வாழ்க்கைப் பயணிகள்
"மேல பத்து"

"மேல-கீழ, மேல-கீழ, மேல-கீழ, மேல-கீழ, மேல-கீழ, மேல-கீழ, மேல-கீழ, கீழ!" முனியாண்டி கோடி மகிழ்ச்சியில் மனதுள் ஆனந்தக் கூத்தாடினான்.

"ச்சே! சனியன் புடிச்ச காசு, போ!" என்று பத்து ரிங்கெட்டை விட்டெறிந்தான் சோமு. சூதாட்டம் எனும் 'போரில்' சோமு பெரும் அனுபவசாலி. இங்கே பணம்தான் ஆயுதம். பொதுவாக சோமு இப்போர்களில் சிலமுறை வெற்றி வாகை சூடுவான். ஆனால், பலமுறை நிராயுதபாணி ஆகிவிடுவான். இம்முறையும் வழக்கம்போல் தோல்வியைத் தழுவியதால் எரிச்சலோடு கிளம்பலானான். படக்கென்று ஒரு கை சோமுவைக் கவ்வியது.

"நைசா கிளம்புற?" முனியாண்டி விஷயம் அறிந்தே கேட்டான். சோமு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தன்னிடம் பணம் தீர்ந்துவிட்டது என்று சைகை காட்டி நடந்தான். சற்றுதூரம் சென்ற பின் திரும்பிப் போர்க்களத்தைப் பார்த்தான். ஆர்ப்பாட்டம் குறையாதிருந்தது.

"ஜெய்க்குராருல வலுவா... அந்த திமிரு! போறவனப் புடிச்சி எங்க போறேனு கேக்குறது. இருக்கட்டும். இன்னொரு தடவ மாட்டுவான்ல, அப்ப மொட்டையாக்கி அனுப்புறேன். வயிற்றெரிச்சலில் சோமு முணுமுணுத்தபடியே மீண்டும் அக்கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான். இம்முறை அவன் பார்வை முனியாண்டியைப் பிடிக்க முயன்றது. ஆனால் 46 வருடகால மதுபானத் தாக்குதலைத் தாண்டிவிட்ட பலகீனமான கண்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. முயற்சியைக் கைவிட்டான். சோமுவின் இயல்பு அது.

நீடித்து ஒரு வேலையில் நிற்க வேண்டும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், குடும்பத்தார் தன்னை மதிக்க வேண்டும் என்று பலமுறை தன் பூஜையறையில் படமாக இருக்கும் கடவுளிடம் வருந்துவான், வேண்டுவான். என்ன செய்வது, அவன் மனதில் இறைவனைவிட சூதாட்டத்துக்கும் மதுவுக்கும் பலமும் ஆதிக்கமும் அதிகம். 'போரில்' தோல்வியுற்ற கவலை, பூஜையறை உண்டியல் பணத்தை ஆயுதமாக்கிவிட்டதற்குக் கிடைக்கப் போகும் அர்ச்சனையின் பயம், சோமுவை மதுக்கடைக்கு அழைத்துச் சென்றது. கால்சட்டைப் பைக்குள் கையை விட்டான். சிக்கியது; வெளியே எடுத்தான், உறுதிப்படுத்திக்கொள்ள. பத்து ரிங்கிட். சிகப்பு வண்ணத் தாள்.

தோல்வியைத் தாளாத மனதைக் குடித்துத் தேற்றுகிறானாம். உண்மையில், குடித்துவிட்டு வீடு வந்தால், வீட்டிலுள்ளோர் இவனை அதிகம் ஏச மாட்டார்கள்; கேள்விகளும் கேட்க மாட்டார்கள். தன்னைச் சீறும் அப்பாம்புகள் இந்த மகுடிக்குக் கட்டாயம் அடங்குமென்று அவனுக்குத் தெரியும். இந்த ரகசியத்தை முருகேசன் சோமுவுக்கு உபதேசித்தான். அதனைச் செயல்படுத்தினான், வெற்றி கிட்டியது. இன்றுவரை செயல்படுத்தி வருகிறான். சோமுவின் இந்த நாடகம் பொழுது புலர்ந்ததும் பனிபோல மறைந்துவிடும். அர்ச்சனை ஆரம்பித்துவிடும். ஆனால், குறைவாக இருக்கும். சோமுவின் நடவடிக்கை அச்சமயம் மட்டும் சில மணி நேரம் பணிவாக இருக்கும். பெரும்பாலான குடிகாரர்களின் நடிப்பேயானாலும், சோமுவின் நடிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

தன் ஆறு பிள்ளைகளில் மூன்றாவது மகன், கோபினாதன் மேல் சோமுவுக்குப் பாசம். அது பாசமா அல்லது தன் நடிப்பைக் காட்ட ஒரு உபகரணமா என்றும் சந்தேகிக்கலாம். "ஐயா வா.... சாப்டியா? படிச்சியா? ஒழுங்காப் படிக்கணும்! அம்மா சொல்றதக் கேக்கணும். புரியுதா?" என்று சோமு தன் அக்கறை மழையைப் பொழிகையில், கோபியும் பாசத்தோடு, ஏதாவதொரு விஷயத்தைச் சொல்ல முற்படுவான். ஓரிரு நிமிடம் கழிந்தால், அக்கறை கானலாகிவிடும். "சரி சரி, போய் புக்கெடுத்துப் படி!" என்று பிள்ளையின் பாசத்துக்குச் சிகப்பு சமிக்ஞை விளக்காகி, தன் 'வேலை'யைக் கவனிக்கப் போய்விடுவான். சோமுவின் இந்த அக்கறை நாடகம் வீட்டிலுள்ளோர் பார்வைக்காக மட்டுமே.

இது அவர்களுக்கும் புரிந்ததே. ஆறாம் ஆண்டு பயிலும் கோபிக்கு இவ்விவரம் புரியாதிருந்தது. கெட்டி, சுமார், பையப் பயிலுவோர் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்ட குழுக்களில், கோபி 'சுமார்' குழுவிலே தனது ஆறு வருடக் கல்வியைக் கற்றுவருகிறான். தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பு ஆறாம் ஆண்டில் தொடங்கும் முறையான போதனை, குறிப்பான 'உதவிகள்', கூடுதல் வகுப்புகள், சிறப்பு அறிவுரைகள், சிறப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி, தன்னம்பிக்கைப் பயிற்சி என்று பல முன்னேற்றப் படிகள். அதில் ஆசிரியரின் பங்கு அதிகமாகவே இருக்கும். அப்படிகளில் முயன்று ஏறினான் கோபி. சில மாதங்களில் தன்னை முன்னேற்றி கொண்டான். அதன் விளைபயன், அரையாண்டுத் தேர்வில் 3A, 3B, 1C என்று அவன் பெற்ற புள்ளிகளேயாகும். வீட்டில் அண்ணன்களும் அக்காள்களும் வாழ்த்தி ஊக்கமளிக்க, தாய் வாரியணைத்து முத்தமிட, கோபியின் மனதில் புதிதாய் ஒரு உணர்ச்சி பிறந்தது. அது அவனை மென்மேலும் வளர வழிவகுத்தது. இந்தப் பாசம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. அதனால், மேலும் நன்கு படிக்க வேண்டுமென்ற ஆசை அவனுக்குப் பிறந்தது.

மறுநாள் பள்ளியில், ஓய்வு நேரத்தில் ஆகாரம் வாங்க வழியில்லாத கோபி, வழக்கம்போல் வீட்டில் சமைத்த சாப்பாட்டை, ருசித்து ருசித்துச் சாப்பிட முடியாவிட்டாலும் பசிக்கும் வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். தூரத்தில் "கோபி!....கோபி!" என்ற கூக்குரல் அவனை அழைக்க, திரும்பிப் பார்த்தான். சோமு கோபியை நோக்கி வந்து கொண்டிருந்தான். கோபிக்குப் பாசம் பொங்கவே தந்தையை நோக்கி ஓடினான். மூச்சு இளைக்க, "அப்பா!" என்றவன் புன்னகைத்தான்.

"சாப்டியாப்பா?"

"சாப்புட்டேன்பா,"

"என்ன சாப்புட்ட?"

அப்பா ஏதாச்சும் வாங்கித் தருவாரு போல என்று ஊகித்தபடியே "நேத்து வச்ச பருப்பு கறி, கருவாடு" என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தான் சோமு.

"ஐயா, கழுத்துல... சங்கிலி இருக்குதானே...."

"இருக்குபா.... தோ.... அம்மா களட்டலபா..."

சோமுவின் உதடுகள் விரிந்தன. நடுவில் மஞ்சள் நிறப் பற்கள் எட்டிப் பார்த்தன.

"ஐயா, அந்தச் சங்கிலியக் குடு... அம்மா வாங்கிட்டு வரச் சொன்னிச்சி!"

கோபி உடனே சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தான். சங்கிலியைப் பெற்றுக் கொண்டதும், சோமு அவசர அவசரமாகப் பறந்தான்.

மாலை வகுப்பு முடிந்து வீடு வந்து கொண்டிருந்த கோபிக்கு, மதியம் அம்மா என்ன சமையல் செய்திருப்பாள் என்ற ஆவல் மிகுந்திருந்தது. அவன் எதிர்பார்த்தது போல அன்று சமையல் இல்லை. சாப்பாட்டை கோபித்துக்கொள்ள கோபியும் சிறு பிள்ளையல்ல. பள்ளிச் சீருடையை களைந்த பின் உணவு உண்டான். ஓய்வு முடியும் தறுவாய் நெருங்குவதால், கோபியின் தாய் கோமளா வேலைக்குக் கிளம்பினாள். வெளியாவதற்கு முன்பாக, முன்தினம் கோபியின் நண்பன் பிறந்த நாளுக்குச் செல்வதற்காக கோபியின் கழுத்தில் அணிவித்த சங்கிலியைக் கழற்றாதது ஞாபகம் வரவே, கோபியிடம் "ஐயா, சங்கிலியை கலட்டு," என்று கூறிக்கொண்டே அருகே சென்றாள்.

சோற்றை விழுங்கிவிட்டு, "அம்மா, அப்பா நீங்க கேட்டிங்கேனு ஸ்கூலுக்கு வந்து சங்கிலிய வாங்கிகிட்டு போய்ட்டாரு!"

கோபி கூறியது கோமளாவின் மனதில் இடிபோல் விழுந்தது. சங்கிலி என்னவாக ஆகியிருக்கும் என்று அவளால் ஊகிக்க முடிந்தது. சில வினாடிகளில் கோபம் தலைக்கேறி, சாப்பிட்டுக் கொண்டிருந்த கோபியின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி பளார்பளாரென்று அறை கொடுத்தாள். இப்படி அடி வாங்கும்போது வழக்கமாக அவனுடைய அக்காள் நாகராணியே அவனைக் காப்பாற்றுவாள். இம்முறையும் காப்பாற்றினாள்.

"வாங்குனது அவரு! அதுக்கு இவன ஏன் அடிக்குறிங்க?"

நாகராணி தன் தாய்க்கு உண்மையை உணர்த்தினாள். நிஜத்தை ஓரளவு ஏற்ற கோமளா "என்னத்தச் செஞ்சி தொலையுறது? அந்த ஆளுக்குச் சூது தவிர வேற எதுவும் தெரியாது! பட்டினில நாம செத்துட்டா கூட, நம்ப கழுத்துல காதுல உள்ளத எடுத்துகிட்டுப் போய் சூதாடுவான். கவலைலாம் படமாட்டான்" என்று சொல்லி முடிக்கும் முன் அவளுடைய அழையா விருந்தாளி, இளைப்பு இளைத்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தாள். பதறிய பிள்ளைகள் "அம்மா! அம்மா!!...என்னாச்சிமா?" என்று ஓடி வந்தனர். வலியை உடல் அழுத்தத்தில் குறைக்க முடியுமென உணர்ந்து, பற்களைக் கடித்து கொண்டாள். அவள் நம்பிகைக்கு உடல் அடிபணியவே, "ஒண்ணுமில்ல லேசா எளைக்குது..." கூறி முடிக்கவும், மீண்டும் நெஞ்சு அடைத்தது. இம்முறை பெரிதாக மூச்சை இழுத்து நெஞ்சை அமுக்கி, "போய், குசினி அல்மாரி மேல... பச்ச டப்பாவ எடுத்துகிட்டு வா....ம்!"

இரவானது. சோமு மது போதையில் தள்ளாடியபடியே வீடு வந்தான். நடு வீட்டில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொருவர் அமர்ந்திருந்தனர். அனைவருடைய பார்வையும் சோமுவை நகராது பிடித்து வைத்தது. தன்னிடம்தான் 'குடிச்சுட்டு வந்திருக்கான்' என்ற ஆயுதம் இருக்கிறதே என்றுணர்ந்து, கோமளாவைப் பார்த்தான். "இவ வெடிக்குறதுக்கு முன்னெ நீ வெடிச்சிருடா" அவன் மூளை அவனுக்கு உபாயம் சொன்னது.

"எய்! என்னாடி மொறைக்குற? கேக்குறேன்லே!"

கோமளா எழுந்தாள். "ஏன்யா, ஸ்கூல்ல போய் எதுக்கு கோபிகிட்ட சங்கிலி வாங்குன? அத என்னா செஞ்ச?"

சோமு மௌனம் சாதித்தான். சோமுவை நோக்கி மெல்ல நடந்து கொண்டே, "என்னா செஞ்ச? வித்துட்டியா? அறிவு கெட்ட ஜென்மம். ஒழச்சிக் கொடுக்க முடியாது, தண்டமா இருக்க! பொண்டாட்டி புள்ளைங்க சம்பாத்தியத்துல சாப்புடுர... மானங்கெட்ட மனுஷன்! ஓசில தின்றலெ, ஒழுங்கா இருக்க முடியாது? நான் கஷ்டப்பட்டு ஒழச்சி வாங்குறத, நீ திருடிகிட்டு போய் வித்து சூதாடிட்டும் குடிச்சுட்டும் வர்ரியே, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? த்தூ!!!!" தரையில் காறினாள். சோமு புன்னகையோடு கோபியை "வா" என்று முகபாவனையில் அழைத்தான். கோபி அருகே வரவே, சோமு அவனை தன் பலம் கொண்டு ஓங்கி அறைந்தான். கோபி பொத்தென விழுந்தான். சட்டென வெறியுடன், "ஏய்!" என்று கத்தியபடி மூத்த மகன் கனகேந்திரன் தந்தையை அடிக்க முற்பட நாகராணி அவனைத் தடுத்தாள்.

"விடு அவன, ரெண்டு போடட்டும்! அப்படியாவது அதுக்கு அறிவு வருதானு பார்க்கலாம்," கனகேந்திரனின் எரியும் கோபத்திற்கு எண்ணை வார்த்தாள் கோமளா. "பேசாம இருமா. அண்ணே விடுணே! அது நிறைய குடிச்சிருக்கு! அடிச்சு ஒரு புண்ணியம் இல்ல!" கனகேந்திரன் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான். சிலமணி நேரம் அழுகை ஒலித்தது. அடங்கியது. வழக்கம்போல் பகல் விடிந்தது. போதை மறைந்து நிதானம் வந்தது. சோமு நேற்றைய சம்பவத்தை நினைவு கூர்ந்தான்.

தன் மகன் தன்னை அடிக்கக் கையை ஓங்கியதும், தன் மனைவி அதை ஆதரித்ததும் அவன் மனதை ஆழமாக உறுத்தியது. யாரிடமும் பேசாமல், எரிச்சலான பார்வையுடன் வெளியேறினான். கண் போன போக்கில் அவன் கால்களும் போயின. கதிரவன் தன் பார்வையை வேறு திசைக்குக் கொண்டுச் செல்ல, மெல்ல மாலைப் பொழுதானது.

தன்னை இன்னமும் நண்பனாக நினைத்துப் பழகும் கேசவன் வீட்டிற்குச் சென்றான். "கேசவா, கேசவா? கேச...." மூன்றாவதாக கூவுவதற்கு முன் கேசவன் வெளியே வந்தான். சோமுவைப் பார்த்தான். பார்வையாலே "என்ன!" என்று கேட்டான். சோமு ஒன்றும் பேசாது, தலையைத் தரைநோக்கித் தொங்கவிட்டான். சோமுவின் அகத்தின் அழகை, முகத்தில் உணர்ந்தான் கேசவன். வீட்டினுள் சென்றான். ஓரிரு நிமிடங்கள் கழித்து வந்தான். கேசவன் சட்டை புத்தான்களைப் போட்டுக்கொண்டே, சிலிப்பரை அணிந்தான். வாசல் வழியாக, உள்ளிருந்த தன் மனைவியைப் பார்த்தான். அவள் சைகையால் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதன் அர்த்தத்தைப் புரிந்தது போல, கேசவன் 'சரி'யைத் தலையசைத்து அறிவித்தான்.

சோமுவை அருகிலுள்ள 'ரெஸ்ட்டோரண்ட் ஜீ செங் கொக்'கிற்கு அழைத்துச் சென்றான். பெரும்பாலான தமிழர்கள் ஒரு காரணத்திற்காக அந்த உணவகத்திற்கு வருவார்கள். காலை முதல் மாலை வரை, தங்கள் ஆசை, அமைதி, உறக்கம், சோம்பல், சுதந்திரம் போன்றவற்றைத் தியாகம் செய்து உழைக்கும் ஆண்வர்க்கத்தில் பலர் இம்மாதிரியான உணவகத்தில் 'மது' என்ற சாத்தானுக்குத் தங்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். குடும்பத்தோடு மகிழ செலவிடுவதை விடுத்து, 'உடல் அசதி' என்று அற்ப சந்தோஷத்திற்குச் செலவிடுகிறார்கள்.

உணவகத்தில் இரண்டு விரலைக் காட்டியபடியே கேசவன் அமர்ந்தான். சோமு மௌனத்தை விடாதிருந்தான். "சோமு" என்று அழைத்த கேசவன், சோமுவை இடதுபக்கம் பார்க்கச் சொன்னான். சோமுவும் பார்க்க, அங்கே சீனத்தி ஒருவள், கருப்பு நிறக் குட்டை பாவாடை, அது விழாமலிருக்க ஜொலிக்கும் வார்பட்டை, நெஞ்சுக்குழியும் தொப்புளும் மறைக்காத கருப்பு பிளவுஸ், உயரத்தைக் கூட்டும் தூக்குக்காலணி, தோளைத் தொடும் வட்டத் தோடு என்று ஆண்மை முறுக்கும் கவர்ச்சியுடன், புன்னகைத்த படியே மதுபானத்தை உபசரித்தாள். போத்தல் மூடியைத் திறந்து கொண்டே கேசவனைப் பார்த்தாள்.

அச்சமயம், கேசவன் அவளுடைய கால் விரல்களிருந்து பார்வையால் தளுவியபடியே மேல் நோக்கி வர, முடிவில் பார்வை அவள் முகத்தில் நின்றது. புன்னகைத்தான். "இவள சாப்டா எப்டி இருக்கும்?" கேசவனின் மனம் ஏங்கியது. அவளும் செவ்விதழ்களை விரித்துப் புன்னகையுடன் திரும்பிச் சென்றாள். திரும்பியதும் அவள் முகம் சட்டெனப் புன்னகையைத் தூர எரிந்தது, சலிப்பானது. கேசவனை மனதுள் என்ன நினைத்தாளோ?

கொஞ்சம் மது அருந்திவிட்டு, கேசவன் சோமுவைக் கேட்டான் "என்னடா ஆச்சி?" சோமு சில நிமிடம் மௌனத்தில் ஆழ்ந்தான். பின் நடந்ததைக் கூறினான். உணர்ச்சி பொங்கிய கேசவன், "நீ பட்டுனு அவன ரெண்டு விட்டுருக்கணும். மொளச்சி மூணு எலை விடல, அதுகுள்ள அப்பன கை ஓங்குறானா... தறுதல!" வெடிக்கையில், சோமு மௌனத்திலே தங்கியிருந்தான்.

"மச்சான், உன் பொண்டாட்டியும் தடுக்கலலெ. நான் சொல்றத கேளு மச்சான். ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு போகாத!" சோமு கேசவனைப் பார்த்தான். "நீ போலனாதான் அதுங்களுக்கு உன் அருமை தெரியும்! நீமட்டும் இதச் சாதாரணமா எடுத்துகிட்ட, அப்புறம் ஒரு நாய் கூட உன்ன மதிக்காது, தெரிஞ்சுக்கோ!" கேசவனின் உசுப்பல் சோமுவைத் தாக்கியது. சோமு நெடுந்தூரம் தன் எண்ணங்களை ஓடவிட்டு, நண்பன் கூறியதைப் பகுத்தாய்ந்தான். மதுவின் காரணமோ அல்லது அவனது குறைந்த அறிவு முதிர்ச்சியோ, நண்பன் கூறியது அவனுக்குச் சரியென்றே பட்டது. சில நிமிடங்கள் கடந்தன. கேசவன் அதற்குள்ளாக ஒரு போத்தல் மதுவை முடித்துவிட்டு, அடுத்த போத்தல் மதுவை கிளாஸில் ஊற்றிக்கொண்டிருக்க, அதிலிருந்து மேல்நோக்கிப் பறக்கும் குமிழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான், சோமு.

சோமு தனக்காகக் காத்திருக்கும் மதுவை மூச்சுவிடாமல் குடித்தான். "கேசவா, நீ சொல்றது சரிதான்! இப்ப மட்டும் நான் வீட்டுக்குப் போனேனா, எல்லாம் என்ன எளக்காரமாப் பார்க்குங்க. அதான், போகக்கூடாதுனு முடிவு எடுத்துட்டேன்!"

"அதான் மச்சான், நீயில்லாம இப்ப இப்படி இருக்குங்களா?"

"கேசவா, இன்னிக்கு மட்டும் நான் உன் வீட்டுல தங்கிக்குறேன்?"

'புடிச்சுச்சு சனியன்!’ கேசவன் மனதுள் அதிர்ந்தான். அவன் மூளை தட்டிக்கழிக்கும் காரணத்தை அலசியது. "நீ தங்குறது பிரச்சனை இல்ல. ஆனா இன்னிக்குப் பத்து மணிக்கு ஜோகூருக்கு ஓடணும்,..அதான் பார்க்குறேன்."

"பரவால கேசவா" சோமுவுக்குக் கேசவன் கூறுவது பொய்யென்று தெரிந்திருந்தது. பொதுவாக நெடுந்தூரம் கனவுந்து செலுத்த வேண்டியிருந்தால் கேசவன் மது அருந்தமாட்டான். தான் தங்குவது அவனுக்குப் பிடிக்கவில்லை. எழுந்து நடந்தான். ஒரு கடை வாசலில் அமர்ந்தான்.

நாட்கள் இரண்டு கடந்தன. இன்று வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தவனாய்ப் புறப்பட்டான். வயிறு வலித்தது. காரணம் என்னவென்று தெரிந்திருந்ததால் அதைப் பொருட்படுத்தவில்லை. வீட்டையடைந்தான். வீடு பூட்டப்பட்டிருந்தது. மதியம்வரை வாசலிலே காத்திருந்தான். மதிய ஓய்வில் வீடு வந்த சோமுவின் அண்டைவீட்டார் ராஜா, சோமுவை கவனித்தார்.

"சோமு,....."

சோமு கண்விழித்து, பசியால் சுருங்கிய கண்களால் ராஜாவைப் பார்த்தான்.

"உன் ஃபேமலி நேத்து வீடு மாறிட்டாங்க..." கூறிவிட்டு வீட்டினுள் சென்றார். சோமுவுக்கு திக்கென்றிருந்தது. அவன் மனதில் போரட்டம் தொடங்கியது.

"எங்க போயிருக்குங்க.... என்ன வேணானு முடிவு பண்ணிருச்சிங்களா?" கேள்விமாரி பொழிந்தது. அவர்கள் சென்ற சுவடு அறியாது தவித்தான். பசியின் முன் தன் முன்கோபம், சுயமரியாதை, ஆணவம் அனைத்தும் சுருண்டு பதுங்கிக் கொண்டன. செய்வதறியாது குழம்பினான். மனம் போன போக்கில் திரிந்தான். வழியில் ஒரு பாலர் பள்ளி மாணவன் தன் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பையனைப் பார்த்ததும் சோமுவுக்கு கோபியின் ஞாபகம் வந்தது. கோபி பயிலும் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு விரைந்தான். அங்கு பல மாணவர்கள் அவன் கண்முன்னே கடந்து சென்றனர். பசியின் காரணத்தால் பார்வைக்கு பலம் கொடுக்க முடியாமல் உடல் திண்டாடியது. எதிரெ சென்ற ஆசிரியரிடம், "சார்,... கோபி இருக்கானா சார்?"

"கோபி? எந்த கிளாஸ்?"

"ஆறாப்பு படிக்குறான் சார்."

"நீங்க யாரு?"

"கோபியோடெ அப்பா சார், என் பேரு சோமு."

"ஓ, எஸ்.கோபியா?! கட்டையா இருப்பானே, அவன்தானே?"

"அவன்தான் சார்."

"இப்ப அவன் கோ-கோல இருப்பான். நீங்க திடல்ல போய்ப் பாருங்க."

"சரிங்க சார்."

"அப்புறம் கோபிக்கு இப்ராஹிம்' ஸ்கூல் அப்ளை பண்ணுங்க. '6A' எடுத்துருக்கான், கண்டிப்பா கிடைக்கும். அவர் பாராட்டில் சற்று பூரிப்படைந்தான் சோமு.

திடலை அடைந்தான். கண்கள் கோபியைத் தேடின. கோபி சோமுவைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டான். ஆனால் அவன் நண்பர்களோ, "டேய் கோபி, உன் அப்பாடா!" என்று அடையாளம் காட்டினர். வீட்டுப்பிரச்சணை வெளியில் தெரியக்கூடாது என்று அஞ்சியவனாய் கோபி சோமுவிடம் சென்றான். கோபியைப் பார்த்ததும் சோமு, "கோபி, எங்கப்பா போயிட்டிங்க?" வருத்தத்துடன் கேட்டான்.

கோபி மௌனமாய் இருந்தான். கோபியின் கரத்தை சோமு பிடிக்க முயன்றபோது, "நீங்க எங்களுக்கு வேணாம்பா! அம்மா, அண்ணன், அக்கா எல்லாருக்கும் உங்கள புடிக்கல. எனக்கும்தான்...." என்றான்.

சோமுவின் கண்களில் அவனை அறியாமலே கண்ணீர் கசிந்தன. கோபி தலை குனிந்தான். குனிந்தவாறே, "எங்க இருக்கோம்னு அம்மா உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு சொல்லிருக்காங்க." சட்டென திரும்பிச் சென்றான். அவன் போவது, தனக்கென்று இருந்த அனைத்தும் போவதுபோல இருந்தது. சூழ்நிலை சோமுவின் மனதை கனக்கச் செய்தது.

இனி எங்கு செல்வது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. ஒன்று நம்மோடு இருந்து, திடீரென்று அது இல்லாமல் போகும்போது அதன் வலி எவ்வளவு கொடுமையானது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது, தெளிந்தது. நமக்கென்று யாரும் இல்லை, அனாதையாகிவிட்டோம் என்ற நிஜம் சோமுவைப் பார்த்துச் சிரித்தது. உள்ளுக்குள் குமுறினான், கூனிக் குறுகினான். இலக்கற்ற பயணத்தில், வழியில் சாலையோரம் ஒரு முனியாண்டி கோயில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கோவிலுள் சென்றான். தூணில் சாய்ந்தான். இரவின் குளுமை சோமுவிற்கு ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுத்தது.

அருள் உள்ளம் கொண்ட இயற்கையன்னை, அவனை அன்போடு தென்றலாய் வருடி உறங்க வைத்தாள். காலைப் பொழுது விடிந்தது. சோமு கண்விழித்தான். கண்கள் வெளிச்சத்தை உணர்வதற்கு முன்னதாக, வயிறு பசியால் அலறியது. இனி நமக்கு ஓசிச் சாப்பாடு கிடையாது என்பது சோமுவுக்குப் புரியாமல் இல்லை.

"ஆண்ட்டீ....ஆண்ட்டீ..." சோமு ஒரு வீட்டின் முன் கூவினான்.

சில நிமிடங்களில், சீனன் ஒருவன் எட்டிப்பார்த்து "மாவு அப்பா?" மலாய் மொழியில் என்ன வேண்டுமென்று வினாவினான். ஏதேனும் புல் வெட்டும் வேலை, சுத்தம் செய்யும் வேலை இருக்கிறதா என்று கேட்க, சீனன் 'இல்லை' என்று கையசைத்து மறைந்தான். ஏமாற்றம் சோமுவை வருத்தியது. 'சாப்புடணுமே' என்ற அத்தியாவசியத்தை உணர்ந்து, அடுத்த வீட்டுக்கு வேலை கேட்கச் சென்றான், அரை நம்பிகையோடு.

விஜயன் சிவசண்முகம்,
மலேசியா

© TamilOnline.com