டிசமபர் 12, 2012 அன்று சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மில்பிடாஸ், கலிஃபோர்னியா சர்க்கிளில் உள்ள சாயி மந்திரில் நடைபெற்றது. 2014 ஜனவரி 12ம் தேதிவரை இந்தக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி ராமகிருஷ்ணன் உபநிஷத் ஓதலுடன் தொடங்கியது. சுன்னிலால் சஹா வரவேற்புரை நிகழ்த்தினார். சுவாமி அபரானந்தா அவர்களின் ஆசியுரையை சுதீப் மஜும்தார் வாசித்தார். தொடர்ந்து சுமிதா சக்கரவர்த்தியின் பக்தியிசை இடம்பெற்றது. பின்னர் சர்வலகு மிருதங்கம் தாளவாத்தியக் குழுவினரின் தாளவாத்தியக் கச்சேரி நடைபெற்றது. சீதாராமன் மகாதேவன், ஆனந்த் குருமூர்த்தி, விஷால் செட்லூர், அவினாஷ் ஆனந்த், கணபதிராம் விஸ்வநாதன், அக்ஷய் வெங்கடேசன், வருண் விஸ்வநாத் ஆகியோர் மிருதங்கம் வாசிக்க, அச்யுத் ஸ்ரீநிவாசன், விவேக் ரமணன் ஆகியோர் பாடிய இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவத்ஸன் தென்னாத்தூர், சத்யா ரமேஷ் ஆகியோர் வாய்ப்பாட்டு, மிருதங்கம் இரண்டிலும் பங்கேற்றனர். குரு ரமேஷ் ஸ்ரீநிவாஸன் இவர்களைப் பயிற்றுவித்திருந்தார்.
பின்னர் சுவாமி பிரஸன்னாத்மானந்தா உரை நிகழ்த்தினார். சான் ரமோன், கோல்டன் வியூ தொடக்கப்பள்ளி மாணவர் 10 வயதே ஆன ஆதித்யா சக்திகுமார் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை அழகாக வழங்கினார். தொடர்ந்து வித்யா சுப்ரமணியனின் 'லாஸ்யா நடனப் பள்ளி' மாணவிகள், சுஷ்மிதா ஸ்ரீகாந்த், கீர்த்தி வெங்கட், விவிதா மணி, த்விஷா ஜொய்ஸுலா, ஸ்ருதி பெரடி, மேதா நர்வாங்கர், காவ்யா பத்மநாபன், கல்பனா பிரஸாத், ஷ்ரியா பெரடி, நிஷ்கா ஐயர் ஆகியோரின் பரதநாட்டியம் இடம் பெற்றது. குரு வித்யா சுப்ரமணியம் இவற்றைச் சிறப்பாக வடிவமைத்திருந்தார். பிரபு வெங்கடேஷ் சுப்ரமணியன் வழங்கிய நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. அபி கணேஷ் பாபு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
விவரங்களுக்கு: www.celebratevivekananda.org
செய்திக்குறிப்பிலிருந்து தமிழில்: மீனாட்சி கணபதி |