திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதர்
திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் திருவாரூரிலிருந்து மூன்றாவது ரயில் நிலையம் திருநெல்லிக்காவல். பஸ்களும் உண்டு. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் நால்ரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலங்கள் 274. அதில் 'கா' என்று முடியும் திருத்தலங்கள் ஐந்து மட்டுமே! அவை திருவானைக்கா, திருநெல்லிக்கா, திருக்கோடிக்கா, திருக்கோலக்கா, திருக்குரங்குக்கா. 'கா' என்றால் சோலை. நெல்லி மரச் சோலையை உடையதால் இது 'திருநெல்லிக்கா'. வடமொழியில் 'ஆமலக வனம்'. தேவலோகத்தில் உள்ள கற்பகம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் முதலிய ஐந்தும் இங்கே நெல்லி மரங்களாக அமைந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. தலத்திற்குரிய மூன்று நெல்லி மரங்கள் தற்போதும் உள்ளன. இதற்குப் புராணத்தில் சொல்லப்பட்ட பெயர்கள்: அருணநகரம், சகியாமலபுரம், பிரமதீர்த்தபுரம், குட்டரோக ஹரம், மங்களாபுரம், பஞ்சதீர்த்தபுரம், பஞ்சகூடபுரம் போன்றவை. திருமாலின் அம்சமாகிய ஹயக்ரீவர் அகத்திய மாமுனிவருக்கு திருநெல்லிக்காவின் பெருமைகளை உபதேசித்ததாக வரலாறு.

இங்கே இறைவன் பெயர் நெல்லிவன நாதர். இறைவி, மங்கள நாயகி. கல்வெட்டில் 'ஆமலகேஸ்வரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூலமூர்த்திக்கு ஆமலக மகாலிங்கம், அமிர்தலிங்கம், மங்களலிங்கம், ஆதிலிங்கம், மூலலிங்கம், சதுர்வேதபுரீசன், ஆமலகேந்திர சோமானுக்கிரகன் எனப் பல பெயர்களைப் புராணம் குறிப்பிடுகிறது. இத்தல இறைவனை பிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர், சுசுன்மா உள்ளிட்ட பலர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். நெல்லிவன நாதர் சன்னதியில் செய்யப்படும் தானம், தவம் முதலியன சிறியதாயினும் பெரும்பயன் தரும் எனக் கூறப்படுகிறது. இறைவனுடைய அரு உருவத் தன்மைக்கு அடையாளமாய் உள்ளது இத்தல லிங்கம். காணப்படாத அருவமும், காணப்படும் உருவமும் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. "காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்" எனப் பெரிய புராணமும், "ஒருநாமம், ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ" எனத் திருவாசகமும் குறிப்பிடுகிறது.

சூரிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் எனக் கோயிலைச் சுற்றி ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. பூலோகத்தில் பருவமழை பொய்த்ததால் உயிர்கள் துன்பமுற்றன. தேவர்கள் இத்தலத்தை அடைந்து எக்காலமும் நீர் வற்றாத தீர்த்தங்களை அருளும்படி வேண்ட, இறைவன் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டுத் தமது சூலப்படையால் ஐந்து தீர்த்தங்களை உண்டாக்கி அதில் கங்கையின் துளிகளைச் சேர்ப்பித்தார். இவற்றில் மூழ்கிப் பாவங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் நீங்கலாம் என்பது ஐதீகம்.

வயல்களுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி நீரோடைகளும் சோலைகளும் அமைந்துள்ளன. கோயில் மேற்குநோக்கி உள்ளது. எண்பது அடி உயரமுள்ள ராஜகோபுரம் ஐந்து கண்களையும் ஐந்து கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது. கோபுரத்துக்கு வெளியே மண்டப நந்தி, கொடிமரம், கோயிலின் உள்ளே ஒரு பிரகாரம், வெளியே இரு பிரகாரங்கள் உள்ளன. மூன்று பக்கமும் கோயில் நந்தவனம். உள் பிரகாரத்தில் விநாயகர், முனீஸ்வரன், முருகன், சன்னதிகளும், வடபுறத்தில் நெல்லி மரத்தின் அடியில் நெல்லிவன நாதர் சன்னதியும் அமைந்துள்ளன. கீழ்ப்புறத்தில் யாகசாலை, சூரியன், பைரவர் சன்னதி, மாலைகட்டி மண்டபம், மடைப்பள்ளி, இரு கிணறுகள் உள்ளன. தெற்கில் பன்னிருகால் மண்டபம், எதிரில் பிரம்ம தீர்த்தக் குளம் ஆகியன அமைந்துள்ளன. உள்மண்டபத்தில் நெல்லிவன நாதர் சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் உள்ளன. மண்டபத்தின் மேற்புறம் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர் ஆகிய மூர்த்திகள் இடம் பெற்றுள்ளனர்.

புராணப்படி ஆமலகேச சோழன் ஆலயத்தை அமைத்து நகரை உருவாக்கினான். கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா, ஆவணி திருக்கல்யாண விழா, கந்தசஷ்டி, சங்காபிஷேக விழா போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கடை ஞாயிற்றுக்கிழமையில் பெருமான் சூரிய தீர்த்தத்தில் காட்சி தருவார். மாசி மாதம் சிவராத்திரி ஒரு வாரம்வரையில் மூலமூர்த்தியின் மேல் சூரியஒளி படிகிறது. இது சூரியபூஜை எனப்படும்.

நெல்லிக்குப் பல பெருமைகள் உண்டு. நீண்ட வாழ்நாளை அளிக்க வல்லது என்பது ஔவை-அதியமான் கதைமூலம் தெரியவரும் செய்தி. திருமூலரும் நெல்லியைச் சிறப்பித்து "விரும்பும் ஒருவர்க்கு கைத்தலஞ்சேர்தரு நெல்லிக்கனி யொக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். நெல்லிவன நாதனும் தன்னை பக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் நாசம் செய்து அருள்செய்கிறான்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com