பார்வை ஒன்றே போதுமே!
விழிகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வில்லை (Lens) மற்றும் விழித்திரையில் (Retina) அடங்கி உள்ளது. ஒளிக்கதிர்கள் கண்ணின் வில்லை வழியே உள் நுழைந்து, பின்னாலிருக்கும் விழித்திரையில் விழவேண்டும். விழி வில்லையில் ஊடுருவும் ஒளிக்கதிர் குவிந்து ஏற்படும் பிம்பம் விழித்திரைக்குச் சற்று முன்னால் விழுந்தால் அது கிட்டப் பார்வை ஆகும். பிம்பங்கள் விழித்திரையைத் தாண்டிப் பின்னால் விழுந்தால் எட்டப்பார்வை ஆகும். வில்லையின் மீள்தன்மை குறைவதால் அது இறுகிக் கடினமானால் வெள்ளெழுத்து எனப்படும் மூப்புப் பார்வை உண்டாகும்.

கிட்டப்பார்வை
இது சிறு குழந்தைகளுக்கும், பதின்ம வயதினருக்கும் வரக்கூடியது. அருகில் இருப்பவை நன்றாகத் தெரியும். தொலைவில் இருப்பவற்றைப் பார்க்கக் கடினமாக இருக்கும். பள்ளிக்கூடத்தில் கரும்பலகை சரியாகத் தெரியாமல் அவதிப்படுவர். தலைவலி வரலாம். புத்தகங்களை மிக அருகில் வைத்துப் படிப்பது ஒரு அறிகுறி. சரியான சமயத்தில் கண்ணாடி அணிந்து பார்வையைச் சரி செய்யாவிட்டால் பார்வை மோசமாகலாம். மிக அதிகமான கிட்டப்பார்வை இருப்பவர்களுக்குக் கண் அழுத்தம் (Glaucoma) ஏற்படலாம்.

எட்டப்பார்வை
தொலைவில் இருப்பது நன்றாகத் தெரியும். அருகில் இருப்பது மசமசவென்று இருக்கும். சிறு வயது முதலே இந்த பிரச்சனை தொடங்கலாம். சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் வெள்ளெழுத்து வரும்போது, வில்லை கடினமாவதால் கண்டுபிடிக்கப்படலாம். பொதுவாக இந்த வகை பார்வைக் கோளாறுகள் குடும்பத்தில் பலரைத் தாக்கக்கூடும்.

மூப்புப்பார்வை
இந்தப் பார்வைக் கோளாறு 40 வயது தாண்டியவர்களைத் தாக்கக்கூடும். வயதாக ஆக தலை நரைப்பது போல் வெள்ளெழுத்தும் வந்துவிடும். சிலருக்கு முன்னதாகவும், சிலருக்குச் சற்று தாமதமாகவும் வரலாம். குறிப்பாக, சின்ன எழுத்துக்களைப் படிக்க முடியாது. புத்தகங்களைச் சற்றுத் தள்ளி வைத்தால் படிக்க முடியும். மிக அருகில் வைத்துப் படிக்க முடியாது. கண்கள் சோர்வடையலாம். தலைவலி ஏற்படலாம். இந்தக் காலகட்டத்தில் கணினி, கைபேசி மற்றும் தூரப்பார்வை என்று கண்கள் மாற்றி மாற்றி வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதில் வில்லை சுருங்குவதும் விரிவதும் வயதாக ஆகச் சிரமப்படும். கிட்டப் பார்வைக் கோளாறு முன்னரே இருப்பவருக்கு கிட்டப்பார்வை கண்ணாடியைக் கழட்டினால் படிக்க முடியும். இது 65 வயதுவரை அதிகமாகக் கூடும் அதற்குப் பிறகு மோசமாகாது.

பரிசோதனை
பார்வைக் கோளாறு இருந்தால் உடனடியாகப் பரிசோதனை தேவை. உருவம் மசமசவென்று இருந்தாலோ,(blurred vision), இரண்டு பிம்பங்கள் தெரிந்தாலோ, அடிக்கடி தலைவலி ஏற்பட்டாலோ, கண்களில் நீர் பெருகினாலோ, கண்ணைச் சுருக்கிப் படிக்க நேர்ந்தாலோ வயது எதுவானாலும் கண் மருத்துவரை நாட வேண்டும். இதைத் தவிர சின்னக் குழந்தைகளைப் பள்ளியில் செவிலியர்கள் பரிசோதனை செய்வர். முதன்மை மருத்துவர்களும், குழந்தை மருத்துவர்களும் ஆண்டுதோறும் செய்யும் தவிர்ப்புப் பரிசோதனையில் (Preventive Physical Exam) கண் பரிசோதனையும் செய்வர்.

40-54 வயதினருக்கு 2-4 வருடங்களுக்கு ஒருமுறையும்
55-64 வயதினருக்கு 1-3 வருடங்களுக்கு ஒருமுறையும்
65 வயதுக்கு மேல் 1-2 வருடங்களுக்கு ஒருமுறையும்
கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதைத் தவிர கண் அழுத்தம் (Glaucoma) அதிகமாக இருப்பவர்களுக்கும், நீரிழிவு (Diabetes) இருப்பவர்களும், வேறு சில கண் உபாதைகள் இருப்பவர்களும் மருத்துவ ஆலோசனைப்படி 3-6 மாதங்களுக்கு ஒருமுறை செய்யவேண்டி வரலாம்.

தீர்வு
கண்ணாடி மற்றும் தொடுவில்லை (Contact lens) மூலம் இந்தப் பார்வைக் கோளாறுகளைச் சரி செய்யமுடியும். தற்போது LASIK என்று சொல்லப்படும் அறுவை சிகிச்சை அதிகக் கிட்டப்பார்வை இருப்பவர்களுக்குச் செய்யப்படுகிறது. பல வருடங்களாக கண்ணாடி அணிந்தவர்களும் இந்த அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் பெறலாம். வெள்ளெழுத்துக் கண்ணாடிகள் மருந்துக் கடைகளில் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. அடிக்கடி புத்தகம், கணினி, தூரப்பார்வை என்று வேலை செய்பவர்களுக்கு Bifocal and Progressive என்று கண்ணாடிகள் மருந்துச் சீட்டு மூலம் பெறமுடியும். சரியான குவிய நீளம் உள்ள கண்ணாடி அணிவது முக்கியம்.

தொடுவில்லை (Contact lens) அணிபவர்கள் அதைச் சரியாக அணிய வேண்டும். அதை அறிவுரைப்படி தூய்மையாக வைக்க வேண்டும். தூங்கும்போது கழட்டி வைக்கவேண்டும். கவனக் குறைவாக இருந்தால் கண்களை நுண்ணுயிர்க் கிருமி தாக்கலாம். இதனால் பார்வை இழக்க நேரிடலாம். வயது முதிர்ந்த காலத்தில் கண்புரை (Cataract) ஏற்படலாம். இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். இதற்குப் பின்னர் வைக்கப்படும் வில்லைகள் முன்பு இருந்த பார்வைக் கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடும். வயதானால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியோடு இதுவும் ஒரு நன்மை என்று சொல்லலாம்.

கண்களைப் பாதுகாத்தல்
பார்வை நன்றாக இருக்கக் காய்கள், பழங்கள் உட்கொள்ள வேண்டும். கண்ணைச் சுத்தமாக வைக்க வேண்டும். கண் மை, அழகுப் பொருட்களை அணியும் போது அதிக கவனம் தேவை. சில நேரங்களில் இவற்றின் மூலம் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கமோ ஒவ்வாமையோ ஏற்படலாம். நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும். தொலைக்காட்சி, கணினி, வீடியோ விளையாட்டுகளில் குறைந்த நேரமே செலவிட வேண்டும். இரு கண்களின் மீதும் ஒரு கண் வைப்பது நல்லது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com