விக்கிரமன்
வரலாற்று நாவலாசிரியர் வரிசையில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை ('மோகனாங்கி') தொடங்கி, கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா.பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன் எனப் பலர் பங்களித்துள்ளனர். இதில் குறிப்பிடத் தகுந்தவர் விக்கிரமன். கல்கி, சாண்டில்யனை அடுத்து அதிகமான வரலாற்று நாவல்களை எழுதியிருக்கும் விக்கிரமனின் இயற்பெயர் வேம்பு. கல்கி எழுதிய பார்த்திபன் கனவின் கதாபாத்திரமான விக்கிரமனின்பால் ஈர்க்கப்பட்டு அப்பெயரைச் சூட்டிக்கொண்டார். பள்ளியில் படிக்கும்போதே எழுத்தார்வம் வந்துவிட்டது. பாரதி கவிதைகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த, சுப்ரமண்யம் என்ற நண்பருடன் இணைந்து 'தமிழ்ச்சுடர்' என்னும் கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்தார். அப்போது வயது பன்னிரண்டு. சுதந்திர உணர்வூட்டும் பல கட்டுரைகள், கவிதைகள் தமிழ்ச் சுடரில் வெளியாகின. சானவி, சு.வே.சுயோதனன், பாண்டியன், விக்கிரமன் எனப் பல புனைபெயர்களில் அதில் எழுதினார். சக்தி வை. கோவிந்தன், நா. நாராயண அய்யங்கார், 'சண்டே டைம்ஸ்' எம்.சி. சுப்ரமணியம், ராஜாஜி உள்ளிட்ட பலர் அந்த இதழுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

ஒருமுறை தமிழ்ச்சுடர் இதழைக் கண்ட ஏ.கே.செட்டியார் விக்கிரமனைப் பாராட்டியதுடன், காகிதம் மற்றும் பைண்டு செய்வதற்கான செலவுகளைத் தாமே ஏற்றுக் கொண்டார். செட்டியாருடனான சந்திப்பு விக்கிரமன் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. 1942ல், பதினான்காம் வயதில் 'வள்ளி கணவன்' என்ற சிறுகதையை நவீனன் ஆசிரியராக இருந்த, புகழ்பெற்ற 'மாலதி' பத்திரிகைக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. பின்னர் 'விளையாட்டுக் கல்யாணம்' என்ற சிறுகதையும் அவரது இயற்பெயரிலேயே வெளியானது. தொடர்ந்து எழுதலானார்.

பேரா. ரா.பி. சேதுப்பிள்ளையால் 'அமுதசுரபி' எனப் பெயர் சூட்டப்பட்டு மாத இதழ் ஒன்று வெளியானது. வித்வான் வே. லட்சுமணன் அதன் ஆசிரியராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அப்பொறுப்பிலிருந்து விலகினார். நிர்வாகமும் சீர் குலைந்தது. அந்த நிலையில் ஆசிரியர் மற்றும் நிர்வாகி என இரு பொறுப்புகளையும் துணிச்சலாக ஏற்றுக் கொண்டார் விக்கிரமன். கடுமையாக உழைத்து விரைவிலேயே அமுதசுரபியை முன்னணி இதழாக்கினார். சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன், தேசிகவிநாயகம் பிள்ளை, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, ம.பொ. சிவஞானம், மா. இராசமாணிக்கனார், த.நா. குமாரசுவாமி, லா.ச.ரா, தி. ஜானகிராமன், டாக்டர் மு.வ., ஜெயகாந்தன், தமிழ்வாணன் என இலக்கியத்தின் பல தளங்களில் உள்ளவர்கள் அமுதசுரபியில் எழுதினர். அதில் படைப்பு தொடர்ந்து வெளிவருவது ஒரு கௌரவமாக அக்காலத்தில் கருதப் பெற்றது. 'சோமலெ' எழுதிய முதல் கட்டுரையைப் பிரசுரித்தவர் விக்கிரமன். எழுத்தார்வம் கொண்ட இளைஞர்கள் பலரையும் ஊக்குவித்தார்.

ஓவியர் ஸுபாவுடன் இணைந்து இவர் செய்த வரலாற்றுப் பயணங்கள் குறித்த கட்டுரைகள் சிறப்பானவை. பல்லவர் வரலாற்றில் விக்கிரமனுக்குத் தனி ஈடுபாடு. பல்லவ மன்னர்கள் குறித்துப் பல நாவல்களை எழுதியுள்ளார். அமுதசுரபியில் ஐம்பத்திரண்டு ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றியபின் ஓய்வு பெற்றார். 1997ல் 'இலக்கிய பீடம்' என்ற இலக்கிய இதழைத் தொடங்கிய விக்கிரமன்
, தரமான சுவையான தமிழில் பல கட்டுரைகளை, சிறுகதைகளைக் கொண்டதாக அதை வெளியிட்டு வருகிறார். தனது இதழியல் அனுபவங்களை, வாழ்க்கையை 'நினைத்துப் பார்க்கிறேன்' என்கிற தலைப்பில் அதில் எழுதி வருகிறார்.

"கல்கிக்குப் பிறகு வரலாற்று நாவல்களில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர் விக்கிரமன்" என்கிறார் ஜெயகாந்தன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவரை 'முத்தமிழ் அன்பர்' என்று பாராட்டுகிறார். இவரது சிறுகதைத் திறனைப் பாராட்டி 'சிறுகதைச் சேக்கிழார்' என்று பட்டம் சூட்டியுள்ளார் சிலம்பொலி செல்லப்பன். 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்' என்று போற்றப்படும் விக்கிரமனை 'சரித்திர நாவலாசிரியர்' என்ற தலைப்பிற்குள் அடைத்துவிட முடியாது. சரித்திர நாவல்களுக்கு இணையாக சமூகச் சிறுகதை, நாவல், கட்டுரை, வரலாற்றுப் பயணக் குறிப்பு என்று நிறைய எழுதியிருக்கிறார். கவிதை, நாடகம், சிறுவர் கதை, பேச்சு, இதழ் பதிப்பு என எழுத்துத் துறையில் இவர் கையாளாதவையே இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக எழுதிய 'நந்திபுரத்து நாயகி' விக்கிரமனின் ஆளுமையைப் பறைசாற்றியது. 'காஞ்சி சுந்தரி', 'உதயசந்திரன்', 'ராஜராஜன் சபதம்', 'கோவூர் கூனன்', 'சித்திரவல்லி' என முப்பதுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவரது 'விக்கிரமனின் சிறுகதைக் களஞ்சியம்' எழுபது சிறுகதைகளைக் கொண்டது. இவற்றுக்குப் பிரபல எழுத்தாளர்கள் எழுபது பேர் அறிமுக உரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய 'தமிழ் நாட்டில் தெலுங்கு மன்னர்கள்' என்ற ஆங்கில நூலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. தமிழறிஞர்கள், சான்றோர்கள் பற்றி இவர் தினமணி இதழில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றவை. குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில், காலத்திற்கேற்ற சமூக நாவல்கள் எழுதி வருகிறார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தை நிறுவிய பெருமை விக்கிரமனுக்கு உண்டு. கல்கி தலைமையில் எழுத்தாளர் சங்கம் அமைந்தபோது விக்கிரமன் அதன் செயற்குழு பொறுப்பாளராகப் பணியாற்றினார். 1968ல் அதன் தலைவரானார். பாரதியின் புகழைப் பரப்பி வரும் 'பாரதி கலைக்கழகம்' உருவானதிலும் இவரது பங்கு முக்கியமானது. 'தமிழ்நாடு கையெழுத்துப் பத்திரிகை எழுத்தாளர் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி, 1945ல் எழுத்தாளர் நாடோடி தலைமையில் மாநாடு நடத்தியிருக்கிறார். பல எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருவதற்கும், எழுத்தாளர்களுக்குக் கடனுதவி செய்வதற்கும் 1962ல் த.நா. குமாரசாமி, சாண்டில்யன் ஆகியோருடன் இணைந்து எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். பின்னார் அந்த அமைப்பு சில சச்சரவுகளால் செயல்படாமல் போனது. 1977ல் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்களித்தார். அதன் தலைவர், பொதுச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார். இன்று அதன் தலைவராக இருக்கிறார். 'இலக்கிய நந்தவனம்' எனும் இதழும் சங்கத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது.

எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை வாழ்நாள் கடமையாகவே செய்து வரும் விக்கிரமன், இலக்கிய பீடம் அமைப்பு மூலம் சிறந்த படைப்பாளிகளுக்கு 'இலக்கிய பீட விருது' மற்றும் 10,000 ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். பா. ராகவன், ஷைலஜா உள்ளிட்ட பலர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தவிர, திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி 5,000 ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். பரிசு பெற்ற நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வாயிலாக வெளியிடுகிறார். 'விக்கிரமன் பதிப்பகம்' என்ற தமது பதிப்பகத்தின் மூலமும் நூல்களை வெளியிடுகிறார். 'கவிதை உறவு' ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'விக்கிரமன் விருது' வழங்குகிறார்.

விக்கிரமன் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது நீண்ட இதழியல், இலக்கிய சேவையைப் பாராட்டி தினந்தந்தியின் 'சி.பா. ஆதித்தனார் விருது' இவருக்கு அண்மையில் வழங்கப்பட்டது. "அரசு சினிமா, தொலைக்காட்சி போன்றவைகளில் செலுத்தும் கவனத்தை நல்ல இலக்கிய விஷயத்திலும் காட்டி இலக்கிய எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருது கூடுதலாக அளிக்க முன்வர வேண்டும்" என்பது இவரது பல்லாண்டு காலக் கோரிக்கை. "திருவையாறில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்கள் கூடி ஆராதனை விழா நடத்துகிறார்கள். அதுபோல பாரதி பிறந்த நாளில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எட்டையபுரத்தில் திரண்டு மகாகவிக்குப் புகழஞ்சலி செலுத்த வேண்டும் என்பது விக்கிரமனின் கோரிக்கைகளுள் ஒன்று. இன்றும் தீவிரமாக இயங்கி வரும் விக்கிரமன், எழுத்து, பத்திரிகைத் துறைகளில் எழுபது வருட அனுபவம் கொண்ட ஒரே எழுத்தாளர்.

அரவிந்த்

© TamilOnline.com