பாதை வேறு, போகும் வேகம் வேறு
அன்புள்ள சிநேகிதியே,

சமீபத்திய என்னுடைய அமெரிக்க வருகையில் நேர்ந்த ஏமாற்றத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். நான் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆறு வருடங்களாக என் இரண்டு பெண்களிடமும் வந்து தங்கிவிட்டுப் போகிறேன். தென்றல் பதிப்புகளை என் பெண்கள் எனக்காகச் சேர்த்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் Thendral never becomes outdated. அவ்வளவு ஆர்வத்துடன் நான் பழைய பிரதிகளைப் படிக்கும்போது எனக்கு என்னுடைய பள்ளி நாட்களில் ஆனந்தவிகடனில் வரும் தொடர்களை என் தோழியுடன் சென்று ரகசியமாகப் படித்தது நினைவிற்கு வந்தது. எங்கள் வீட்டில் புத்தகங்கள் வாங்க, படிக்கத் தடை. படிப்பு கெட்டுப் போய்விடும் என்பது ஒன்று; புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்பதுதான் உண்மையான காரணம். என் தோழியின் நிலைமை எங்களைவிட மோசம். எங்கள் வீட்டில் நிறையப் பேர் இருந்ததால் பணத்தட்டுப்பாடு. ஆனால் அவள் வீட்டில் இரண்டுபேர்தான் என்றாலும்கூட ஏழ்மை அதிகம். போரடிக்கிறது என்று சொல்லி எங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவாள். சாப்பாடு, காபி, டிஃபன் பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான். சேர்ந்து படிக்கிறோம் என்ற சாக்கில் எங்கள் இளமைக் கனவுகளைப் பங்குபோட்டுக் கொண்டோம். அவள் நன்கு படித்து, நல்ல மார்க் வாங்கி வடக்கில் ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். நான் ஆர்ட்ஸ் காலேஜ். முதல் இரண்டு வருடம் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வோம். அப்புறம் அவள் படிப்பில் பிஸியாகி விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பு விட்டுப் போயிற்று. என் திருமணத்திற்குக்கூட வரவில்லை. மேல்படிப்புக்கு அமெரிக்கா போய்விட்டதாகச் சொன்னார்கள். மறுபடியும் அவள் தன் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்தபோது ஆசை ஆசையாக நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். பிறகு ஒருமுறை அவள் வந்தபோது நான் பயிற்சி வகுப்பில் இருந்தேன். பின் குழந்தை வளர்ப்பு, பணியிட மாற்றம் என்று என் வாழ்க்கையில் நானும் மூழ்கிப் போய்விட்டேன்.

இந்த தடவை அமெரிக்கா வந்தபோது அவள் ஞாபகம் அடிக்கடி வந்ததால், அவளுடை இமெயில், போன் நம்பரைக் கண்டுபிடித்தேன். முதலில் மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வருவதற்கு முன்பாகவே நானே ஃபோனும் செய்தேன். அவள் மிகவும் நல்ல மாதிரியாகத்தான் பேசினாள். ஆனால், நான் பழைய விஷயங்களை அவளுக்கு ஞாபகப்படுத்தவேண்டி இருந்தது. அது எனக்குக் கொஞ்சம் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் பழசை நினைவுபடுத்திய பின் அவள் ஆர்வமாக இருப்பாள் என நினைத்தேன். ஆனால் அவள் அந்த அளவு உற்சாகம் காட்டவில்லை. பொதுவாக என் குடும்பம், பெண்கள் குறித்து விசாரித்தாள். தன் குடும்பம் பற்றிச் சொன்னாள். அதற்குள் இரண்டு, மூன்று தடவை அவளுக்கு வேறு ஃபோன் கால்கள் வந்து கொண்டிருந்தது. எங்கள் உரையாடல் விட்டு விட்டுத்தான் தொடர்ந்தது. கடைசியில் நானே, "இன்னொரு முறை பேசிக் கொள்ளலாம்" என்று சொன்னேன். அவளும் மிகப் பணிவாக எனக்கு நன்றி சொல்லி, நடுவில் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டு, திருப்பிக் கூப்பிடுவதாகச் சொல்லி முடித்தாள்.

அந்த ஃபோனை வைத்தவுடன் எனக்குள் அப்படி ஒரு ஏமாற்றம். 'வாடி', 'போடி' என்று பேசிக் கொள்வோம், சின்ன வயதில். இப்போதோ, "Oh", "Oh I see", "Is it", "Oh I remember", "Sorry", "Thank you" என்ற வார்த்தைகள்தான். அந்நியோன்யம் இல்லை. பார்த்து எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, எப்படி அந்தப் பழைய சிநேகிதத்தை மறக்க முடியும்? பூனைக்குட்டி போல எங்கள் வீட்டிலேயே பல வருடங்கள் வளைய வந்து, என் சகோதர சகோதரிகளுடன் ஒன்றாகப் பழகி, கேலி செய்து, என் அம்மாவின் சமையலைப் புகழ்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து... இன்று எல்லாமே nostalgic ஆனதால்தானே நான் அவளுடன் பேசுவதில் முனைப்பாக இருந்தேன். அவள் அந்தப் பழைய நாட்களை நினைவு கூர்ந்தபோது ஏதோ ஒரு சடங்குக்காகச் சந்தோஷப்பட்டது போலத்தான் தோன்றியதே தவிர, உற்சாகம் எதுவும் இல்லை. மருத்துவத்துறையில் அவள் மிகப் பிரபலமாக இருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். பணம், புகழ் எல்லாம் சேர்ந்து அந்த கர்வம் ஏற்பட்டதா? என்னைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மதிப்பு கொடுக்கப் பிடிக்கவில்லையா?

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் அவள் என்னை திருப்பிக் கூப்பிடவில்லை. மறுபடி மின்னஞ்சல் அனுப்பினேன், நான் இந்தியாவிற்கு சிலநாட்களில் கிளம்பிப் போக இருப்பதாக. "Good luck with your trip" என்று ஒரே வரி பதில் வந்தது. நேற்றைக்கு மறுபடி ஃபோன் செய்தேன். Voice mail தான். இதுவரை பதில் இல்லை. நாளைக்குக் கிளம்புகிறேன். சிநேகிதத்தில் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது என்று தத்துவார்த்தமாக நினைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். அப்படியும் ஒரு வெறுமை. உதட்டளவில் வெறும் உபசார வார்த்தைகள் யாருக்கு வேண்டும்? நீங்கள் "சிநேகிதியே" என்று அழைப்பதால் என்னுடைய சிநேகிதத்தைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டேன். மறுபடியும் அடுத்த வருடம் சந்திப்போம்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

சமீபத்தில் சில அருமையான தத்துவ உபதேசங்களைப் படித்தேன். அதில் ஒன்று. "உங்கள் உறவினரோ - நண்பரோ தாங்களாகவே உங்களை விட்டு விலகிப் போய் விட்டால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் அந்த உறவின் பாதை முடிந்து போய்விட்டது" என்பது!

எத்தனையோ வருடங்கள் தொடர்பு விட்டுப் போனாலும் சில சம்பவங்கள், சில உறவுகள் மனிதர்களின் நினைவுகளில் வந்து, வந்து போய்க் கொண்டிருக்கும். ஆனால் வாழ்க்கையின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும்போது, பெரும்பாலும் பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பின்னால் தள்ளிக் கொண்டேதான் முன்னேற வேண்டியிருக்கிறது. முன்னால் முளைத்து நிற்கும் உறவுகளை வளர்த்தெடுத்து பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் வரும்போது யாரையுமே குறை சொல்லமுடியாத நிலைமை. உங்கள் தோழி - தொழில், வாழ்க்கை கலாசாரப் பாதையில், நீங்கள் இருவரும் எதிரெதிர்ப் பாதையில், வெவ்வேறு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு உங்கள் கடமைகளிலிருந்து விடுபட்ட பிறகுதான் உங்களுக்கே உங்கள் பழைய பருவகால நினைவுகளை உசுப்பிவிட முடிந்திருக்கிறது. உங்கள் தோழி அமெரிக்க கலாசரத்தில் தன் தொழில், வாழ்க்கை என அனைத்தையும் அமைத்துக்கொண்ட நிலையில், அவருடைய காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டிய நிலையில், எதையும் அசைபோட நேரமிருப்பதில்லை. நீங்கள் சீனிக் ரோடில் இப்போது போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கோ ஹைவேயில் போக வேண்டிய நிர்ப்பந்தம்.

We miss reminiscing fine moments of our life. எல்லாவற்றிற்கும் ஒரு விலை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். எனக்கு உங்கள் ஏமாற்றம் புரிகிறது. வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய சிநேகிதம் இந்தக் காலகட்டத்தில் அவருக்கு - உங்கள் தோழிக்கு - எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவரும் நேரத்தின் அழுத்தம் இல்லாத ஒரு பாதையில் போகச் சந்தர்ப்பம் கிடைத்தால் பழைய சம்பவங்களை அசைபோடுவார். அப்போது உங்களுடன் பகிர்ந்த நாட்களை நினைத்துக் கொண்டால் உங்களுக்கு ஃபோன் செய்ய வேண்டும், மின்னஞ்சல் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், மறுபடியும் தன்னுடைய baseக்கு வந்து விட்டால் அவ்வாறு செய்வாரா என்பது தெரியாது.

என்னுடைய கருத்து - நீங்கள் இவரைப் பற்றி நினைப்பது போலவே ஏதாவது ஒரு தோழி உங்களைப் பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார். அவரும் உங்கள் பாதையில் போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்பு கொள்ளுங்கள். மாற்றங்களைப் புரிந்து கொண்டால் ஏமாற்றம் குறைந்துவிடும்.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com