கர்நாடக இசையுலகில் தாம் வாசித்த இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்த கலைஞர்கள் பலர். தனம்மாள் (வீணை), திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாதஸ்வரம்), திருக்கோடிகாவல் கிருஷ்ணையர் (வயலின்), புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை (கஞ்சிரா), கோவிந்தசாமிப் பிள்ளை (பிடில்), அழகநம்பிப் பிள்ளை (மிருதங்கம்) எனப் பலரைச் சொல்லலாம். இவர்களில் 'மிருதங்கச் சக்கரவத்தி' என்று போற்றப்பட்டவர் பாலக்காடு மணி ஐயர். பாலக்காட்டின் புகழ் பெற்ற கல்பாத்தி கிராமத்தில், 1912ல், டி.ஆர். சேஷம் பாகவதர்-அனந்தாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையார் சங்கீத வித்வான். கச்சேரி செய்வது, இசை கற்பிப்பது, சங்கீத உபன்யாசம் என்று வாழ்க்கை நடத்தினார். தாயாரும் அழகாகப் பாடுவார். இவை மணியின் இசையார்வத்திற்கு உரமாக அமைந்தன.
சேஷம் பாகவதர் தினமும் காலையில் சாதகம் செய்வார். கூடவே மணியும் எழுந்து கொள்வான். தந்தை சாதகம் செய்வதற்கேற்ப குதிப்பான். கை தட்டி ரசிப்பான். அவ்வாறு அவன் குதிப்பதும், தட்டுவதும் தாளத்திற்குச் சரியாக இருப்பதை கவனித்த தாயார், 'இவனுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுத்தால் முன்னுக்கு வருவான்' என்று கணவரிடம் சொன்னார். தக்க காலத்தில் மணியைச் சாத்தபுரம் சுப்பையரிடம் மிருதங்கம் கற்க அனுப்பினார். குருகுல வாசம் தொடங்கியது. அதே சமயம் திண்ணைப் பள்ளியில் கல்வியும் தொடர்ந்தது. படிப்பைவிட மணிக்கு மிருதங்கத்திலேயே ஆர்வம் அதிகம். உயர்கல்விக்கு வேறிடம் செல்ல மனமில்லாமல், படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டி வந்தது. மணி, முழு நேரமும் மிருதங்கம் பயில தந்தையார் ஏற்பாடு செய்தார். சுப்பையர் தவிர்த்து தந்தையின் நண்பர் விஸ்வநாத ஐயரிடமும் லய நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் மணி.
ஒருநாள் கிராமத்தின் பிள்ளையார் கோயிலில் சேஷ பாகவதர், அவரது குருநாதர் சிவராம கிருஷ்ண பாகவதர் இருவரும் கதா காலட்சேபம் நடத்தினர். மணியின் குரு விஸ்வநாத ஐயர் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தான் சிறுவன் மணி. அவனது கை அழகாகத் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. குரு விஸ்வநாத ஐயர் அதைக் கவனித்தார். திடீரென மணியை மேடைக்கு அழைத்து, "இனிமே நீ வாசி" என்று கூறிவிட்டு ஒதுங்கி அமர்ந்தார். மேடையில் உள்ளவர்களுக்கு திகைப்பு, பார்வையாளர்களுக்கு வியப்பு. ஆனால் மணியோ அசராமல் அழகாக வாசித்துக் கச்சேரியை நிறைவு செய்தான். மிகத் தேர்ந்த மேதை வாசிக்கிறார் என்று எண்ணுமளவுக்கு வாசிப்பு இருந்தது. சபையோர் பாராட்டினர்.
அதுமுதல் தந்தை மற்றும் குருநாதரின் கச்சேரிகளுக்கு வாசிக்கத் துவங்கினார் மணி. அப்போது அவருக்கு வயது எட்டு. பின் தனியாகவும் கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பித்தார். ஒருமுறை மணியின் வாசிப்பைச் செம்பை வைத்தியநாதய்யர் கேட்டார். மணியின் லாகவம் அவரைக் கவரவே தனது கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக மணியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். பாலக்காடு, கல்கத்தா, காசி எனப் போகும் இடத்துக்கெல்லாம் மணியை உடன் அழைத்துச் சென்றார்.
ஒருமுறை சென்னை எழும்பூர் பக்த ஜனசபாவில் செம்பையின் கச்சேரி. அதற்கு மணி மிருதங்கம். அக்கச்சேரி மணியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. மிகப் பிரமாதமாக வாசித்து அனைவரது நன்மதிப்பையும் பெற்றார் அப்போது அவருக்கு வயது பன்னிரண்டுதான். தொடர்ந்து மியூசிக் அகாடமி உட்படப் பல இடங்களில் செம்பையுடன் வாசித்துப் புகழ் ஈட்டினார்.
அக்காலத்தில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பிரபல லய வாத்தியக் கலைஞராக இருந்தார். அவரிடமிருந்து நுணுக்கங்களை மணி கற்றுக்கொள்ள வேண்டுமென தந்தையார் விரும்பினார். மணியை அழைத்துக்கொண்டு போய் வைத்தியநாத ஐயரைச் சந்தித்தார். ஐயர், மணியைச் சில பாடல்களுக்கு வாசிக்கச் சொன்னார். அவரது வாசிப்பின் நேர்த்தி ஐயரைக் கவர்ந்தது. சீடராகச் சேர்த்துக் கொண்டார். குரு மெச்சும் சீடராக உயர்ந்தார் மணி. திருச்சியில் நடந்த கச்சேரி ஒன்றில் பல்லடம் சஞ்சீவராவ் புல்லாங்குழல் வாசிக்க, மணி மிருதங்கம் வாசித்தார். இருவருக்குமிடையே நல்ல அன்பும் புரிந்துணர்வும் ஏற்பட்டன. அது அரியக்குடி ராமானுஜ ஐயங்காரைச் சந்திக்கும் வாய்ப்பை மணி ஐயருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. சஞ்சீவ ராவின் கிரகப்பிரவேசத்திற்கு ஐயங்கார் பாட, மணி முதன் முறையாக அவருக்குப் பக்கம் வாசித்தார். தொடர்ந்து ஐயங்காருக்கு வாசித்தார்.
"சங்கீதம் என்றாலே என் மனசில் தோன்றுவது ஸ்ரீமான் ராமானுஜ ஐயங்கார் தான்" என்பார் மணி. அரியக்குடி தவிர ஜி.என்.பாலசுப்ரமணியன், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள் எனப் பலருக்கும் மணி ஐயர் பக்கம் வாசித்திருக்கிறார். ஜாம்பவானான மேதை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையுடன் இணைந்து திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் மணி வாசித்த கச்சேரி, அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தொடர்ந்து பிள்ளையுடன் இணைந்து பல கச்சேரிகளில் வாசித்தார். பெண்களுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பது கௌரவக் குறைச்சலாக கருதப்பட்ட காலம் அது. ஆனால் மணி ஐயர் அதை லட்சியம் செய்யவில்லை. அவர் டி.கே.பட்டம்மாளுக்கு விரும்பி வாசித்தார். பின்னால் அவர்கள் இருவரும் சம்பந்திகளாகினர். பிற்காலத்தில் எம்.எல். வசந்தகுமாரிக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.
திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், புல்லாங்குழல் மாலி மூவரும் இசை மூவராகப் போற்றப்படலாயினர். அழகநம்பிப் பிள்ளையை அடுத்து மிருதங்கத்துக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்கென்று தனி மரியாதையை ஏற்படுத்தியவர் பாலக்காடு மணி ஐயர் என்பதால், அழகநம்பி பிள்ளையைப் போலவே இவரையும் ரசிகர்கள் 'கலியுக நந்திகேஸ்வரர்' என்றழைத்தனர். 'தனி' வாசிக்கும்போது மக்கள் எழுந்து செல்லும் நிலையை மாற்றி, அதற்குத் தனிப் பெருமையை ஏற்படுத்தியவர் மணி ஐயர்தான். பாடகர்களின் மனவோட்டத்திற்கேற்ப வாசிக்கும் ஆற்றல் இருந்ததால் மணி எல்லோராலும் விரும்பப்பட்டார். பாடகர் பாடுவதைப் போன்றே வாசிக்கும் திறன் பெற்றிருந்ததால் "மணி ஐயர் கச்சேரி"யைக் கேட்க அக்காலத்து மக்கள் வெகு ஆர்வமாகக் கூடினர். அவர் 'மைக்' வைத்துக் கொள்வதை விரும்ப மாட்டார். அது நாதத்தைச் சிதைக்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே அவரது கச்சேரி ஒலிபெருக்கி இல்லாமலேயே நிகழும். சாதகம் செய்வதற்கு மிருதங்கமே தேவையில்லாமல் விரல்களாலேயே கணக்குப் போட்டுத் தாளம் வாசித்து சாதகம் செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. அதனால்தான் அவர் 'மிருதங்கச் சக்ரவர்த்தி' என்று போற்றப்பட்டார்.
மணி-பாப்பா-மணி என்பது அக்கால வெற்றிக் கூட்டணிகளுள் ஒன்று. மதுரை மணி ஐயர் கச்சேரி, பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம், பாப்பா வெங்கட்ராமையா வயலின் என்றால் மக்கள் பெருங்கூட்டமாக வந்து ரசித்தனராம். ஒருமுறை இம்மூவரின் கச்சேரி நடந்து முடிந்தது. உடனே வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் பாலக்காடு மணி ஐயர் புறப்பட்டுப் போய் விட்டார். அப்போது வந்த ரசிகர்களில் ஒருவர் மதுரை மணி ஐயரிடம், "ஆஹா.. என்ன ஒரு அற்புதமான கச்சேரி. இன்னிக்குக் கச்சேரிக்கு ஈடு இணையே இல்லை. ஏதோ பன்னீரை அள்ளி மேலே தெளித்தது மாதிரி ஜிலுஜிலுன்னு இருந்தது. என்ன ஒரு பாவம்.. என்ன ஒரு விறுவிறுப்பு. அற்புதம் போங்கோ" என்றாராம். உடனே மணி ஐயர், " சரிதான். ஆனா இத்தனை பாராட்டுக்கும் உரிய மணி ஐயர் புறப்பட்டுப் போயிட்டாரே!" என்றாராம். அந்த அளவுக்கு அக்காலத்து சங்கீத மேதைகள் பெருந்தன்மையான குணாம்சங்களுடன் விளங்கி வந்தனர்.
"மணி ஐயரின் நாதம் அவரது மிருதங்கத்திலோ அல்லது வித்வத்திலோ இல்லை. ஐயரின் விரல்களில் இருக்கிறது" என்று புகழ்ந்து சொன்னவர் பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் அல்லா ராக்கா (ஜாகீர் உசேனின் தந்தை). எடின்பரோ கச்சேரியில் மணியின் வாசிப்பைக் கேட்டு அசந்து போன யெஹுதி மெனுஹின், "மணி ஐயர் தவறே செய்யாத ஒரு எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர்" என்று பாராட்டினார். "அவர் விரல்களில் இருந்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி மிக அழகாக அதனைப் பூர்த்தி செய்து விடுவார் மணி," இது புல்லாங்குழல் ரமணியின் கருத்து. தன் இசைத்திறன் பற்றி மணி ஐயர், "கச்சேரியின் போது என் மனதில் ஒரு திரை ஓடிக்கொண்டே இருக்கும். அந்தத் திரையில் அடுத்து பாடகர் என்ன பாடப்போகிறார், அதற்கு என்ன, எப்படி வாசிக்க வேண்டும் என்பது ஓர் உருவகமாகத் தெரியும். அதை வைத்தே வாசித்து வந்தேன்"என்று குறிப்பிட்டிருக்கிறார். தன்னை ஊக்குவித்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வது மணி ஐயரின் வழக்கம். செம்பையைப் பற்றிக் கூறும்போது, "இளம்வித்வான்களைத் தட்டிக் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வருவதில் மிக்க ஆர்வமும் அக்கறையும் உடையவர்" என்று கூறியிருக்கிறார். தானும் பல வளரும் கலைஞர்களுக்கு வாசித்து ஊக்குவித்திருக்கிறார். எல். வைத்யநாதன், எல்.சங்கர், எல்.சுப்ரமணியன் சகோதரர்களின் பல கச்சேரிகளுக்குப் பக்கம் வாசித்துள்ளார்.
தன் சமகாலத்தவரான பழனி சுப்ரமணியப் பிள்ளைக்கும் இவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. மணி ஐயர் மிருதங்க வாசிப்பில் தஞ்சாவூர் பாணியைப் பின்பற்றினார் என்றால் சுப்ரமணியப் பிள்ளை பாரம்பரிய புதுக்கோட்டைப் பாணியைப் பின்பற்றினார். ஐயரின் மிருதங்கம் பாடுவது போல் அழகியல் நுட்பம் மிக்கதாக இருக்கும். பிள்ளையின் வாசிப்பு மிருதுவாக, அதே சமயம் கம்பீரத்தோடு இருக்கும். இருவரும் இணைந்து பல கச்சேரிகள் செய்துள்ளனர். மணி மிருதங்கம் வாசிக்க, சுப்ரமண்யப் பிள்ளை கஞ்சிரா வாசிக்க நடக்கும் கச்சேரிகளில் லயம் தாண்டவமாடும். ரசிகர்களின் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சுமளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பர். ஐயரின் சீடரான பாலக்காடு ரகு இந்த இரு பாணிகளையும் இணைத்து வாசிப்பதில் தேர்ந்தவர்.
1940ம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக மணி ஐயர் நியமிக்கப்பட்டார். 1956ல் இவருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. சென்னை மியூசிக் அகாதெமியின் 'சங்கீத கலாநிதி' 1966ல் இவரைத் தேடி வந்தது. 1971ல் பாரத அரசின் 'பத்மபூஷண்' வழங்கப்பட்டது. 'சங்கீத கலாநிதி', 'பத்மபூஷண்' விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர்தான். 1979ல் ஜே. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையினரின் 'ரிஷிவேல்லி' பள்ளியில் ஆசானாகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தனக்கென்று சிறப்பானதொரு சீடர் பரம்பரையையும் உருவாக்கியுள்ளார். பாலக்காடு ரகு, பாலக்காடு சுரேஷ், வி. கமலாகர ராவ், உமையாள்புரம் சிவராமன், செங்கோட்டை ராஜாமணி எனப் பலர் அவரது சீடர்களாவர். பிரபல வித்வான் கே.வி. நாராயணசாமி அவர்களும் பாலக்காடு மணி ஐயரிடம் ஆரம்ப காலத்தில் வாய்ப்பாடு கற்றுக் கொண்டிருக்கிறார். "மணி ஐயர் இல்லை என்றால் நான் இல்லை" என்பார் கே.வி.என். கும்பகோணவாசியான உமையாள்புரம் சிவராமனை "சிவராமா, நீ மெட்ராஸ் போய் தங்கிக்கோ. நிறைய கச்சேரிக்கு நீ வாசிக்கணும். பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளை நீ கேட்கலாம். நீ மிருதங்க உலகில் மிகவும் பிரகாசமாக வருவாய்.." என்று சொல்லி ஆசிர்வதித்தாராம். மகன் பாலக்காடு ராஜாமணியும் தந்தையிடமிருந்து மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளார். சி.எஸ்.ஐ.ஆரில் பணியாற்றிய அவர் தற்போது மாணவர்களுக்கு இசை கற்பிக்கிறார்.
மணி ஐயர் 1981ல் காலமானார். 2012 மணி ஐயரின் நூற்றாண்டு. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா வழங்கிய மணி ஐயர் நூற்றாண்டு விருது, வயலின் மேதை டி.என். கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் பாலக்காடு மணி ஐயரின் நூற்றாண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
பா.சு.ரமணன் |