2012ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது டி. செல்வராஜ் எழுதிய 'தோல்' புதினத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டேனியல் செல்வராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் திருநெல்வேலி அருகே மாவடி என்ற கிராமத்தில் 1935ல் பிறந்தார். இவர் கேரளாவின் தேவிகுளத்தில் உள்ள கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டக் குடியிருப்புக்கு, நெல்லை மாவட்டக் கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்த ஒரு கங்காணிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள ஆங்கிலப் பள்ளியில் படித்தார். நெல்லையில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில் படிக்கும்போது நூல்நிலையத்தில் முற்போக்கு இலக்கியங்கள் அறிமுகமாகின. தி.க. சிவசங்கரன், தொ.மு.சி. ரகுநாதன், பேரா. வானமாமலை, வாத்தியார் ஜேக்கப் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினரானார். முன்ஷி பிரேம்சந்த், கிருஷ்ணசந்தர், தாகூர், தொ.மு.சி. ரகுநாதன், கு.அழகிரிசாமி, விந்தன் கார்க்கி உட்படப் பல சோவியத் எழுத்தாளர்கள் மற்றும் பலரின் படைப்புகளைப் படித்தார். முதலில் கவிதைகள் எழுதத் துவங்கியவர், பின்னர் சிறுகதைகளுக்கு நகர்ந்தார். முதல் கதை 'ஜனசக்தி'யில் வெளியானது. வங்காளத்தில் சந்தால் இன மக்கள் இன்டிகோ தோட்டங்களில் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டிருந்த கதை அது.
சென்னையில் சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது எழுதப்பட்டதுதான் 'மலரும் சருகும்' என்னும் நாவல். அது, விவசாயிகளுக்கு நேரிடும் அவலங்களையும், அக்காலத்தில் நிகழ்ந்த முத்திரை மரக்கால் போராட்டத்தையும் மையமாகக் கொண்டிருந்தது. படிப்பை முடித்த பின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்ட செல்வராஜ், தொடர்ந்து சிறுகதைகள், நாவல் என தீவிரமாக எழுதத் துவங்கினார். தன் இளமைக்காலம் முழுதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலேயே கழிந்ததால் அவர்களது வாழ்க்கை இவரது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றானது. தொழிலாளர்கள் பிரச்சனை, போராட்டம், தொழிலாளர் வாழ்க்கையே இவரது பல படைப்புகளுக்கு அடிநாதமானது. 'தேநீர்', 'மூலதனம்', 'அக்னி குண்டம்' போன்ற இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கன. 'பொய்க்கால் குதிரை' ஒரு குறுநாவல். தற்போது 'அக்னி குண்டம்' நாவலின் இரண்டாம் பகுதியை எழுதி வருகிறார். தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவல வாழ்வைச் சொல்லும் இவரது 'தோல்' நாவலுக்குச் சென்ற ஆண்டு தமிழக அரசின் விருது கிடைத்தது. அதுவே தற்போது சாகித்ய அகாதமி விருதுக்கும் தேர்வு பெற்றுள்ளது. டி. செல்வராஜ், தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
இவரைப் பற்றி மேலும் அறிய : தென்றல், மார்ச், 2005 |