கோகுல் & கார்த்திக்
பனிக்கால ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்களை 2012 டிசம்பர் 21லிருந்து 23வரை ஆரஞ்ச் கவுன்டி பாட்மின்டன் கிளப் (OCBC) நடத்தியதில் தத்தம் பிரிவுகளில் சகோதரர்கள் கோகுல் கல்யாணசுந்தரமும் கார்த்திக் கல்யாணசுந்தரமும் சாம்பியன்ஷிப்களை வென்றனர். ஐக்கிய அமெரிக்க பாட்மின்டன் வளர்ச்சி அறக்கட்டளை (United States Badminton Development Foundation) நடத்தும் இந்தப் பன்னாட்டுப் போட்டிகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி மெக்ஸிகோ, கனடா, சீனா, குவாடமாலா ஆகிய நாடுகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் வந்து பங்கேற்றனர்.

கோகுல் கல்யாணசுந்தரம் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளைஞர் ஒற்றையர் பிரிவில் முதலாவதாக வந்தார். 13 வயதான இவர் தன்னைவிட மூத்தவர்களை வென்று சாம்பியன்ஷிப் வென்றது குறிப்பிடத் தக்கது. இவர் சன்னிவேலில் (கலிஃபோர்னியா) சேலஞ்சர் பள்ளியில் எட்டாவது கிரேடு படிக்கிறார்.

கார்த்திக் கல்யாணசுந்தரம் 13 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறியோர் இரட்டையர் பிரிவில் ஜஸ்டின் பாஸ்கிலுடன் ஆடி சாம்பியன்ஷிப் வென்றுள்ளார். இளையோர் ஒற்றையர் பிரிவிலும் முதல் நால்வருக்குள் இந்தப் போட்டியில் இவர் வந்துள்ளார். கார்த்திக்கும் தன் அண்ணன் பயிலும் அதே பள்ளியில் ஆறாவது படிக்கிறார். 2013ம் ஆண்டில் இவர்கள் இருவருமே தத்தமது முதலிடங்களை அமெரிக்க அளவில் தக்க வைத்துக் கொள்வர் என்பது குறிப்பிடத் தக்கது.

கோகுல் (2011, 2012), கார்த்திக் (2012) இருவருமே பான்-அமெரிக்க பாட்மின்டன் போட்டிகளில் முன்னர் அமெரிக்காவின் பிரதிநிதிகளாக ஆடியுள்ளனர். வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களின் முதல் நான்கு இடங்களில் உள்ளவர்கள் பான்-அமெரிக்கப் போட்டியில் பங்கேற்பர்.

அமெரிக்காவில் எல்லாப் பெரிய நகரங்களிலும் விரைந்து பரவி வரும் இந்த விளையாட்டு ஆசியர்களிடையே (குறிப்பாகச் சீனா, சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், மலேசிய வழிவந்தோரிடம்) மிகப் பிரபலமானதாகும். காகேசியர் மற்றும் இந்திய வம்சாவளியினரின் ஆர்வமும் இதில் அதிகரித்து வருகிறது. விளையாட்டுக்கான பயிற்சி ஆறு வயதிலிருந்தே தொடங்கியாக வேண்டும். பயிற்சி தருபவர், கிளப் உரிமையாளர் ஆகியோர் விட்டுக் குழந்தைகளுடனும் போட்டியிட வேண்டி வரும்.

அலெக் லீயும், காலீயா ஷியங்கும் 9 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான மூன்று முதலிடங்களையும் (சிறியோர், தம்மின இரட்டையர், கலப்பு இரட்டையர்) வென்றது குறிப்பிடத் தக்க சாதனையாகும்.

நேஹா ஷெட்டி 9 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமியருக்கான ஒற்றையர் போட்டியிலும், கலப்பு இரட்டையர் போட்டியிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றொரு குறிப்பிடத் தக்க சாதனையாகும். சத்வேகா இளங்கோ 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிர் பிரிவில் முதல் நால்வருக்குள் வந்தது குறிப்பிடத் தக்கது.

மேலே உள்ள படத்தில் (இடமிருந்து வலம்): கோச் ஃபூ (பின்டாங் பாட்மின்டன்), கோகுல், கார்த்திக், ஃபிலிப் சூ (30 ஜூனியர் பட்டங்களை வென்றவர், ஆரஞ்ச் கவுன்டி, போட்டிகளை ஏற்பாடு செய்தவர்).

மேலும் தகவலுக்கு:
www.ocbadmintonclub.com
www.teamusa.org/USA-Badminton.aspx
tournamentsoftware.com

© TamilOnline.com