தாரிணியின் நடன அரங்கேற்றம்
ஜனவரி 21, 2006 அன்று சான்ஹொசே CET மையத்தில் தாரிணி சுப்ரமணியத்தின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

ஐயப்ப வந்தனத்தை அடுத்து நாட்டையில் நளினமுடன் நடராஜர் காலடியில் புஷ்பாஞ்சலி செய்தது நல்ல ஆரம்பம். 'அருள்மழை' எனும் விநாயகர் பாடலுக்கு ஆடிய பின் ஜதி ஸ்வரத்தில் நல்ல தீர்மானம், தாளக்கட்டுடன் இணைந்து ஆடித் திறமையை வெளிப் படுத்திய விதம் சிறப்பு.

அடுத்து 'சிவகாமசுந்தரி' எனும் பாடலில் 'என்னைச் சோதிக்க வேண்டாம்' என்னும் இடத்தில் காண்பித்த முகபாவம் உருக்கமாக இருந்தது. தொடர்ந்து தண்டாயுதபாணி அவர்களின் வர்ணத்துக்குத் தாளம் பிசகாமல் துள்ளலுடன் ஆடி அவையோரை மகிழவைத்தார்.

'அறுபடை வீடமர்ந்த' என்னும் ராக மாலிகை பாடலுக்கான அபிநயம் நிகழ்ச்சி யின் சிகரமாக அமைந்தது. மாற்றி மாற்றி வெவ்வேறு ரசங்களைக் கொணர்ந்ததில் மாணவியின் திறமை பளிச்சிட்டது.

'என்ன தவம் செய்தனை' (பாபநாசம் சிவன்), 'மாலைப் பொழுதினிலே' (கல்கி கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பாடல்களுக்கு கண்ணன், முருகன் சிறப்புகளை அழகாகச் சித்தரித்தார். விறுவிறுப்பான தில்லானா வுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

காதுக்கினிய பாடல்கள், சிறந்த பக்க வாத்யம், பாடல்களின் பொருள் புரிந்து, தன்னம்பிக்கையுடன் உழைத்து ஆடிய மாணவி, குருவின் சிறந்த பயிற்சி எல்லாம் சேர்ந்து சிறப்பானதொரு அரங்கேற்ற நிகழ்ச்சியை வழங்கின.

சீதா துரைராஜ்

© TamilOnline.com