ஜனவரி 2013: வாசகர் கடிதம்
தென்றலின் பல வருட வாசகி நான். இந்த மாதம் கதை, கட்டுரை எல்லாமே மிக அருமையான வாழ்க்கையின் நெருங்கிய அனுபவப் பகுதிகள். குறிப்பாக தேவி அண்ணாமலையின் கதை என்னை மிகவும் பாதித்தது. 'கல்லடி' பைபிளில் இருந்து எடுத்தாண்ட பாவமன்னிப்பும், மனிதனின் மனிதநேயமற்ற, வெறுக்கத்தக்க அன்பும் கருணையுமற்ற குணங்களைச் சுட்டிக்காட்டும் மிருகத் தன்மையும், இவை அத்தனையும் எடுத்தாண்ட கலைநயமும்... தேவி அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். எந்த நிலைமையிலும் தன் கதை நாயகியின் இறைத்தன்மையை விட்டுக் கொடுக்காமல், அவள் சுயமரியாதையைக் குலைத்து விடாமல், மிக அழகாக எடுத்துச் சென்று - 'பரம்பொருள் தந்த அரும் பொருளிடம்' ஒப்படைத்தது மிக அருமை. இந்தப் பாவமன்னிப்பு எல்லா மதத்தினருக்கும் பொதுவான அருளாசியாக இருக்கட்டும்.

மீனா நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சாஸ்

*****


பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய 'மாதவன் சார்' கதையின் ஒலிவடிவம் நன்றாக அமைந்திருந்தது. பாராட்டுக்கள்.

வைத்தியநாதன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

*****


தென்றல் என்ற பெயரே தேன்போல இனிக்கிறது. அதைப் படித்து மிகவும் ரசித்தேன். டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ஒவ்வொரு சொல்லும் நல்ல படிப்பினையாக உள்ளது. அவரது எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். அவருக்கு என் நன்றியைச் சொல்லவும்.

சந்திரசேகரன் குணசேகரன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

*****


விரைவில் தாயகம் திரும்ப இருக்கும் எனக்கு உற்ற துணைவனாய் இருந்த தென்றலுக்கு நன்றி சொல்வது என் கடமை. எங்கிருந்தாலும் என் வாசகர் கடிதம் தொடரும். தமிழ் நெஞ்சங்களுக்கு, ஏன், இந்திய மக்களுக்குத் தென்றல் ஆற்றும் பணி மகத்தானது. தென்றல் பேசுகிறது, தென்றல் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். மினி நேர்காணல், அறிமுக அடையாளம். மாயாபஜார் இல்லத்தரசிகளுக்கு இனிய சுவை. அன்புள்ள சிநேகிதியே அனைவரும் அறிய வேண்டிய அனுபவப் பாடம். ஹரிமொழி, குருமொழி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ப. ராமசாமி,
ட்ராய், மிசிகன்.

*****


டிசம்பர் இதழில் வீ.கே.டி. பாலன் நேர்காணல் இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது. ஓர் அடித்தட்டு மனிதர் தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் எவ்வாறு முன்னுக்கு வந்திருக்கிறார் என்பதை அறியும்போது மனது பூரிக்கிறது. இத்தகைய மனிதர்களை நேர்காணல் செய்து வெளியிட்ட தென்றலின் பணி மகத்தானது. டாக்டர் அழகப்பா அழகப்பனின் நேர்காணல் இன்னொரு விதத்தில் சிறப்பைக் கூட்டுகிறது. ஒரு தமிழன், தன் வசதி வாய்ப்புகள் பெருகுகிறபோது சமூகத்திலிருந்து அந்நியப்படாமல் தனது கல்வி, திறமை, வசதி இவற்றைத் தான் மட்டுமே சுகிக்காமல் சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை நல்கியிருக்கிறார், எல்லாத் தமிழர்களுக்கும் இந்த எண்ணம் வர வேண்டும், வரும் என்னும் நம்பிக்கையை அளிக்கின்றன அவரது அனுபவப் பகிர்வுகள்.

பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களைத் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள் திரும்பிக்கூடப் பார்க்காது. தென்றல் எல்லாத் தரப்பு வாசகர்கள், எழுத்தாளர்களுக்கும் மேடை அளித்துத் தனது உன்னதமான ஜனநாயகப் பண்பை நிலைநாட்டியிருக்கிறது. ஜனரஞ்சக எழுத்து என்பதும் சுலபமானது அல்ல என்பதை அவரது சிறப்புப் பார்வை மூலமே அறிய முடிகிறது. லட்சுமி சுப்ரமணியத்தின் 'பாட்டி சொன்ன கதை' அருமையான வார்ப்பு. விவிலியத்தில் வரும் மரியா மக்தலேனா பற்றிய செய்தியை மையமாக வைத்த தேவி அண்ணாமலையின் 'கல்லடி' நல்ல கதை. 'யாமினியின் மனசு' மனதைப் பிழிகிறது. 'டவுனில் சில வெள்ளாடுகள்' நல்ல சிறுகதை. அன்புள்ள சிநேகிதியின் 'மர்மக் கதை' அருமை. நடந்த நிகழ்ச்சி என்றாலும் அதை ஒரு கதைபோல எழுதியிருப்பதும், அதற்கு சித்ரா வைத்தீஸ்வரன் கொடுத்த பதிலும் சிறப்பு. வீணை எஸ். பாலசந்தர் பற்றிய கட்டுரை அவரது மேதைமையை அறிந்து கொள்ள உதவியது. பக்கவாத்தியம் இல்லாமலே கூட வாசிக்க முடியும் என்பதைச் சாதித்திருப்பது வியப்பான உண்மை. 'சமயம்' எழுதி வரும் சீதா துரைராஜ், தமிழகத்தின் கலைச் செல்வங்களான ஆலயங்கள், சிற்பங்கள், சமய இலக்கியத் தொடர்புகள் பற்றி சிறப்பாக அறிமுகப்படுத்தி வருகிறார். தென்றலின் 13வது ஆண்டுப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

இரவீந்திரபாரதி,
செடார் ராபிட்ஸ், அயோவா

*****


பதிமூன்றாம் படியை மிதித்து வெற்றிநடை போடும் 'தென்றல்', ஒரேயடியாக வண்ணப் பூரிகள் உட்படக் கலர்ஃபுல்லாக கண்ணைப் பறித்தது மட்டுமில்லாமல், பட்டுக்கோட்டை பிரபாகரின் 'மாதவன் சார்' சிறுகதையைப் படித்து முடித்தவுடன் கண்ணீரையும் வரவழைத்து விட்டது. அதுவும் “என் இறப்பினால் விதவை ஆக மனைவி கூட இல்லை” என்ற வரிகளைப் படித்தவுடன், அடடா...!

கமலா சுந்தர்,
வெஸ்ட் விண்ட்ஸர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com