக இரவில் படுக்கும்போது வறட்டு இருமல் பெருகலாம்.
* நாளாக ஆகப் பசியின்மை, அலுப்பு சோர்வு மிகுதியாகலாம்.

சாதாரண ஜலதோஷம், ஒவ்வாமை (allergy) ஆகியவற்றாலும் மேற்கண்ட அறிகுறிகள் தோன்றலாம். அப்படியானால், இவற்றுக்கும் காற்றறை அழற்சிக்கும் என்ன வேறுபாடு? ஒவ்வாமையால் மூக்கிலிருந்தும் கண்ணிலிருந்தும் அருவியாய் நீர் கொட்டலாம். இப்படி வரும் நீர், சளி அல்லது கோழை போல் இருக்காது. இவர்களுக்கும் வறட்டு இருமல் இருக்கலாம். ஆனால் உடல் நோவு, காய்ச்சல் போன்றவை இருக்காது. ஒவ்வாமைக்கான காரணத்தை நீக்கினால் நோய் சரியாகிவிடும். நீக்க முடியாதபோது ஒவ்வாமை மருந்துகள் (Zyrtec, Claritin, Allegra) உட்கொண்டால் குணமாகிவிடும்.

வைரஸினால் ஏற்படும் சாதாரண ஜலதோஷத்துடன் பெரும்பாலும் காய்ச்சல் இருக்காது. வந்தாலும் குறைவாக இருக்கும். சளி நிறமற்றதாக இருக்கும். தலைவலி, முகவலி அதிக நாட்களுக்குத் தங்காது. வலி மாத்திரைகளும் ஒவ்வாமை மாத்திரைகளும் உடனடி நிவாரணம் கொடுக்கும். ஒரு வாரத்திற்குள் சரியாகிப் போய்விடும். சிலருக்கு சாதாரண ஜலதோஷத்தில் தொடங்கி, சைனஸைடிஸில் போய் முடியலாம்.

தீர்வுகள்
அடைப்பு நீக்க மருந்துகள் (Decongestants) Tylenol sinus/Advil sinus/Mucinex. இவை மருத்துவரின் சீட்டு இல்லாமல் கிடைக்கும்.
காய்ச்சல் மருந்துகள் தேவைப்படலாம். Tylenol, Advil
நுண்ணுயிர்க் கிருமிகளை அழிக்க மருந்துகள்- Antibiotics

அடிக்கடி சைனஸைடிஸ் வந்து அவதிப்படுவோருக்கு மருந்துக் கடையில் விற்கப்படும் நேதி கிண்டி (Neti pot) பெரிதும் உதவும். இதன் மூலம் எலும்புக் காற்றறை அடைப்பை நீக்கலாம். தினமும் இரு வேளை வெதுவெதுப்பான நீரில் சற்று உப்பைக் கரைத்து, அந்தக் கரைசலை மூக்கின் ஒரு துவாரம் வழியே செலுத்தி, மறு துவாரம் வழியே வரச் செய்ய வேண்டும். அடைப்பு இல்லாதபோதும் தினமும் செய்து வந்தால் அடைப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நல்ல காய்கறிகள் பழங்கள், குறிப்பாக ஆரஞ்சு போன்றவை, வைட்டமின் மூலம் நமது எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும். ஒரு நாளுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். இதன் மூலமும் எதிர்ப்புச் சக்தி பெருகும். ஒவ்வாமை இருப்பவர்கள் வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் ஒவ்வாமை மருந்துகளை முன்னரே எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு அருகிலிருக்கும் பண்ணையில் எடுத்த தேன் (neighborhood farm based Honey) இந்த ஒவ்வாமை நீக்க உதவலாம். இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லையென்ற போதும் ஒரு தேக்கரண்டி தேனைத் தினமும் உட்கொள்வதால் கெடுதல் இல்லை. முயற்சிக்கலாம். கூடுமானவரை நுண்ணுயிர்க் கொல்லி மருந்தை உட்கொள்ளாமல் அடைப்பை நீக்க முயற்சிப்பது நல்லது. கோழை பச்சை நிறத்தில் வந்தால் மட்டுமே நுண்ணுயிர்த் தொற்றுக்கு மருந்து உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி சைனஸைடிஸ் வந்து, ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை அவதிப்படுவோரும், அல்லது ஒருமுறை வந்தால் குணமாகாமல் பல வாரங்களுக்குத் தொடர்ந்து அவதிப்படுபவரும், சைனஸ் CT scan செய்யவேண்டி வரலாம். இவர்களுக்கு எலும்புக் காற்றறைகளில் தீவிர அடைப்பு இருந்தாலோ அல்லது மூக்கின் நடுப்பகுதி கோணலாக இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com