"சந்தியா, சந்தியா.... எங்கே போனே? எவ்வளவு நேரமா நான் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். எங்கேம்மா போனே?" உள்ளே நுழைந்த ராஜேஷ் கூப்பிட்டான். காரை போர்டிகோவில் விட்டுவிட்டு உள்ளே வந்தான்.
"இதோ ஒரு நிமிஷம் வந்துடறேன்" சொல்லிக்கொண்டே சந்தியா வந்தாள். அவள் கையைப் பிடித்துக்கொண்டு குட்டிப் பெண் ரம்யா நின்று கொண்டிருந்தது. ராஜேஷைக் கண்டதும் "டாடி..." என்று காலைக் கட்டிக்கொண்டது.
"கண்ணா, நோ டாடி. அப்பா. எங்கே சொல்லு அப்பா!" என்றாள் சந்தியா.
"எஸ். அப்பா.... அப்பா." என்று இரண்டு முறை சொன்னாள் ரம்யா.
"ஆஹா. இப்படி அப்பான்னு தமிழ்ல கூப்பிட்டா எவ்ளோ ஆனந்தமா இருக்கு சந்தியா. எப்படி... எப்படி... இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குட்டிச் செல்லத்துக்கு தமிழ் கத்துத் தர்றே. யூ ஆர் ஸோ கிரேட்" என்றான்.
"ரம்யா இங்கே இருக்கிற ஒரு மாதத்தில் இன்னும் ஜோரா தமிழ் பேசுவா பாருங்களேன்" என்றாள் சந்தியா.
"சரி சரி. அப்பாவும், குட்டிப் பெண்ணும் சாப்பிட வரலாம்" என்றபடி டைனிங் ஹாலுக்குப் போனாள் சந்தியா. ராஜேஷ் மனதிற்குள் சந்தியாவை மெச்சிக் கொண்டான். குழந்தை ஊரில் இருந்து வந்த ஒரு மாதத்தில் ரம்யாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. ரம்யாவுக்குத் தமிழ் தெரியாது. அவள் பேசுவது இங்கிலீஷ், ஹிந்திதான்.
டைனிங் டேபிளில் குழந்தைக்கு பிளேட், ஸ்பூன் எல்லாம் தனித்தனியாக வைத்திருந்தாள். குழந்தையின் பிளேட்டில் இரண்டு பூரி, உருளைக் கிழங்கு மசாலா வைத்திருந்தாள். ராஜேஷ் சந்தியாவைப் பார்த்து "தானே சாப்பிடுவாளா, ஊட்ட வேண்டுமா?" என்று கண்களாலேயே கேட்டான்.
"ஊஹூம்" என்று தலையை ஆட்டினாள் சந்தியா.
அழகாகக் குட்டி பூரியை விண்டு வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது குழந்தை. ராஜேஷுக்குப் பெரிய அதிசயம். ஐந்து வயது ரம்யா சமர்த்துதான் என்றாலும் சாப்பாட்டு விஷயத்தில் மஹா கஷ்டம். எல்லாம் அவள் அம்மாவின் கவனிப்பு, வளர்ப்பு முறை அப்படி. ராஜேஷின் முதல் மனைவி வித்யா. மஹா பிடிவாதக்காரி, ராட்சஸி! இருவருக்கும் இடையே அந்தக் குழந்தை ரம்யாதான் பாவம் படாதபாடு பட்டது.
ராஜேஷுக்கு விவாகரத்தாகி இரண்டு வருடமாகிறது. வருடத்தில் 3 மாதம் பள்ளி விடுமுறைக்குக் குழந்தை அப்பாவிடம் இருக்கலாம் என்பது கோர்ட் ஆர்டர். தேவையான போது டெல்லிக்குச் சென்று ஹோட்டலில் தங்கிக்கொண்டு, குழந்தையை இரண்டு நாள் பார்த்து வருவான்.
ஆனால் சந்தியா ராஜேஷை மணந்து ஆறே மாதங்கள்தாம் ஆகின்றன. குழந்தைமீது அவள் காட்டிய பாசம் ராஜேஷை வியக்க வைத்தது. தான் பெற்ற குழந்தையைப் போல் எப்படி இவ்வளவு அன்பு காட்டுகிறாள் என்று. அம்மாவைப் பிரிந்த சின்னக் குழந்தை, இப்படி இருப்பது அதிசயம். ஆனால் அதற்கு அப்பாவைவிட அவள்மேல் பாசம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.
அம்பிகையைக் குழந்தையாகக் கண்டதுபோல் அழகான பெரிய விழிகள். சின்னச் சின்ன மலர்க் கைகளை ஆட்டி அது பேசும் பெரிய அறிவாளி போன்ற பேச்சு. மற்றக் குழந்தைகளைப்போல் அடாவடித்தனம் இல்லை. எதையாவது உடைப்பது, எறிவது என்று எந்த விஷமமும் செய்யாத படு சமர்த்து.
சந்தியாவிடம் தன் அம்மாவைப்போல் ஒட்டிக்கொண்டது. தமிழில் பேச சந்தியா சொல்லிக் கொடுத்தாள். ஒன்று, இரண்டு.... அ, ஆ, இ, ஈ.... குள்ளக் குள்ள வயிறனே.... குண்டு வயிறனே...." என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தாள் சந்தியா.
பாவம் ராஜேஷ். முன்னாள் மனைவி வித்யா பெண்ணா இல்லை பேயா என்னுமளவுக்கு மிக மோசமானவள். ராஜேஷ் பெரிய பணக்காரன், தொழிலதிபர். அவள் மனதில் பேராசை கொண்டாளே தவிரப் பெண் என்ற பாசம் துளியும் கொள்ளவில்லை. அப்படிப்பட்டவளிடம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டது ராஜேஷின் பெருந்தவறு. குழந்தை பிறந்தால் குணம் மாறக்கூடும் என்று நினைத்தான். அதுவும் பொய்யாகிப் போனது.
குழந்தை பிறந்ததும் இன்னும் அதிகமாக அவள் ஆட்டம் ஆரம்பமானது. அடாவடித்தனம் அதிகமானது.
குழந்தை எதிரில் அடிக்கடி சண்டை; குழந்தை பயந்து ஒரு மூலையில் பதுங்குவது சகஜமாகப் போனது. ராஜேஷ் நண்பன் டாக்டர் கணேஷ் ஒரு குழந்தைகள் நல மருத்துவன். அவன் ராஜேஷிடம், "இப்படியே நிலைமை போனால் குழந்தை மனநிலை பாதிக்கப்பட்டு, அதன் வாழ்க்கை நரகமாகிவிடும்" என்று கூறவே, வேறு வழியில்லாமல் அவளை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தைக்கென்று கோர்ட் உத்தரவுப்படி மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வந்தான்.
பெண்கள் என்றாலே பயந்து ஓடும் மனநிலையில் இருந்த ராஜேஷின் அம்மா, அப்பா பலமுறை வற்புறுத்தியும் திருமணத்திற்கு மறுத்த ராஜேஷ் அவன் கம்பெனியில் வேலை பார்த்த சந்தியாவின் அன்புப் பார்வையில் நனைந்து அவளையே மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று நினைக்கும் அளவுக்கு நல்லவளாக இருந்தாள் சந்தியா. ராஜேஷ் விவாகரத்தானவன். ஐந்து வயதுக் குழந்தையின் அப்பா என்று தெரிந்தும் அவனை ஏற்றுக் கொண்டாள் பேரழகி சந்தியா.
மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தான் ராஜேஷ். குழந்தை, சந்தியாவைக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கிவிட்டது.
"சந்தியா... ரம்யாக் குட்டிக்கு என்னைவிட உன்னைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. பார் எவ்வளவு பாசமாக உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குகிறது" என்றான். பின், "சந்தியா, எப்படி உன்னால் இப்படிப் பெற்ற குழந்தையைப் போல பாசம் காட்ட முடிகிறது?" என்று கேட்டான்.
மெல்ல குழந்தைக்குத் தலையணையால் ஒரு அணைப்பு கொடுத்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தமர்ந்தாள். "இப்படி வந்து உட்காருங்கள்" என்று ராஜேஷை உட்கார வைத்தாள்.
"ஏங்க இந்த குழந்தை என்னங்க பாவம் செய்தது? உங்களுக்கு உங்கள் முதல் மனைவி டார்ச்சர் செய்து நிம்மதியைக் கெடுத்தாள். கஷ்டம்தான் அவளோடு வாழ்க்கை நடத்துவது. ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவளும் ஒரு பெண்தானே! அவளால் ஏன் நல்ல மனைவியாய், தாயாய், பெண்ணாய் இருக்க முடியவில்லை? ஏன் இப்படி ஆனாள்? நீங்கள் நல்லவர்தான். உங்களைக் கணவராக அடைய எந்தப் பெண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான். அந்த வகையில் நான் புண்ணியம் செய்தவள்தான். ஆனால் இந்தக் குழந்தை....? உங்கள்மேல் கொள்ளைப் பாசம் அதற்கு. நடுவில் உங்களைப் பிரிந்து எப்படி ஏங்கிப் போய் இருக்கிறது. இந்தச் சின்னக் குருத்திற்கு, கள்ளமில்லா மனதிற்கு ஏன் இந்தத் தண்டனை? ஏன் இந்த துக்கம்? ஒரு குழந்தை என்றால் அம்மாவும் வேண்டும், அப்பாவும் வேண்டும். அதுதான் குழந்தையின் சொர்க்கம். நாளை மறுநாள் நீங்கள் டெல்லி கிளம்பும்போது எப்படி இது கஷ்டப்படும் உங்களைப் பிரிந்திருக்க. விவாகரத்து செய்யும் கணவனும் மனைவியும் ஏன் இதை யோசிப்பதே இல்லை? இதில் குற்றவாளி பெண்தான். கணவன் கெட்டவனாக இருந்தால் இதை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் உங்களைப் போல் நல்லவரிடம் வாழத் தெரியாத பெண், பெண்ணே அல்ல."
"ஆஹா சந்தியா.... நீ எவ்வளவு யோசிக்கிறாய். எவ்வளவு கருத்தைச் சொல்கிறாய். உன்னைப்போல் பெண்கள் இருந்தால் விவாகரத்தே இருக்காது" என்றான்.
திடீரென சந்தியா கண்களில் கண்ணீர் பெருக விம்மிவிம்மி அழுதாள். "ஓ ஒரு குழந்தைக்காக இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறாளே" என்று எண்ணினான் ராஜேஷ்.
"சந்தியா ப்ளீஸ் அழாதே! என் குழந்தையை எண்ணி நீ இவ்வளவு உணர்ச்சி வசப்படுவாய் என்று நான் நினைக்கவே இல்லை" என்றான் உணர்ச்சிப் பெருக்குடன்.
"இல்லை ராஜேஷ். இது என் கதை" என்றாள் சந்தியா.
"புரியலையே! இது உன் கதையா? என்ன சொல்கிறாய்"
விம்மி அழுத வண்ணம் சந்தியா ராஜேஷ் மடியில் சாய்ந்தாள்.
"ராஜேஷ்! இந்த ரம்யாக் குட்டி போலத்தான் என் வாழ்க்கையும். என் அம்மா, அப்பாமேல் எனக்குக் கொள்ளை அன்பு, பாசம். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் விவாகரத்து என்று வேறு வேறு பக்கம் போனார்கள். அப்பா லண்டனில் ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அம்மா ஒருவனை மணந்து கொண்டு சிங்கப்பூர் போய்விட்டாள். நான் என் பாட்டியிடம் வளர்ந்தேன். என் கல்லூரி வயதில் பாட்டியும் போய்ச் சேர்ந்துவிட்டாள். அனாதையாய் லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தேன். இப்ப சொல்லுங்க ராஜேஷ்... ரம்யா குட்டியின் வாழ்க்கை....!"
"புரிகிறது சந்தியா.... நீ இப்ப அநாதை இல்லையே... நானிருக்கிறேன் உனக்கு. ரம்யாவின் அம்மா வேறு கல்யாணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு அம்மா, அப்பா நாம்தான். நீ கவலைப்படாதே" என்று சொல்லி, சந்தியாவை அணைத்துக் கொண்டான் ராஜேஷ்.
நிம்மதியாக அவன் மடியில் கண்ணுறங்கத் தொடங்கினாள் சந்தியா.
குருப்ரியா, பாம்டேல், கலிஃபோர்னியா |