டிசம்பர் 8, 2012 அன்று Youth Service Through Cultural Arts (YSTCA) என்ற சேவை அமைப்பு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி ஒன்றை சான் ஹோசேயிலுள்ள டொமினிகன் சிஸ்டர்ஸ் ஆஃப் மிஷன் பள்ளியில் நடத்தினர். உயர்நிலைப்பள்ளியில் 11வது கிரேடு படிக்கும் அஸ்வின் ஸ்ரீகாந்த், திவ்யா மோகன், கோபால் ரவீந்திரன், விக்னேஷ் தியாகராஜன் நால்வரும் சேர்ந்து, சமூக சேவை செய்யவென்றே இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளனர். நால்வருமே பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் கர்நாடக சங்கீதம் கற்பவர்கள். இவர்களின் முதல் நிகழ்ச்சியே டொமினிகன் சிஸ்டர்ஸ் பள்ளியின் இசை வகுப்புகள் நிதிப் பற்றாக்குறையால் நின்று போகாமலிருப்பதற்காகச் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஃப்ரீமாண்டின் துணைமேயர் அனு நடராஜன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
காலையில் இருந்து மாலைவரை இடைவிடாது நடந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா பஜனை மண்டலி, பைரவி மியூசிக் அகாடமி, ஸ்ரீ பாதுகா அகாடமி, சங்கீதாலயா ஸ்கூல் ஆஃப் மியூசிக், அகிலா ஐயர்ஸ் ஸ்கூல், மகதி மியூசிக் அகாடமி, ஸ்ருதிஸ்வரலயா, சத்குரு வித்யாலயா, நாதலஹிரி ஸ்கூல் ஆஃப் மியூசிக், நாதநிதி, நாதோபாசனா, ராஜ்குரு சங்கீத் வித்யாலயா போன்ற இசைப் பள்ளிகளில் இருந்தும், நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி, சங்கல்பா டான்ஸ் ஃபௌண்டேஷன் நடனப் பள்ளிகளிலிருந்தும் 148 மாணவ மணிகள் இயல், இசை விருந்து படைத்தார்கள். இறுதியில் YSTCA நிறுவனர் நால்வரும் சேர்ந்து செய்த இசைநிகழ்ச்சி எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைந்தது. அஸ்வின் ஸ்ரீகாந்த்தும் விக்னேஷ் தியாகராஜனும் இணைந்து பாட, திவ்யா மோகன் (வயலின்), கோபால் ரவீந்திரன் (மிருதங்கம்) என்று சென்னை மியூசிக் அகாடமியில் இரவுநேரக் கச்சேரி கேட்ட அனுபவம் ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட8050 டாலர் டொமினிகன் சிஸ்டர்ஸ் பள்ளிக்கு வழங்கப்பட்டது. மிஷனின் கன்யாஸ்திரீகள் எல்லோரையும் வாழ்த்திப் பாடினார்கள்.
ஃப்ரீமாண்டிலுள்ள லின்ப்ரூக் பள்ளி மாணவர் அஸ்வின், வாய்ப்பாட்டு வித்வான். கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனா உள்படப் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றவர். மிஷன் சான் ஹோசே பள்ளி மாணவி திவ்யா வாய்ப்பாட்டு மற்றும் வயலினில் தேர்ச்சி பெற்றவர். வாய்ப்பாட்டில் நெய்வேலி சந்தான கோபாலனிடமும், வயலினில் லால்குடி GJR கிருஷ்ணனிடமும் கற்கிறார். இவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வாய்ப்பாட்டு மற்றும் வயலின் கச்சேரிகள் செய்துள்ளார்.
இர்விங்டன் பள்ளியில் படிக்கும் கோபால் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்து பரிசும் பெயரும் பெற்றவர். பெரிய வித்வான்களுக்கும் பக்கம் வாசித்துள்ளார். ஐந்து வயதிலிருந்தே கர்நாடக இசை கற்கும் கூபர்டினோ பள்ளி மாணவர் விக்னேஷ் வாய்ப்பாட்டு, வயலின் இரண்டிலும் தேர்ந்தவர். இவர் மேற்கத்திய வயலினும் கற்கிறார்.
மேலும் தகவலுக்கு: www.carnaticchamberconcerts.com www.ystca.org
கிருஷ்ணசாமி நரசிம்மன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |