டாமினோ எஃபெக்ட்
சமீபத்தில் இந்தியா செல்லுமுன் என் கணவரிடம் "நான் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு சர்ப்ரைஸாக கிங் சைஸ் படுக்கை வாங்கி வைப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நினைவில் இருக்கட்டும். மறக்க வேண்டாம்" என்று ஞாபகப்படுத்தினேன். என் தோழியும், மாணவியுமான உஷா லக்ஷ்மி நரசிம்மன் "என்னிடம் பெட் ஃப்ரேம் கராஜில் சும்மா கிடக்கிறது. நீங்கள் மேட்ரஸ் வாங்கினால் போதும்" என்று வேறு சொல்லிவிட்டாள்.

சொன்ன மாதிரியே நான் திரும்பி வந்தபோது 'சர்ப்ரைஸாக' எங்கள் படுக்கையறையில் ராணியிலிருந்து ராஜாவுக்கு மாறியிருந்தோம். அங்கேதான் ஆரம்பித்தது 'டாமினோ எஃபெக்ட்'.

முதலில் படுக்கை வெகு உயரத்தில் இருந்தது. அதில் ஏறிப் படுக்குமுன் 'ஜிம்னாஸ்டிக்ஸ்' செய்ய வேண்டியிருந்ததா! ஒரு குட்டி ஏணி (ஸ்டெப் லாடர்) வாங்கி வந்தேன். இதுதான் ஆரம்பம். (திருமணத்திற்குப் பின் மேசீஸ், ப்ளூமிங்க்டேல் கடைகளைவிட 'ஹோம் டிப்போ' போவதுதான் அதிகமாகி உள்ளது). இப்போது அதில் ஏறி ஒருவழியாகப் படுத்துக்கொள்ள முடிந்தது. ஜெட் லேக் என்று சொல்லி அன்றிரவு நன்றாகத் தூங்கிவிட்டேன்.

மறுநாள் எழுந்தபின் அவர் ஏற்கனவே வாங்கியிருந்த பெட் ஷீட்டுகளுக்கு மேலே முன்னே இருந்த க்வீன் சைஸ் கம்ஃபோர்ட்டரைப் போட்டால் அது பாதி மூடி பாதி திறந்து அசிங்கமாக இருக்கவே, கிங் சைஸ் கம்ஃபோர்டர் வாங்கத் தீர்மானித்தேன். அப்போதே இன்னொன்றும் மனதில் உதித்தது. ஒரே ஒரு பெட் ஷீட் செட் எப்படிப் போதும்? குறைந்தது இன்னும் ஒன்றாவது வாங்க வேண்டாமா? ஓடு உடனே கடைக்கு. கம்ஃபோர்டர் வாங்கி வந்தேன். அப்பாடா என்று திருப்தியுடன் அன்றிரவு படுக்கவந்தேன்.

தூங்குவதற்கு முன் படிப்பது எங்கள் இருவருக்குமே வழக்கம். படுக்கைக்கு அருகே இருந்த மேசைகள் மீதிருந்த விளக்குகளின் வெளிச்சம் எங்கள் புத்தகம்வரை வீசவில்லை. ஏனென்றால் அந்தப் பக்கமேசைகள் இரண்டும் குட்டை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் ரொம்பவே அறிவுஜீவி என்று நிரூபிக்க "இதோ ஒரு சல்யூஷன் இருக்கிறது" என்று எழுந்துபோய் இரண்டு அட்டைப் பெட்டிகளை மேசைகளின் மீது வைத்து அதன்மேல் விளக்குகளை நிற்க வைத்தேன்.

ஹூர்ரே.... இப்போது வெளிச்சம் படிக்க போதுமானதாக இருந்தது. அதே சந்தோஷத்தில் படித்து முடித்துவிட்டுத் தூங்குவதற்காக விளக்குகளை அணைக்கவும் 'டம்' என்று ஒரு சத்தம்! அட்டைப் பெட்டி லேசாக இருந்ததால் பேலன்ஸ் இல்லாமல் விளக்குகள் கீழே விழுந்துவிட்டன. பல்டி அடித்துப் படுக்கையிலிருந்து எழுந்து அல்லது குதித்து இறங்கி வேறு விளக்கைப் போட்டுப் பார்த்தால் இரண்டு விளக்குகளிலும் இருந்த பல்புகள் ஃப்யூஸ் போயிருந்தன.

சரி, ஒன்று, விளக்குகளை மாற்ற வேண்டும் அல்லது மேசைகளை மாற்ற வேண்டும். முப்பது வருடமாகப் பக்கத் துணையாக இருந்த குட்டைமேசைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு, படுத்தபடி படிக்க வசதியான உயர மேசைகளையும், இன்னும் சில பல்புகளையும் வாங்கி வந்தேன். பென்னெட் "எவ்வளவு டேமேஜ்?" என்று நறநறவென்று பல்லைக் கடிப்பதைப் பார்த்தும் பார்க்காதவள் மாதிரி நடிக்க வேண்டியிருந்தது.

கையில் ரிமோட்டுடன் படுக்கையில் சாய்ந்தபடி டெலிவிஷன் பார்க்கும் சுகம் வேறு எதில் இருக்கிறது! ரிமோட்டினால் டி.வி.யை ஆன் பண்ணினேன். எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால் டிஷ்ஷில் சேனல் மாற்றும்போதும், டி.வி.டி. உபயோகப்படுத்தும் போதும்தான் கஷ்டகாலம் திரும்பியது. டி.வி. வைத்திருந்த மேசையின் உயரம் போதவில்லை. கிங் சைஸ் படுக்கையின் மரச்சட்டம் உயரமாக அவற்றை மறைத்துக்கொண்டு நந்தி மாதிரி உட்கார்ந்திருந்தது. அதனால் ஒவ்வொரு முறை சேனல் மாற்றவும் நான் குதித்தெழுந்து மரியாதையாக அதன் பக்கத்தில் போய் நின்று கொண்டு ரிமோட்டை உபயோகிக்க வேண்டியிருந்தது. (பென்னெட் நான் ஏதாவது பார்த்தால் மட்டுமே பார்ப்பாரே தவிர மற்றபடி அதன் அருகேகூடப் போகாதவர். நான் இரண்டு மாதம் சென்னையில் தங்கிவிட்டு வந்தாலும் அதுவரை ஒருமுறைகூட டிவியை ஆன் பண்ணாத அதிசயப் பிறவி!)

டிவிடியில் ஏதாவது பார்க்க வேண்டுமென்றாலும் எழுந்து போய்த்தான் ரிமோட்டை அழுத்த வேண்டும். என் அதிருஷ்டம், அப்படிப் போய் அழுத்திவிட்டு அப்பாடா என்று படுக்கையில் வந்து விழுந்த அந்தக் கணமே தொலைபேசி ஒலிக்கும். முக்கியமான யாராவது கூப்பிடுவார்கள். நிகழ்ச்சியின் தொடர்ச்சி விட்டுவிடுமே என்று மறுபடி எழுந்துபோய் ரிமோட்டில் 'பாஸ்' பண்ணிவிட்டு, பேசியபிறகு மறுபடி ஆன் பண்ணி.... எனக்கு முதுகு வலியே வந்துவிட்டது. நாளைக்குப் போய் ஒன்று புதியதாக என்டெர்டெயின்மென்ட் மேசை வாங்க வேண்டும். அல்லது ஹோம் டிப்போவுக்குப் போய் ஒரு பெரிய உயரமான மரப் பலகையை வாங்கி அதன்மேல் இதை வைக்கவேண்டும். எதைச் செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

கிங் சைஸ் படுக்கை வாங்கியதால் உபயோகம் இல்லாமல் போகவில்லை. இப்போதெல்லாம் ஹோம் டிப்போ போனாலே 'வாங்க அக்கா....' என்று அங்குள்ள அத்தனை பேரும் என்னை வரவேற்கிறார்கள். சௌத் வெஸ்ட் க்ரெடிட் கார்டில் நிறைய மைல்கள் சேர்ந்திருப்பதால் எங்காவது வெளியூருக்குப் போகலாம் என்று பென்னெட்டிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

என் அம்மா எனக்குச் சின்ன வயதில் ஒரு கதை சொல்லுவார். ஒரு சாமியார் எல்லாவற்றையும் துறந்து ஊர்க் கோடியில் தனியாகத் தங்கினாராம். அவருக்குச் சொந்தமானது ஒரே ஒரு வேஷ்டி மட்டும்தான். அதை எலி கடித்துக் குதற ஆரம்பிக்கவே ஒரு பூனை வளர்த்தாராம். அதற்குப் பால் ஊற்ற வேண்டாமா? ஒரு பசு மாடு வாங்கினாராம். மாட்டைப் பார்த்துக் கொள்வது, அதற்கு தீனி போடுவது யார்? அதற்காகத் திருமணம் செய்துகொண்டு மனைவியை அழைத்து வந்தாராம்!

எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.

கீதா பென்னெட்

© TamilOnline.com