காந்தித்தாத்தா நம் தாத்தா
ஜனவரி 30. மாவீரர் நாள். மகாத்மா காந்தியடிகள் நினைவுநாள். நம்மில் பலருக்கு காந்தியைத் தெரியாது. புத்தக வர்ணனைகள்; நிழற்படங்கள், திரைப்படக் கருப்பு வெள்ளை பிம்பங்கள்; ஊன்றுகோலுடன் நடக்கும் பொக்கை வாய், வழுக்கைத் தலைத் தாத்தா சிலைகள்; காந்திநகர், காந்திசாலை என்ற பெயர்கள்; இவை எல்லாம் நமக்கு அர்த்தமற்ற அடையாளச் சின்னங்கள்.

பொய், பித்தலாட்டம், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளையும், போலிச் சாமியார் களையும் பார்த்து வளர்ந்த நமக்கு, அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நேர்மையாக இருக்க முடியும் என்பது ஒரு புராணக் கற்பனை. தடுக்கி விழுந்தால் ஓர் உச்சாணிக் கொம்பு பட்டத்தை அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள் பெயருக்கு முன்னால் போட்டு விளம்பரம் செய்யும் கலாச்சாரத்தில் ஊறிய நமக்கு மகாத்மா என்ற பட்டம்கூடக் காலாவதியான பழைய பட்டம். "மனிதன் என்பவன் தெய்வ மாகலாம்" என்பது வெறும் பழைய சினிமாப்பாட்டு, அவ்வளவுதான்.

அக்டோபர் 2 விடுமுறை, "காந்தித்தாத்தா நம் தாத்தா" போன்ற குழந்தைப் பாடல்கள், அலுப்புத்தட்டும் பாடநூல் வரலாறு, இவற்றைத்தாண்டி காந்தியைப் புரிந்து கொள்ள யாருக்கும் நேரமில்லை. தப்பித் தவறி காந்தியின் சுயசரிதை "சத்திய சோதனை" படித்தவர்களும் நுனிப்புல் மேய்வதோடு சரி. பலருக்கு ரிச்சர்ட் அட்டன்பரோவின் "காந்தி" படத்திலிருந்து தான் காந்தி பற்றி ஓரளவுக்காவது தெரியும். அப்படிப் பார்த்தவர்களுக்கும் காந்தி ஒரு புரியாத புதிர்தான்.

ஆனால், நமக்கு முந்தைய தலைமுறை, காந்தியோடு வாழ்ந்த தலைமுறை. அவர்கள் கண்ணோட்டமே வேறு. "இனி வரும் தலைமுறைகள் இப்படியும் ஒரு மனிதன், ரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் நடந்திருப்பானோ என்று திகைப்பார்கள்" என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். காந்தி மறைந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட நியூ யார்க் டைம்ஸ் "கௌதம புத்தருக்குப் பிறகு தோன்றிய மாபெரும் இந்தியன்" என்று குறிப்பிட்டது. "நம் விளக்கு அணைந்து விட்டது. ஆனால், இந்த நாட்டில் ஒளி வீசிய அந்த விளக்கு சாதாரணமானதல்ல. ஓர் ஆயிரம் ஆண்டு களுக்கு அந்த விளக்கின் வெளிச்சத்தை இந்த நாடு பார்க்கும்; இந்த உலகம் பார்க்கும்" என்றார் ஜவஹர்லால் நேரு.

ஆயிரம் ஆண்டுகளல்ல; ஐம்பது ஆண்டு களுக்குள்ளேயே இந்தியர்கள் காந்தியை மறந்து விட்டார்கள்; காந்தியைக் கொன்றவர் களையும் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். காந்தியை எதிர்த்தோம் என்று பெருமை கொள்ளும் இயக்கங்கள் அவர் பிறந்த குஜராத் மட்டுமல்லாமல், அனைத்து இந்தியாவையும் ஆள முடிகிற காலம் இது. காந்தியைத் தெய்வமாகப் போற்றியவர்களின் அடுத்த தலைமுறையினர் பலர் அவரைத் தீவிரமாக வெறுப்பதையும் பார்க்கிறோம். கலி·போர்னியாவின் ·ப்ரிமான்ட் நகரில் "ஹே ராம்" படத்தைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. காந்தியைக் கொலை செய்ய நினைக்கும் கதாநாயகன் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் காந்தியைச் சுடும் காட்சியில் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

இந்தியாவின் கடந்த சில பத்தாண்டுகள் வரலாற்றைக் கவனிப்பவர்களுக்கு இது ஒரு வியப்பல்ல. காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் நாடகங்களும், புத்தகங்களும், கட்டுரைகளும், படித்த மேல்தட்டு மக்களி டையே வரவேற்பு பெற்று வருகின்றன.

"அரசாங்கத்தையே சங்கடப் படுத்திப் பணியச் செய்யும் முரட்டுப் பிடிவாதமும், தாம் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சாதிக்கிற சுபாவமும் கொண்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன் னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடி யாக அப்புறப்படுத்த இதை விட்டால் வேறு வழியில்லை எனக் கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை" என்று அண்மையில் "திண்ணை" வலையிதழில் விளக்கியிருந்தார் எழுத்தாளர் மலர்மன்னன். ( thinnai.com/pl0113065.html)

காந்திக்கு "பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்கள்" தந்த பேராதரவு அரசியல் தலைமையைத் தந்திருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் மலர்மன்னன், காந்தி படுகொலையை போர்க்களத்தில் தன் கடமைக்காக எதிராளியைக் கொல்வதோடு ஒப்பிடுகிறார்.

எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள், ஒருவரை இன்னொருவர் கொல்வது, அவர் நிராயுத பாணியாக இருந்தாலும் கூடக் கொலைக் குற்றமாகக் கருதப் படுவதில்லையே என்று வாதிடுகிறார். மற்ற இந்துக்கள் தங்கள் நலன் எது என்று உணராத "அப்பாவி இந்துக்கள்" என்ற சாக்கில் ஒரு சில தீவிர இந்துக்கள் அட்டூழியம் செய்வதும், நியாயம் கற்பிப்பதும் காந்தி படுகொலையிலிருந்து இன்று வரை தொடர்கிறது.

இந்தியா காந்தியை மறந்திருக்கலாம். குறுகிய மனப்பாங்கு கொண்டவர்கள் அவரைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால், கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடும் உலக மக்கள் அவரை மறக்கவில்லை. அமெரிக்காவில் சிறுபான்மைக் குடியுரிமை இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்திய அருள்திரு. மார்ட்டின் லூதர் கிங் காந்திய அஹிம்சை வழி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் வலிமையான ஆயுதம் என்றார். இன்று இந்திய அமெரிக் கர்கள் முழுக் குடிமக்களாக அமெரிக்காவில் வாழமுடிகிறதென்றால் அதற்கு வித்திட்டது இந்த குடியுரிமை இயக்கம்தான். இந்தியா வில் சிறுபான்மையினரையும், ஒடுக்கப்பட்ட சாதியினரையும் கடுமையாகச் சாடும் பல இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவில் குடியுரிமை இயக்கம் போராடி வென்ற சிறுபான்மை உரிமைகளை தங்களுக்கு வலியுறுத்தத் தயங்குவதில்லை. இந்தப் போலித்தன்மை அவர்களை உறுத்துவது மில்லை.

தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மாண்டெல்லா வாழ்நாளில் பெரும்பகுதியை இனவெறியாட்சியை எதிர்த்துச் சிறையில் கழித்திருந்தாலும், வன்முறையையும் வெறுப்பையும் உதறி, காந்திய வழியில் ஒரு புதிய பாதையை வகுத்திருக்கிறார். போராளிகளின் பயங்கரவாதமும் அதை எதிர்க்கும் அரசுகளின் பயங்கரவாதமும் புதியதல்ல. சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தி எல்லாவித வன்முறைகளையும் பார்த்தவர்தாம். வன்முறை அமைதிக்கு வழிவகுக்காது என்பதை உணர்ந்தவர் காந்தி. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேலி-பாலஸ்தீனர், சிங்களவர்-ஈழத்தமிழர், காஷ்மீர் போர்களில் வன்முறை என்ன சாதித்திருக்கிறது? அண்மையில் சிலே நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி மிச்சேல் பாச்சேலட் சொன்னதுபோல் வெறுப்பும் வன்முறையும் நாம் நேசிப்பதை நாசமாக்குகிறது. இதை உலகுக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி அஹிம்சை வழியை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தி. அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் எவ்வளவோ.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com