தலசயனப் பெருமாள் கோவிலுக்கு
('மாணிக்க வீணை' நாவலிலிருந்து ஒரு பகுதி)

காம்போஜத்திலிருந்து கப்பலில் பல்லவ நாட்டிற்கு வருகிறார் ஒரு பெரியவர். உடன் சைலேந்திரி என்ற பெண்ணும் வருகிறாள். சமையல் உதவி ஆளாக வருகிறான் நரேந்திரன் என்னும் இளைஞன். அவர்கள் பயணித்த கப்பல் மல்லைத் துறைமுகத்தை நெருங்குகிறது இனி...

(அத்தியாயம்: 2)

கடல்மல்லைத் துறையில் இறங்கியவுடன் சுற்றுமுற்றும் பார்த்த சைலேந்திரிக்கு, தனக்கு ஏற்பட்டது வியப்பா, அதிர்ச்சியா என்பது புரியவில்லை. மரக்கலத்திலிருந்து பார்த்தபோது நிழலுருவமாகத் தெரிந்த தலசயனக் கோயில் அவர்கள் கரை இறங்கிய இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தது.

பரதவர்கள் வாழும் குடிசைகளும், பண்டங்களைச் சேமித்து வைக்கும் பெரிய கல் கட்டடங்களையும் தாண்டி நகரத்திற்குள் நுழைந்தவுடனேயே மாமல்லையின் வளமும் செழிப்பும் பல வகைகளில் தென்பட்டன. சாலையில் புத்தாடை அணிந்து பெண்களும் ஆண்களும் மகிழ்ச்சியுடன் பேசியவாறு சென்று கொண்டிருந்தனர். பெண்கள் விலையுயர்ந்த ஆபரணங்களைப் பூண்டிருந்தனர். சிலருடைய பாதங்களைத் தங்கச் சிலம்புகள் அணி செய்தன.

மயில்தோகை போன்ற நீண்ட கூந்தலை உடைய பெண்களையும் ஆடவர்களுடன் கை கோர்த்துப் பேசிச் செல்வதையும் பார்க்கப் பார்க்க சைலேந்திரிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு மெல்ல நடந்தாள்.

மரக்கலத்திலிருந்து இறக்கப்பட்ட பண்டங்களைச் சுமந்து இரட்டை மாட்டு வண்டிகளும், குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கும் வண்டிகளும் சாலையில் சென்றன. யானைகள் அசைந்தாடிச் சென்றன. வெள்ளைக் குதிரைகள் மீது வீரர்கள் அமர்ந்து ரிஷபக் கொடியை ஏந்தி விரைந்து சென்றனர். பெரியவரும், சைலேந்திரியும் நடக்க, அவர்கள் கொண்டுவந்த பண்டங்களைச் சுமந்து கொண்டு, பணியாள் ஒருவன் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

"சைலேந்திரி, உன் வீணையை அவனிடம் கொடுக்காமல் நீயே எடுத்து வருகிறாயே, கைகள் நோகாவா?" என்று பெரியவர் கேட்டார். "மிகவும் பயபக்தியுடன் எடுத்து வர வேண்டிய பூசைப் பெட்டியைக் கூட நான் சுமை தூக்குபவனிடம் கொடுத்திருக்கிறேன்" என்றார்.

"நீங்கள் பூசிக்கும் தேவியை விட, இந்த வீணையை நான் மிக பயபக்தியுடன் வணங்குகிறேன். நான் வேறு, கலை வேறு இல்லை. நானே தூக்கி வருவதுதான் மரியாதை. இதில் எந்தவிதத் துன்பமும் இல்லை" என்றாள் சைலேந்திரி, வீணையைக் குழந்தையைப் போல் அணைத்தவாறு.

அவள் களைத்திருந்தாள். மரக்கலம் மாமல்லைக் கரையை அடையப் போகிறது என்பதை அறிந்த முதல் நாளிலிருந்தே பயணிகள் பரபரப்புடன் தங்கள் பொருள்களை எடுத்து வைத்துக்கொள்ளத் தொடங்கினர். பயணிகளுக்கு உணவு கொடுப்பதும் நிறுத்தப்பட்டது.

நரேந்திரன் மேலாடை கொண்டு மறைத்தவாறு ஒரு பாத்திரத்தில் கஞ்சி கொண்டு வந்தான். பொழுது நன்றாகப் புலர்ந்துவிட்டது.

"பெரியவரே, இன்று தேவி பூசை இல்லையா?"

"நரேந்திரா, உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன். பூசைப் பாத்திரங்கள், தேவியின் சிலை எல்லாம் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டேன். மிகவும் கவனமாக அவற்றை நான் கொண்டுசெல்ல வேண்டும்" என்றார்.

மேலாடை கொண்டு மறைத்திருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தான் நரேந்திரன். ஆவி பறக்கும் கஞ்சி.

"இதோ கஞ்சி; அருந்துங்கள். இனி இந்தக் கப்பலில் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்காது. மற்றவருக்குத் தெரியாமல் இதை எடுத்து வந்தேன்" என்று கூறி, அந்தப் பாத்திரத்தை சைலேந்திரியிடம் நீட்டினான்.

பெரியவருக்கு சற்று எரிச்சல்தான். தன்னிடம் தராமல் அவளிடம் கொடுக்கிறான்; 'மரியாதை தெரியாதவன்' என்று முணுமுணுத்துக் கொண்டார்.

"நொய்க் கஞ்சி... ஆகா... தேவ அமுதம் போலிருக்கிறது" என்றாள் சைலேந்திரி, ஒரு வாய் பருகியபடி.

"பசி வேளையில் எல்லாம் அமுதம்தான்!" பெரியவர் அவனை எரிச்சலுடன் நோக்கினார்.

அவள், அவனை நேருக்குநேர் பார்த்துப் பேசுவது இதுவே முதல் தடவை. விழிகளும் இதழ்களும் மெல்ல நகைத்துக் கொண்டன.

'சைலேந்திரி மீண்டும் உன்னுடன் பேச வாய்ப்புக் கிடைக்குமா?' என்ற ஆவல் அவனிடமும் எழுந்தது.

"கரை இறங்கியவுடன் மாமல்லையில் தங்கிப் பிறகு உங்கள் ஊருக்குச் செல்லப் போகிறீர்களா?" நரேந்திரன் பெரியவரைப் பார்த்துக் கேட்டான்.

அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தால் அவர்களைப் பற்றி பல செய்திகளை அறியலாம்.

சைலேந்திரி பருகிவிட்டு மீதியைப் பெரியவரிடம் கொடுத்தாள்.

நரேந்திரன் கேட்ட கேள்விக்கு சைலேந்திரியே விடை கூறினாள். அவனுடன் ஏதாவது பேச வேண்டும். நல்ல வாய்ப்பு. இவ்வளவு நாள்கள் அவள், அவனை அலட்சியப்படுத்தியது உண்மைதான்.

"ஒருநாள்கூடத் தாமதிக்காமல் காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பதுதான் என் திட்டம்" என்றாள் சைலேந்திரி.

"காஞ்சிபுரத்தில் உங்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா?"

"இருந்தார்கள். இப்போது இருக்கிறார்களா என்று தெரியாது. முகவரி ஒன்றை என் தாய் கொடுத்துள்ளாள்."

அவர்கள் இருவருடைய உரையாடல் தொடர்வதைக் கேட்கச் சகிக்காத பெரியவர், "இல்லை. இல்லை. எங்கள் திட்டமே வேறு" என்று கூறி, கஞ்சிப் பாத்திரத்தை அவனிடம் நீட்டி, "தேவ அமுதம் போலிருக்கிறது. இன்னும் இருந்தால் பருகலாம்..." என்றார்.

"பசி வேளையில் எல்லாம் அமுதம்தான்" என்றாள் சைலேந்திரி மெல்ல நகைத்தவாறு. நரேந்திரன் சிரித்திருக்கக் கூடாது. பசிக்குக் கஞ்சி கொடுத்தானே என்ற நன்றிகூட இல்லாமல் பெரியவர் கடுமையாக நோக்கினார்.

"நங்கூரம் பாய்ச்ச அதோ ஆட்கள் வந்து விட்டார்கள். இனி நான் இங்கே தாமதிக்கக் கூடாது" என்றான் நரேந்திரன்.

"நீங்கள் எல்லாம் உடனே கரை இறங்கி விடுவீர்கள். நான் கரைக்கு வர இரண்டு நாள்களாவது ஆகும்" என்றான் நரேந்திரன், சைலேந்திரியை நோக்கியவாறு.

கலத்தின் அடித்தளத்திலுள்ள சமையற்கூடத்திற்கு அவன் சென்றுவிட்டான். நரேந்திரன் செல்வதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கீழ்த்தளம் செல்லும் படிக்கட்டுக்களில் இறங்கு முன்பு, அவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அவள், தன்னைப் பார்த்தவாறு நிற்கிறாள் என்பது அவனுக்கு ஒரு சுக அனுபவமாக இருந்தது. அவன் திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்தாள். அப்படியே நடந்தது.

பாய்களை இறக்கிச் சுருட்டிக் கட்ட முயல்பவர்களும் பெரும் இரைச்சலுடன் நங்கூரத்தைக் கடலில் பாய்ச்ச முயல்பவர்களுமாக மேல்தளத்தில் கலத்தின் அத்தனைப் பணியாளர்களும் கூடிவிட்டனர்.

மரக்கலத்திலிருந்து சிறு படகில் இறங்கினார்கள். படகு கரையை அடைந்தது. அவர்கள் கொண்டுவந்த பொருள்களைக் கரையில் சேர்த்தது. சிலரது உறவினர்கள் அவரவர்களது பொருள்களைச் சுமந்து செல்ல, இளைஞன் ஒருவன் வந்தான்.

"தலசயனக் கோயிலுக்குச் செல்லவேண்டும்" என்றார் பெரியவர், சுமைகளைச் சுமந்து வருபவனை நோக்கி.

"இந்த வழியேதான் செல்லவேண்டும்" என்றான் சுமைதூக்கி.

"அதிக தொலைவோ? கப்பலிலிருந்து பார்த்தபோது, கோயிலின் அருகே கரை இறங்கப் போகிறோம் என்று தோன்றியது" என்றார் பெரியவர்.

"இந்த நாட்டிற்குப் புதியவரோ தாங்கள்?" என்று கேட்டான் சுமைதூக்கி.

"எதைக் கொண்டு அப்படிக் கேட்கிறாய்?"

"கப்பலிலிருந்து இறங்குவோர், நகரத்திற்குள் உடனே செல்ல மாட்டார்கள். கரையருகே வணிகர்கள் விடுதி இருக்கிறது. நானாதேயத்தார் விடுதி இருக்கிறது. அவரவர்களுக்கு விருப்பமான இடத்தில் தங்கி இளைப்பாறித்தான் புறப்படுவார்கள். அதனால் கேட்டேன்."

"எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நீயும் எனக்கு யோசனை சொல்லவில்லை. கடற்கரை அருகே தங்க இடம் இருக்கிறதா?" என்று சுமைதூக்கியிடம் கேட்டார் பெரியவர்.

"நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள் என்பது எனக்கு எப்படித் தெரியும்? பூஞ்சேரிக்குச் செல்கிறீர்கள் என்று எண்ணினேன். கூண்டு வண்டியொன்றை ஏற்பாடு செய்துவிடலாம் என்று நினைத்தேன்."

"பூஞ்சேரியா? அங்கே நாங்கள் செல்லக்கூடும் என்று நீ நினைக்கக் காரணமென்ன?" என்று பெரியவர் கேட்டார்.

"தலைச்சுமையின் பாரம் அழுத்த, அவன் பேச முடியாமல் திணறுகிறான். நீங்கள் அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள். காஞ்சிபுரம் செல்ல வழி கேட்காமல் வேறு ஏதோ கேட்டு அவனைத் தொல்லைப் படுத்துகிறீர்கள்?" என்றாள் சைலேந்திரி.

"நாம் இப்போது காஞ்சிபுரம் செல்லப் போவதில்லை. மாமல்லபுரத்தில் சிலரைச் சந்திக்க வேண்டும்" என்றார் பெரியவர்.

"என்னிடம் சொல்லவில்லையே? என் தாய் தங்களிடம் சொல்லி அனுப்பியபடிச் செய்யுங்கள்; திட்டத்தை மாற்றாதீர்கள்" என்றாள் சைலேந்திரி சற்றுக் கடுமையாக, ஆனால் மெதுவாக. அவர்களுக்கிடையே பிணக்கு இருப்பதைச் சுமையாளிடம் புலப்படுத்த விரும்பாமல்.

"சைலேந்திரி, பல்லவ நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். உன் அம்மா என்ன சொல்லியிருக்கிறாள், நினைவிருக்கிறதா? 'சைலேந்திரி பெரியவர் உன் பாட்டனாரைப் போல. நீ புதிய இடத்திற்குச் செல்கிறாய். புதிய இடம் மட்டுமன்று; புதிய நாடு' என்று சொன்னதை மறந்து விட்டாயா?"

சைலேந்திரி மறக்கவில்லை. விழிகளில் நீர்மல்கப் பிரியாவிடை கொடுத்து, தன் தாய் கூறிய அறிவுரைகளை அவள் மறக்கவில்லை. ஆரத்தழுவி உச்சி முகர்ந்து முதுகை அன்புடன் வருடியபோது ஒரு சொட்டுக் கண்ணீர் தன் கன்னத்தில் வீழ்ந்ததை அவள் மறக்கவில்லை. அந்தக் கணத்தை, தாய்ப் பாசத்தின் பிரதிபலிப்பாக அமைந்த அந்தக் கணத்தை. "தாயைப் பிரிந்து பல்லவ நாட்டிற்குச் சென்றுதானாக வேண்டுமா" என்றுகூட ஒரு கணம் எண்ணினாள்.

"அம்மா, உன்னை விட்டுப் பிரிந்து கண்காணாத நாட்டில் நான் எப்படி அம்மா இருப்பேன்? இந்தப் பயணம் தேவைதானா?" என்று கேட்டு விம்மினாள்.

தான் கண்கலங்குவதால்தான் தன் மகள் சைலேந்திரி உணர்ச்சி மிகுதியால் பிரிவாற்றாமையால் வருந்துகிறாள் என்று எண்ணிய சைலேந்திரியின் தாய், தன் விழிநீரைத் துடைத்துக் கொண்டு, பாசத்தை அடக்கிக்கொண்டு, "என் அறிவுதான் மங்கிவிட்டது என்றால், உன் கலைத்தாகமும் வற்றி விட்டதா? மகளே, இந்த நாட்டில் உன் கலைப் புலமையை வளர்க்கத் தகுந்த கலைஞர்கள் இல்லை. வீணை வாசிப்பதில் மிகுந்த திறமை பெறுவதற்காக மட்டுமா பல்லவ நாட்டிற்குச் செல்கிறாய்? மற்றுமொரு முக்கிய செய்தியை உன்னிடம் நான் தெரிவித்ததை அதற்குள் மறந்து விட்டாயா?" என்று கேட்டாள். முன்பிருந்த துயரம், தாயின் குரலில் இல்லை. உறுதி இருந்தது.

தாயின் குரல் அவளுக்குப் புத்துணர்வை அளித்தது. கலை மேதையாவதற்கு மட்டும் பல்லவ நாட்டிற்குச் செல்லவில்லை. அதைவிட மிக முக்கியமான செய்தி ஒன்றை தாய் சொல்லியிருக்கிறாள். அதை நிறைவேற்றியாக வேண்டும்.

என்ன செய்தி? தன் தந்தையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும்.

அது பெரியவருக்குத் தெரியும். அதனால் பெரியவர் சொல்லை அவளால் தட்ட முடியவில்லை.

"சரி பாட்டா" என்று தலையசைத்து, "போகுமிடத்தை அவனிடம் சொல்லுங்கள். இனியும் தாமதப்படுத்த வேண்டாம்" என்றாள்.

பெரியவர், வெற்றிப் பெருமிதத்தில், "தலசயனப் பெருமாள் கோயில் அருகே செல்ல வேண்டும்" என்றார்.

"பெரியவரே, அவ்வளவு தொலைவு என்னால் சுமந்தபடி நடக்க முடியாது. உங்களுக்கு ஓர் குதிரையும், உங்கள் பெயர்த்திக்கு சிவிகையும் ஏற்பாடு செய்து தருகிறேன்" என்றார் சுமைக்கூலி.

"அதெல்லாம் வேண்டாம். பார்த்தால் இளம் வயதினனாக இருக்கிறாய். எங்கள் பொருள்கள் அப்படி ஒரு கனமா? சுமப்பது சிரமமா?" என்று கோபமாகப் பேசினார்.

சாலையின் ஓரம் நின்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, வெண்புரவியின் மீதமர்ந்த நடுத்தர வயதுடையவன் அவர்களை மிக அருகே கடந்து சென்றான். சிறிது தொலைவு சென்றவன் மீண்டும் திரும்பி வந்து, "காம்போஜத்திலிருந்து தானே வருகிறீர்கள்?" என்று கேட்டான். பெரியவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய பொல்லாத விழிகள் அருகே நின்ற சைலேந்திரியை விழுங்கி விடத் தவறவில்லை. சைலேந்திரி, அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"காம்போஜத்திலிருந்து நாங்கள் வருகிறோமென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" பெரியவர் வியப்புடன் கேட்டார்.

குதிரை வீரன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் கபடம் நிறைந்திருப்பதாக சைலேந்திரிக்குத் தோன்றியது.

விக்கிரமன்

© TamilOnline.com