தெரியுமா?: நாஞ்சில்நாடனுக்கு இயல் விருது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளரும், நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமிழ் வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. இவரது நேர்காணலைத் தென்றல் ஜூன், 2012 இதழில் படிக்கலாம்.

சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு முன்னர் இவ்விருது பெற்றுள்ளனர்.

ஜி. சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில்நாடன், பம்பாய் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த 'ஏடு' இதழில் தன் இலக்கியப் பணியைத் தொடங்கினார். 1975ம் ஆண்டு வெளிவந்த 'விரதம்' சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டுச் சென்ற போதிலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சி கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை பரிசு (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு கௌரவங்களைப் பெற்ற இவர், 'சூடிய பூ சூடற்க' சிறுகதைத் தொகுப்புக்காக 2010ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளம் மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகள் மீது முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவரது 'தலைகீழ் விகிதங்கள்', 'எட்டுத் திக்கும் மதயானை' நாவல்கள் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் 'பரதேசி' படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். "அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே" என்று சொல்லும் நாஞ்சில்நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com