டிசம்பர் 8, 2012 அன்று சிகாகோ லெமான்ட் கோவில் அரங்கத்தில் டிசம்பர் 8 அன்று கிட்டத்தட்ட 1000பேர் கலந்துகொண்ட தங்க முருகன் விழா 12வது ஆண்டாக நடந்தது. கணபதி பூஜை, முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், வள்ளி, தெய்வயானை சமேதராகப் பல்லக்கில் பவனி, செண்டை, வாத்ய இசை, காவடி ஆட்டம் என்று விழா காலையிலேயே களை கட்டியது. தலைவர் HTGL கோபால் சீனிவாசன் வரவேற்புரையுடன் பத்மா ராமன், கோபால கிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்கள் உமாபதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினார்கள். விழா மேடையில் பங்கேற்றவர்கள் 350 பேர். அதில் 300 பேர் குழந்தைகளே. 1-1/2 வயதிலிருந்து 7 வயதுக்குள் உள்ள 20 குழந்தைகள் அழகாக முருகனைப் போல் வேடமிட்டு 'யாமிருக்க பயமேன்' என்று மழலையில் மொழிந்தனர். இஸ்லாமிய, கிறித்துவக் குழந்தைகளும் கூட முருகன் வேடமிட்டிருந்தனர். நிகழ்ச்சியின் வெற்றியில் புவனா உமாபதி, புஷ்பா, ஆனந்தி ரத்னவேலு ஆகியோரின் உழைப்பு குறிப்பிடத் தக்கது.
குழந்தைகளின் பாடலும், டாக்டர் ராம் சாய் பாலா குழுவினரின் முருகன் பஜனைப் பாடல்களும் உள்ளத்தை உருக்கின. தேவகி ஜானகிராமன், சைலஜா ராமாயணம், பூர்ணா சேதுராமன், மரகதமணி, சிகாகோ பல்கலை இசைத்துறையினர், சங்கர் ஜகதீசய்யர் மற்றும் ராதே ஷ்யாம் கோவில் மாணவர்கள் பாடல்களைப் பாடினார்கள். வெங்கடேஷ் பத்மநாபனின் மாணவர்கள் வயலின் வாசித்தனர். வரலட்சுமி, பவிஷ், மகிமா பட்டர், ஸ்ரீகாந்த், யக்ஞேஷ், குமார், அதிஸ்ரீ உமாபதி ஆகியோர் பாடினர். சுபத்ரா ராம் சாய் கந்தர் அனுபூதி பாட, வெங்கடேஷ் லட்சுமணன், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுடன் இணைந்து வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் வாசித்தது வெகு நன்று. மினு பசுபதி அவர்களின் முருகனைப் பற்றிய இசை நாடகம் அக்ஷயா மியூசிக் அகாடமி குழந்தைகளால் அரங்கேற்றப்பட்டது. ஐங்கரன் தன் இசைக்குழுவினர் மற்றும் ரமா ரகுராமனுடன் இணைந்து முருகன் பாடல்கள் வழங்கினார். திருப்புகழ் வினாடி, வினா ஒரு புதுமை.
தேவகி ஜானகிராமன், சௌம்யா குமரன், வித்யா பாபு, ஹேமா ராஜகோபாலன், ஜயவில் அகிலா ஐயர், ரமா சுரேஷ், வனிதா வீரவள்ளி, அன்னபூர்ணா ராஜேஷ், மாணவ மாணவியர்கள் நாட்டியமாடினர். டெட்ராய்ட் வெங்கடலட்சுமி லட்சுமணன், தன் மகள் அபூர்வா சாயியுடன் ஆடிய நடனம் கவர்ந்தது. ப்ரியா நர்த்தகி நடனம், நாதன் தம்பிதுரை பக்திப் பாடல்கள் எனப் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பூமா சுந்தருடன் சுமேஷ் சுந்தரேசன் நடித்த 'பாட்டியும் பாலகனும்' சுவையாக இருந்தது. முருகன் பித்தராக கோபால கிருஷ்ணன் ஐஸ்க்ரீம் பெட்டியுடன் வந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியது கண்களைக் குளமாக்கியது. விழாவில் திரட்டிய நிதியை லெமான்ட் ஆலயத்திற்குத் தங்க முருகன் குழுவினர் வழங்கினர்.
உமையாள் முத்து |