பிரணவ் கல்யாண்
கலிஃபோர்னியாவின் வில்லோ துவக்கப்பள்ளியில் நான்காவது கிரேடு படிக்கிறார் பிரணவ் கல்யாண். ஒன்பது வயதே ஆன இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ASP.NET (Microsoft Certified Technology Specialist) தேர்வில் வென்று 'உலகின் மிக இளைய தொழில்நுட்ப வல்லுனர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். பிரணவுக்கு இளம் வயதிலிருந்தே கம்ப்யூட்டர் என்றால் கொள்ளை இஷ்டம். பொம்மைகளுடன் விளையாடுவதற்கு பதிலாக கம்ப்யூட்டருடன்தான் விளையாடுவார். SAGEல் மென்பொருள் பணியாளராக இருக்கும் குடும்ப நண்பர் மணிவண்ணன் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை இரண்டு வயது பிரணவுக்கு அறிமுகப்படுத்தினார். தந்தை கல்யாணும் சில கணினி நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க, ஆறு வயதிலேயே மென்பொருள் எழுத ஆரம்பித்து விட்டார் பிரணவ். இன்ஃபோசிஸில் தொழில்நுட்ப வல்லுநர் நதியா, பிரணவின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். பிரணவ் MCTS சான்றிதழ் பெறக் குடும்ப நண்பர் சதீஷ் துணை நின்றார். பாங்க் ஆஃப் அமெரிக்காவில் பணியாற்றும் ஜோனாதான் வுட்பரி, ஜோனாதான் யுன் இருவரும் பிரணவ் இந்தச் சாதனையை நிகழ்த்த உதவினர்.

பிரணவின் தந்தை கல்யாண், மதுரை மாவட்டம், பாலமேட்டைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கிய இவர் தற்போது பாங்க் ஆஃப் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கிளையில் பணியாற்றுகிறார். பிரணவின் தாய் விசாலாட்சி அதே வங்கிக் கிளையில் நிதிநிலை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர் Certified Professional Accountant தகுதி பெற்றவர். பிரணவின் தங்கை ஸ்ரியா இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

பிரணவ், தேசிய அளவில் நடந்த கணிதத் தேனீ (Math Bee) போட்டியில் பங்கு பெற்றவர். பள்ளிகளுக்கியையே நடந்த செஸ் போட்டியில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். செஸ், கிரிக்கெட், சாக்கர் ஆடுவது மிகவும் பிடித்தமானது. விஞ்ஞானி ஆவது எதிர்கால லட்சியம். இதைத் தவற விடாதீர்கள்.


© TamilOnline.com