தாயாக மாறுங்கள்
உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விடிவு எப்போது என்பதுதான் தெரியவில்லை. என்னைச் சுற்றி உள்ள குடும்பங்கள் ஏராளம். வீக் எண்ட் ஆனால் பார்ட்டி, ஃபேமிலி அவுட்டிங் என்று என்ஜாய் செய்கிறார்கள். எனக்கு 11 வருஷமாக எந்தச் சுகமும் இல்லை. வாழ்க்கை எந்திரம்போல ஓடுகிறது. வேலை விட்டால் வீடு, சமையல், கிளீனிங் அவ்வளவுதான்.

15 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கச் சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வந்தோம். எங்களுடையது காதல் திருமணம். என்னைத் திருமணம் செய்து கொண்டால் சொத்து கிடையாது என்று என் மாமனார் பயமுறுத்த, அந்த ரோஷத்தில், 'எனக்கு எந்தப் பங்கும் வேண்டாம்' என்று என் கணவர் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அதனால் அங்கே இருக்கப் பிடிக்காமல் நான் முயற்சி எடுத்து இங்கே வந்தோம். அவருடைய அண்ணன், தம்பிகள் எல்லோரும் நன்றாக அவருடைய பூர்வீக வீட்டில் (பல கோடி பெறும்) அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்லமுடியாது. நாங்கள் வசதியாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்ய அவருக்கு வாய்ப்புக் கிடைத்து, சுமாராகத்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. நான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 2, 3 வருடங்களுக்குள் நான் இந்த வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு, என்னுடைய தொழிலுக்கு வேண்டிய கோர்ஸையும் முடித்து விட்டேன். குழந்தைகள் சற்றுப் பெரியவர்களாகி விட்டதால், நானும் வேலைக்குப் போக ஆரம்பித்தால் குடும்பம் இன்னமும் நன்றாக அமையும் என்று எதிர்பார்ப்புகள், திட்டங்கள் நிறைய இருந்தன. திடீரென இவரது கம்பெனியை மூடி விட்டார்கள். எனக்கும் வேலையில்லை. அவர் குடும்பத்தைச் சமாளிக்கச் சின்ன வேலையை எடுத்துக் கொண்டார். எனக்கு அப்புறம் வேறிடத்தில் 100 மைல் தள்ளி வேலை கிடைத்தது. அது நிரந்தரம் என்று அங்கே நான் போக, வீக் எண்டில் வந்து இவருக்கும் குழந்தைக்கும் சமைத்து வைத்து விட்டுத் திரும்புவேன்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் இவர் நைட் ஷிஃப்ட் வொர்க்கை விட்டுவிட்டுப் பகலில் பார்க்கும்படி ஏதோ பார்ட் டைம் வேலை எடுத்துக் கொண்டார். அப்புறம் அதையும் விட்டுவிட்டு எல்லோரும் நான் வேலை செய்யும் ஊருக்கே சென்றோம். குடும்பம் ஒன்றானது. அது ஒரு நிம்மதி. ஆனால் இவருக்கு வேலை இல்லை. இடம் பெயர்ந்ததால் நண்பர்கள் என்று யாருமில்லை. ஏற்கனவே அவர் ஒரு Introvert. அருகில் உள்ள குடும்பங்களுடன் நான் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும் அவருக்கு ஆர்வம் இல்லை. மனிதர்களை விட்டு ஒதுங்கித் தனியாக இருக்க ஆரம்பித்தார். எங்களுக்குள் பிரச்சனை. பெரிய பையன் காலேஜ் போக முடியவில்லை. எல்லோரையும் போல குடும்பமாக அவனை அழைத்துக் கொண்டு கல்லூரி, கல்லூரியாகப் போய்ப் பார்க்க முடியாத நிலைமை. நன்றாகப் படிக்கும் பிள்ளை. வசதி இல்லை.

ஒரு நாள் நான் போட்ட சண்டையில், அவர் கிடைத்த வேலையை எடுத்துக் கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தார். வீடு மார்ட்கேஜ் கட்டவாவது அந்தப் பணம் உதவியது. கொஞ்சம் தைரியம் வந்தது. பையனுக்குப் பிடித்த கல்லூரியில் அவனைச் சேர்த்தேன். வேலை பரவாயில்லை என்று போய்க் கொண்டிருந்தபோது இவருக்கு ஆக்சிடென்ட் ஆகிப் பழைய நிலைக்குத் திரும்ப மூன்று மாதம் பிடித்தது. அதனால் அந்த வேலை போய் வேறொரு வேலை. பணக்கஷ்டத்தில் இரண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. இரவு 1 மணிக்கு வருவார். எங்களுக்குள் பல வருடங்களாக எந்தக் கம்யூனிகேஷனும் இல்லை. அவருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். அன்று காலையில் தூங்குவார். இரவில் குடிப்பார். குழந்தைகள் படிப்பில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. எந்த விஷயத்தையும் காதில் போட்டுக் கொள்வதில்லை. எனக்கும் வெளியுலகத் தொடர்பு அதிகமில்லை. பெண்ணின் பள்ளிப் படிப்பிலும் அக்கறை காட்டவில்லை. எனக்குக் கணவர் என்று ஒருவர் இப்போது இருப்பது போலவே தோன்றவில்லை. தனிமை என்னை மிகவும் வெறுப்படைய வைக்கிறது. இவர் கொஞ்சம் சாதாரணமாக, பணிவாகப் பேசினால் நன்றாக இருக்கும். "இப்படி இருக்கிறீர்களே, இரண்டு வேலை செய்யச் சொல்லி நான் கேட்டேனா?" என்று ஒருநாள் நான் கொஞ்சம் ஹிஸ்டரிகலாகக் கத்தி விட்டேன். அன்றிலிருந்து அவர் பேஸ்மெண்டில் தான் தூங்குகிறார். எனக்கு work stress அதிகம். நானும் இவரை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறேன். என்னுடைய உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத்தான் இவரை நம்பி வந்தேன். கணவன், மனைவி என்ற உறவே இல்லை என்றால் வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்? எப்போது பார்த்தாலும், எதைக் கேட்டாலும் 'வள்வள்....சுள்சுள்....' எப்படி அட்ஜஸ்ட் செய்வது?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே...

ஒரு மாதிரி உங்கள் இருவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் புரிகிறது. நீங்கள் கொடுத்த விவரத்தில் உங்கள் இருவரில், you take the lead என்பது போலத் தெரிகிறது. உங்கள் கணவர் நல்ல பதவியில் இருந்துவிட்டு, வேலையை விட்டுவிட்டு வந்த பிறகு அடுக்கடுக்கான தோல்விகள்; நண்பர்கள் என்று யாருமில்லை; உறவுகள் அறுந்து போய் விட்டன. மனதைத் திறந்து பேசும் சுபாவமும் இல்லை; இரண்டு வேலைகளினால் உடல் சோர்வு; மனத்தளர்வு; வீட்டிற்கு வந்தால் ஒரு கட்டைபோலத் தூங்கத்தான் மனம் விரும்பும். மனதில் ஏற்பட்ட தனிமையைப் போக்கக் குடியின் துணை. அன்பு, காதல், அக்கறை எல்லா உணர்ச்சிகளுமே மரத்துப் போயிருக்கும். இந்த நிலையில் உங்கள் பங்கு - 'தாயாக மாறுங்கள்'.

உங்களுக்கும் வேலையினாலும் அதிக குடும்பப் பொறுப்பினாலும் அதே சோர்வு இருக்கிறது. ஆனால் உங்கள் இருவருக்குள் உள்ள வித்தியாசம் - உங்கள் முன் முயற்சி எடுக்கும் சுபாவம், உங்கள் நிரந்தர வேலை, உணர்ச்சிகள் இன்னும் மரத்துப் போகவில்லை."தாயாக மாறுங்கள்." ஒரு வெள்ளிக்கிழமை - மறுநாள் உங்களுக்கு வீக் எண்ட் இருப்பதால் - கணவர் வரும்போது காத்திருந்து சாப்பாடு போடுங்கள். சோர்ந்த உடம்புக்கும், வலிக்கும் கால்களுக்கும் ஒத்தடம் கொடுங்கள். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். செயல்களிலே உங்கள் அன்பு வெளிப்படட்டும். பிறகு அந்த அன்பு காதலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. உறவுகளின் உரிமையை உங்களுக்காக விட்டுக் கொடுத்தவர், திரும்பி உங்களை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிப்பார், அன்பு மனைவியாக. வேலைகளில் சிரமம் தெரியாது, வீடு திரும்பினால் பிரச்சனைகளைக் கொண்டு வராமல் பாசத்துடன் அரவணைக்க அங்கே ஒருவர் காத்திருக்கிறார் என்ற நினைப்பு இருக்கும்போது.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com