சிதார் மேதையும், ஹிந்துஸ்தானி இசையை உலகெங்கும் பரப்பியவருமான பண்டிட் ரவிஷங்கர் டிசம்பர் 11, 2012 அன்று 92வது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார். ஏப்ரல் 7, 1920 அன்று வாரணாசியில் ஷ்யாம் ஷங்கர்-ஹேமாங்கினி தேவி தம்பதியினருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார் ரவிஷங்கர். இயற்பெயர் ரொபிந்த்ரோ ஷங்கோர் சௌத்ரி (Robindro Shaunkor Chowdhury). மூத்த சகோதரர் உதய் ஷங்கர் நடனக் கலைஞர். அவர் உலகெங்கும் இந்திய நடனக் கலையைப் பரப்பி வந்தார். 1936ல் அவரது உதவியால் பாரிஸுக்குச் சென்ற ரவிஷங்கர், அவருடன் இணைந்து பணியாற்றினார். அக்காலத்தில் மேற்கத்திய இசையுடன், ஜாஸ், பாப் ராக் போன்ற புதிய இசை வடிவங்களையும் கற்றுக் கொண்டார்.
ஹிந்துஸ்தானி இசையின் பிதாமகராகக் கருதப்படுபவர் தான்சேன். அவரது பாரம்பரியத்தில் வந்த சிதார் கலைஞர் உஸ்தாத் அலாவுதீன் கான். அவரிடம் சிதார் இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார் ரவிஷங்கர். சிதார் மட்டுமல்லாது, சுர்பஹார், ருத்ர வீணை, ருபாப், சுர்சிங்கர் என கருவிகளை திறம்பட வாசிப்பதிலும் வல்லவரானார். அலாவுதீன் கானின் மகளான அன்னபூர்ணா தேவியை மணந்து கொண்டார். அன்னபூர்ணா தேவி சுர்பஹார் வாசிப்பதில் தேர்ந்தவர். இவர் ரவிஷங்கருடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். ஆனால் இவர்களது திருமணம் நீடிக்கவில்லை.
பின் மும்பை சென்ற ரவிஷங்கர் இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷனுடன் இணைந்து பணியாற்றினார். 'சாரே ஜஹான் சே அச்சா' பாடலுக்கு மாற்றிசை வடித்தார். கோதான், அனுராதா, காந்தி போன்ற படங்களுக்கு இசையமைத்தார். 1944ல் சத்யஜித் ரேவின் Apu trilogy படங்களுக்கு இசையமைத்தார். 1956வரை அகில இந்திய வானொலியின் இசை இயக்குநராகப் பணியாற்றிய அவர், பின்னர் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்திய இசையை அங்கெல்லாம் பரப்பினார். குறிப்பாக ஹிந்துஸ்தானி இசையை அப்பகுதிகளில் அனைவரும் அறியும்படிச் செய்தார். பிரபல மேதை யெஹுதி மெனுஹினுடன் இணைந்து இவர் அமெரிக்காவில் வாசித்த கச்சேரி மிகப் பிரபலமானது. அது 'West Meets East' என்ற பெயரில் ஆல்பமாக வெளிவந்தது. அந்த ஆல்பத்திற்காக 1967ல் சேம்பர் ம்யூசிக் பிரிவில், தனது முதல் கிராமி விருதினைப் பெற்றார் ரவிஷங்கர். 1971ல் பங்களாதேஷ் நிதியுதவிக்காக இவர் நடத்திய இசை நிகழ்ச்சி ஆல்பம் ஆனது. அதற்காக இரண்டாவது கிராமி விருது கிடைத்தது. 2000த்தில் 'Full Circle: Carnegie Hall 2000' என்னும் ஆல்பம் 'சிறந்த உலக இசைப் பேழை' என்னும் பிரிவில் கிராமி விருது வென்றது. மூன்று கிராமி விருதுகளைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் பண்டிட் ரவிஷங்கர்.
கலிஃபோர்னியாவின் 'இந்தியன் மியூசிக் ஆஃப் த கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட்' உள்ளிட்ட பல அமைப்புகளின், கல்லூரிகளின் இசைப் பேராசிரியராக, பயிற்றுநராகப் பணியாற்றி இருக்கிறார் பண்டிட்ஜி. அவருடைய சிதார் ஒலிக்காத இசைமேடை உலகில் இல்லை என்னும் அளவுக்குப் பல இசைக்குழுக்களுடன் சேர்ந்து அவர் வாசித்திருக்கிறார். யெஹுதி மெனுஹின், ஜுபின் மேதா, ஃபிலிப் க்ளாஸ், ஹாரிஸன் ஃபோர்ட், ஜான் கொல்ட்ரேன், ழான் ரென்வா (Jean Renoir), ஜார்ஜ் ஹாரிசன், ஜாகிர் ஹுசைன், ஹரி பிரசாத் செளராஸியா, பீட்டர் செல்லர்ஸ், கென்னடி ஃபோர்ட், ஜிமி ஹெண்டெரிக்ஸ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் பண்டிட்ஜியுடன் விரும்பி இணைந்து பணியாற்றினர். அவரிடம் இசை பயின்றனர். இசையுலகின் புகழ்பெற்ற பீட்டில்ஸ் குழுவினர் கூடப் பண்டிட்ஜியிடம் பயின்றவர்களே. இந்திய அளவில் எல்.சுப்ரமணியம், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் பண்டிட்ஜியிடம் மிகுந்த மதிப்பும், அன்பும், குருபக்தியும் கொண்டவர்களாகவர். ஜோக் ராகம் பண்டிட் ரவி ஷங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ஒன்று. திலக் ஷ்யாம், நட் பைரவ், பைராகி உள்ளிட்ட சில ராகங்களையும் பண்டிட்ஜி அறிமுகிப்படுத்தியுள்ளார். தன் வாழ்க்கை வரலற்றை 'My Music My Life', 'Raga Mala: The Autobiography of Ravi Shankar' என இரு பகுதிகளாக எழுதியிருக்கிறார்.
1989ல் ஹைதராபாத்தில் அவர், சுகன்யா ராஜன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த அனுஷ்கா ஷங்கர் ரவிஷங்கரின் சிறந்த இசை வாரிசாக அறியப்படுகிறார். அனுஷ்காவுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்திருக்கிறார் ரவிஷங்கர். மற்றொரு மகளான நோரா ஜோன்ஸூம் சிறந்த இசைக் கலைஞர். கிராமி உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். 1986 முதல் 1992வரை பாராளுமன்ற மேலவையின் நியமன எம்.பி.யாகப் பணியாற்றினார் ரவிஷங்கர். சங்கீத நாடக அகாதமி, காளிதாஸ் சம்மான், பத்ம பூஷண், பத்ம விபூஷண், இங்கிலாந்து அரசவையின் வீரப்பெருந்தகை (Knighthood), ரேமன் மக்சேசே, போலார் விருது, யுனெஸ்கோ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக 1999ல் இவருக்கு இந்தியாவின் மிக உயரிய 'பாரதரத்னா' வழங்கப்பட்டது. உலகின் பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
பண்டிட் ரவிஷங்கர் அவர்களது கடைசி இசை நிகழ்ச்சி நவம்பர் 4, 2012 அன்று கலிஃபோர்னியா லாங் பீச்சில் உள்ள டெரஸ் தியேட்டரில் நிகழ்ந்தது. அடுத்த கிராமி விருதைப் பெறப்போவது பண்டிட்ஜியா அல்லது அவரது மகளா என்று மக்கள் விவாதித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவர் காலமான பின், வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நம் தேசத்தின் பாரம்பரியத்தையும், இசையின் பெருமையையும் ஒருசேர உலகுக்கு அறிவித்த பண்டிட் ரவிஷங்கர் மறக்கவொண்ணாத மாமேதை. அவருக்கு நமது அஞ்சலி. |