கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, பஜன்ஸ், அபங்க், ஃப்யூஷன், வேர்ல்ட் மியூசிக், வெஸ்டர்ன் கிளாஸிகல் என இசைத் துறையின் சகல தளங்களிலும் சிறப்பான முத்திரை பதித்து வருபவர் ஓ.எஸ். அருண். India International Centre, the India Habitat Centre, National Centre for Performing Arts, Indian Council for Cultural Relations (ICCR) போன்ற பல்வேறு அமைப்புகளுக்காக உள்நாடு, வெளிநாடு எனத் தொடர்ந்து இசைச் சுற்றுப்பயணம் செய்து வருபவர். அபங்கம், பஜனை, பக்தி பாடல்கள், கர்நாடக சங்கீதம், ஃப்யூஷன் என இசையின் பல்வேறு பிரிவுகளில் குறுந்தகடுகளையும், ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். 'மதுரகான சிரோமணி', 'நாம சங்கீர்த்தன ரத்னா', 'கலைமாமணி' உட்படப் பல கௌரவங்கள் பெற்றவர். தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அதிலிருந்து.....
*****
கே: கர்நாடகம், ஹிந்துஸ்தானி, உலக இசை, விளம்பர இசை என்று வெளுத்துக் கட்டுகிறீர்களே, உங்கள் பின்னணி என்ன? ப: நான் பிறந்து வளர்ந்தது டெல்லியில். அப்பா ஓ.வி. சுப்ரமணியம் இசையாசிரியர். வீட்டில் இசைச் சூழல் இருந்ததனால் இயல்பாகவே இசையார்வம் வந்துவிட்டது. ஸ்கூலில் துதிப்பாடல் நான்தான் பாடுவேன். எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பள்ளி ஆண்டுவிழா வந்து விட்டால் ரொம்பவே பிஸி. கர்நாடிக்கோ, கஜலோ, லைட் மியூசிக்கோ, நாட்டுப்புற இசையோ எதுவானாலும் என்னைத்தான் கூப்பிடுவார்கள். மாட்டேன் என்று மத்த பசங்க பின்னாடி போய் ஒளிந்து கொண்டாலும் கூட விடமாட்டார்கள். ஆசிரியர்களுக்கு என் குரல் ரொம்பப் பிடிக்கும். இப்போது கூட நான் டெல்லி, சிங்கப்பூர் என்று கச்சேரிக்குப் போனால் அங்கே இருக்கும் எனது ஆசிரியர்கள் வந்து மேடையேறிப் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம், எனக்குப் பெருமை.
கே: அதன் பின்... ப: பள்ளிப் படிப்புக்குப் பின் சங்கீதத்தை முழுநேரமாகச் செய்ய நினைத்தேன். ஆனால் வீட்டில் வேண்டாம் என்று சொன்னார்கள். அந்தக் காலத்தில் நிலைமை அப்படி. டெல்லியில் ஓரிரண்டு சபாக்கள் தான் இருந்தன. கர்நாடக சங்கீதக் கச்சேரி வாய்ப்பு அதிகம் வராது. சங்கீத ஆர்வம் எனக்கு அதிகம் இருந்ததால் என்னால் வீட்டில் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கந்தர்வ மஹா வித்யாலயாவில் பி.ஏ., எம்.ஏ. இரண்டிலும் மியூசிக் படித்தேன். பின் டெல்லி பல்கலையில் டிப்ளமோ இன் மியூசிக் (Sangeetha Shironmani) முடித்தேன். என்னுடைய குருநாதர்கள் எல்லாம் அமுதசுரபி போல் இசை ஞானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். யூனிவர்சிடியில் வகுப்புகளில் சொல்லிக்கொடுத்தது போகத் தனியாகவும் எனக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். பேராசிரியர்கள் டி.ஆர். சுப்ரமணியம், டி.எஸ்.ராகவன் இவர்களை மறக்கவே முடியாது.
நான் படித்து முடிக்கும் சமயத்தில் டி.என். கிருஷ்ணன் அங்கே டீன் ஆகச் சேர்ந்தார். அவருடன் கச்சேரிக்குப் போய் வந்திருக்கிறேன். கந்தர்வ மஹா வித்யாலயாவில் படித்ததும் நல்ல அனுபவம். அங்கே கற்றுக் கொண்டவற்றை இன்றைக்கும் பார்க்காமல் பாட முடியும். அந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு வரியையும் சரியாக வரும்வரை திரும்பத் திரும்பப் பாடச் சொல்வார்கள். அவர்களும் கூடப் பாடுவார்கள். அப்படியே மனதில் பதிந்துவிடும்.
கே: முதல் கச்சேரி எப்போது நடந்தது? ப: கந்தர்வ மஹா வித்யாலயாவின் ஆண்டுவிழாவில். 30 நிமிடக் கச்சேரி. ஒரு மறக்க முடியாத தருணம் அது. டெல்லியிலேயே பிறந்து வளர்ந்ததால் ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியும். ஹிந்தி பேசும்போது அதில் தெற்கத்திய வாசனை வராதென்பது எனக்குச் சாதகமான விஷயம். கர்நாடக இசை தவிர, பஜனைப் பாடல்கள், அபங்கம், ஹிந்துஸ்தானி, ஃபோக், ஃப்யூஷன், டான்ஸ் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினேன். அதுதான் டெல்லி எனக்குத் தந்த வரப்ரசாதம். பல துறைகளில் பாடக்கூடியவனாக இருந்ததால் நிறைய வாய்ப்புகள் வந்தன. லக்னோ, பிலாஸ்பூர், மும்பை, சண்டிகர் என்று பல இடங்களுக்கும் சென்று பாடினேன். ஆனால் தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, மதுரை, திருநெல்வேலி என தமிழ்நாட்டுப் பக்கம் வந்து பாட முடியவில்லையே என்ற குறை இருந்தது. ரொம்ப லேட்டாக 1998ல்தான் சென்னைக்கு வந்தேன். இங்கே வந்தபின் படிப்படியாகக் கச்சேரி வாய்ப்புகள் வந்தன. சகலபதி பாலு என்பவரிடம் நிறையத் தமிழ்க் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கு என்று ஒரு தனி வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
கே: நாட்டியங்களுக்கும் நிறையப் பாடியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்... ப: நான் பாட ஆரம்பித்ததே நடனத்துக்குத்தான். எனக்கு நாட்டியம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில் அதுதான் கை கொடுத்தது. சிலர் இதுக்கெல்லாம் பாடுகிறானே என்று சொன்னார்கள். ஆனால் டெல்லியில் நான் பாடுவதைக் கேட்கவே நிறையப் பேர் வருவார்கள். சுப்புடு மாமா, லீலா வெங்கட்ராமன் இவர்களெல்லாம் ரொம்ப தூரத்தில் கச்சேரி நடந்தாலும் வந்து, கேட்டு, விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். அங்கே சபாக்கள் குறைவு என்பதால் கச்சேரி வாய்ப்புகள் இருக்காது. அப்போது டான்ஸ் நிகழ்ச்சிகள் என் திறமை வெளிப்படக் களமாக இருந்தது. என் அண்ணாகூட (ஓ.எஸ். தியாகராஜன்) அப்போது 'நீ சென்னைக்கு வந்துவிடு. இங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்றார். அவ்வப்போது டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தேன். எனக்கென்று ஒரு பாணி எல்லாம் உருவான பின்னால் தான் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிவந்தேன்.
கே: நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறீர்கள். அங்கு ஏற்பட்ட அனுபவங்கள்... ப: சமீபத்தில்கூடத் தென்னாப்பிரிக்கா சென்று வந்தேன். அவர்கள்கூட நம்முடைய கச்சேரிகளை மிகவும் ஈடுபாட்டோடு ரசிக்கிறார்கள். கச்சேரி நடக்கும்போது இந்தப் பாடல் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. சமீபத்தில் இந்திய அரசு நிறுவனமான ICCR (Indian Council for Cultural Relations) மூலம் மொரீஷியஸில் நடந்த இசைக் கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்று வந்தேன். அங்கே நமது சங்கீதத்திற்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன். எல்லாம் ஃப்ரெஞ்ச் ஆடியன்ஸ். நாம் பாடப்பாட அவர்களும் கூடவே 'நாராயணா, நாராயணா' என்று பாடுகிறார்கள். பாரிஸில் Namaste India Festival. அதில் ஒரு கச்சேரி. பழைய சர்ச் ஒன்றில் நடந்தது. மூன்று நாள் கச்சேரி. ஆடியன்ஸில் ஒரு இந்தியர்கூடக் கிடையாது. எல்லாருமே ஃபிரெஞ்ச்காரர்கள். அத்தனை பேரும் என்னோடு சேர்ந்து "பாண்டுரங்கா, பாண்டுரங்கா" என்று பாடினார்கள். இத்தனைக்கும் நான் பாரம்பரிய ராகங்களான வராளி, ஆனந்த பைரவி, மத்யமாவதியில்தான் பாடினேன். பஜனை, அபங்கம் எல்லாம்பாடும்போது அவர்கள் எழுந்து ஆடினார்கள், பாடினார்கள். ஒரு புதிய அனுபவம் அது.
மாண்ட்ரியோலில் கலா பாரதி ஃபவுண்டேஷன் என்ற ஒன்று இருக்கிறது. மம்தா, ஹர்பன்ஸ் நாக்ரா அதன் நிறுவனர்கள். இருவருமே பி.எச்டி. செய்தவர்கள். ஃப்ரெஞ்ச் அறிந்தவர்கள். அதில் நடந்த கச்சேரிக்கு அவர்கள் வந்திருந்தார்கள். பாதி கச்சேரியில் திடீரென்று ஒரு சைரன் ஒலித்தது. அது ஏதோ செக்யூரிடி காரணத்திற்காக ஒலித்திருக்கிறது. அப்படி சைரன் ஒலித்தால் எல்லோரும் எழுந்து வெளியே போய்விட வேண்டுமாம். ஆனால் யாருமே இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. அதனால் நானும் கச்சேரியை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தேன். கச்சேரி முடிந்தது. நிறைய லைவ் சேனல்காரர்கள், அங்கிருந்த வி.ஐ.பி.க்களிடம், 'ஏன் சைரன் ஒலித்தும் எழுந்திருக்கவில்லை?' என்று கேட்டார்கள். 'நாங்கள் தியானத்தில் இருப்பதுபோல உணர்ந்தோம். ரொம்ப நெகிழ்ச்சியாக, மனதிற்கு நிறைவாக இருந்தது. அதனால் பாதியில் கச்சேரியை விட்டு எழுந்திருக்க மனதே வரவில்லை' என்று அவர்கள் சொன்னார்கள். 'இவர் ஒரு மியூசிஷியன் மட்டும் அல்ல; ஒரு மஜீஷியனும் கூட என்று சிலர் சொன்னார்கள். நம்முடைய மொழியோ, பாரம்பரியமோ, எதுபற்றியும் தெரியாத அவர்கள் நம்முடைய சங்கீதத்துக்கு மயங்கிப் போய் உட்காந்திருந்தார்கள். இசை மொழி கடந்தது என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம் இல்லையா?
கே: ஆல்பங்களுக்கு, விளம்பர ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைத்துள்ளீர்கள் அல்லவா? ப: ஆமாம். ஆல்பங்களுக்கு, விளம்பர ஜிங்கிள்ஸ்க்கு, டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பது ஒரு சுயபரிசோதனை மாதிரி என்று சொல்லலாம். அஷ்டபதி ஆகட்டும், தரங்கம் ஆகட்டும், இல்லை, சரசாங்கி ராகத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் பாடிய ஸ்திரதா நஹி நஹி ரே ஆகட்டும், அந்தப் பாடல்களை பாரம்பரியமாகப் பாடுவது ஒருபுறம். அர்த்தம் புரிந்து, 'எதுவுமே நிச்சயம் இல்லை' என்று சொல்லும் பிரம்மேந்திரரின் அந்தப் பாடலின் பொருளை, அந்த பாவத்தை உணர்ந்து பாடுவது எனக்கு விருப்பமாக இருக்கிறது. இது ஆல்பங்களில் சாத்தியமாகிறது. நிறைய விளம்பர ஜிங்கிள்ஸ் பண்ணியிருக்கிறேன். அதுவும் 30 செகண்டுக்குள் இதை இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பது ரொம்ப சவாலாக இருந்தது.
கே: தமிழ்க் கீர்த்தனைகள் நிறையப் பாடுகிறீர்கள். யாருடைய பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கும்? ப: பாபநாசன் சிவன் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அவருடைய எளிமையான தமிழ், பாடல்களில் வெளிப்படும் பாவம், ஞானம் இதெல்லாம் பிடிக்கும். பாரதியை மிகவும் பிடிக்கும். பாரதியைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் பாடல்களை எடுத்து நாம் வேண்டிய மாதிரி மெட்டுப் போட்டுக் கொள்கிறோம். அவர் மிகப் பெரிய கவிஞர்.
கே: ஒரு இசைக்கலைஞராக உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞர்கள் யார், யார்? ப: பலரைச் சொல்லலாம். கர்நாடக சங்கீதம் என்று எடுத்துக் கொண்டால் மதுரை மணி ஐயர், ஜி.என்.பி., அரியக்குடி போன்றவர்களைச் சொல்லலாம். ஹிந்துஸ்தானியில் பீம் சேன் ஜோஷி, பர்வீன் சுல்தானா, மல்லிகார்ஜுன் மன்சூர், குமார் கந்தர்வா பிடிக்கும். ஹிந்திப் படங்களில் முகம்மது ரஃபி, லதா மங்கேஷ்கர் பிடிக்கும். ஆஷா போன்ஸ்லே ரொம்பப் பிடிக்கும்.
கே: சவாலாக இருந்த இசை நிகழ்ச்சி? ப: டிசம்பர் 1 அன்று எழுத்தாளர் பாலகுமாரன் திருவல்லிக்கேணியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய குருவான யோகி ராம்சுரத்குமார் புகழ்பாடும் இசை நிகழ்ச்சி அது. அன்று பாடப் பாட எனக்கு என்னையுமறியாமல் ஓர் உற்சாகம். கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் நடுவில் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். "இது குரு பேர்ல நான் எழுதியிருக்கிற பாட்டு. ஃபோக் மாதிரி வரும். நீங்க பாடணும்" என்றார். அந்தப் பாடலை வாங்கிப் பார்த்தேன். அப்படியே ஃபோக் ஸ்டைலில் உடனடியாக நான் பாட ஆரம்பித்தேன். அது ஒரு பரீட்சை மாதிரிதான். ஆனால் அதற்கு அத்தனை வரவேற்பு. அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலகுமாரனுக்கு ஒரு மாதிரி 'அருளே' வந்துவிட்டது. இது சமீபத்தில் நடந்தது.
கே: இசையைப் பொறுத்தவரை உங்களுடைய பாணி கொஞ்சம் வித்தியாசமானது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்... ப: நான் எந்த மொழியில் பாடினாலும் அதைப் புரிந்துகொண்டுதான் பாடுவேன். அப்போதுதான் அந்த உணர்வைக் கொண்டு வர முடியும். புரிந்துகொள்ளாத பிற மொழிப் பாடல்களைப் பாடமாட்டேன். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் புரியாவிட்டாலும் அந்தப் பாட்டில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பின்புதான் பாடுவேன். பாவம், ராகம், பாடலின் பொருள், உச்சரிப்புச் சுத்தம் என எல்லாம் கலந்ததாகத்தான் என் கச்சேரி இருக்கும். O.S. அருண் கச்சேரி என்றால் அதில் punctuation இருக்கும், gaps இருக்கும், cuts இருக்கும். வார்த்தைக்குத் தகுந்த மாதிரி சங்கதிகள் இருக்கும். Musical interpretation of the meaning of the composition. It relates to the poetry. இது என் ஸ்டைல். இது கடவுளின் அருள். அதே சமயம் என் கடின உழைப்பும் இதில் இருக்கிறது. இப்போ 'ஓடி பாரய்யா' என்று புரந்தரதாஸர் எழுதிய ஒரு கன்னட மொழிப் பாடல். கிருஷ்ணனை, யசோதை அழைக்கிறாள். 'ஓடி வாப்பா' என்று. அவள் எப்படி அழைத்திருப்பாள்? அது பாடலில் வர வேண்டும். அப்போ நீங்க யசோதையா மாறணும் இல்லையா. (பாடிக் காண்பிக்கிறார்) இப்படிப் பாடலைப் புரிஞ்சு பாடும்போது அதற்கு இன்னமும் அழகு சேர்கிறது. இது ரொம்ப முக்கியம். அதை நான் செய்கிறேன். அவ்ளோதான்.
கே: உங்கள் 'ஆலாபனா ட்ரஸ்ட்' பற்றிச் சொல்லுங்கள்... ப: இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அறக்கட்டளை அது. 1998ல் ஆரம்பித்தேன். எம்.எஸ்.வி. குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். அதன் மூலம் தொடச்சியாக பக்தி உற்சவம், பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் என்று நிறையச் செய்தோம். தற்போது முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று, அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி, முடிந்த உதவிகளைச் செய்கிறோம். இதில் எங்களுக்கு மலேசியாவில் இருக்கும் விஜயரத்னம் ஃபவுண்டேஷன் அகாடமியினர் துணையாக உள்ளனர். ஒருமுறை அவர்கள் நடத்திய ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விப்பதற்கான கச்சேரியை நான் செய்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மனநெகிழ்ச்சியாகி விட்டது. நாமும் அதுபோல நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதால் அவர்களிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டேன். அதன்படி சில நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். இன்னமும் நிறைய செய்ய ஆசை இருக்கிறது.
கே: எதிர்காலத் திட்டங்கள்... ப: நமது கர்நாடக சங்கீதத்தை, தமிழரல்லாத வெளிநாட்டவர்களிடம் அவர் ஜெர்மானியரோ, ஸ்பானியரோ, அமெரிக்கரோ, கறுப்பரோ, வெள்ளையரோ யாராக இருந்தாலும் சரி, அவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அது மிக மிக அவசியமானது என்று நான் நினைக்கிறேன். அந்த முயற்சி இப்போது இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இன்னமும் அதிகமாக வேண்டும். உலகளாவிய மேற்கத்திய இசை விழாக்களில் ஹிந்துஸ்தானி இசை இடம்பெறுகிறது.அதேபோல கர்நாடக சங்கீதமும் இடம் பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் அதிகப்பட வேண்டும். கச்சேரிகள் மட்டுமல்லாமல் சங்கீதச் செயல்பட்டறை நடத்துவது, வெளிநாட்டு இசை மாணவர்களுடன் ஊடாடுவது, பல்கலைக் கழகங்களில் இசைப்பாடம் நடத்துவது இதெல்லாமும் ரொம்ப முக்கியம்.
பண்டிட் ரவிஷங்கர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஜாஸ் பார்களில் எல்லாம் வாசித்தாராம். சிலர் கிண்டல் செய்தார்களாம். அதற்கு பண்டிட்ஜி சொன்னாராம், "இன்றைக்கு இதை நான் செய்யவில்லை என்றால் நாளைக்கு நம் இசை இங்கே வராது" என்று. அது உண்மை. உலகின் பிரபலமான பீட்டில்ஸ் குழுவினர் அவரிடம் கற்றுக் கொண்டவர்கள்தான். உடனே 'ஓ.எஸ்.அருண், எல்லோரையும் பாரில் போய்ப் பாடச் சொல்கிறான்' என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்மையில் ஜாஸ் பார் மட்டமானது அல்ல. அது ஒரு சங்கீத சபை. பேரும் புகழும் இருந்த அந்தக் காலத்திலேயே பண்டிட்ஜி திறந்த மனதுடன் அங்கு போனதால்தான் இன்று ஹிந்துஸ்தானி இசை அங்கே அப்படி வேரூன்றிப் பரவியிருக்கிறது. வெளிநாடுகளில் இந்திய இசை என்று சொன்னால் சிதாரும் ரவிஷங்கரும்தான். குருஜி பாலமுரளி கிருஷ்ணா சார் போன்றவர்கள் மூலம் இப்போது போய்க் கொண்டிருக்கிறது. அது இன்னமும் அதிகமாக வேண்டும்.
கே: இளங்கலைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ப: மூன்று விஷயங்கள். முதலில் இசைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் பேருக்கு ஒரு பாட்டு, நூறு பேருக்கு பாடும் போது கல்யாணியில் நிஷாதத்தை விட்டு விட்டுப் பாடலாம் என்று முடியுமா? முடியாது. கர்நாடக சங்கீதம் மிகவும் தெய்வீகமானது. அதற்குத் தேவை அர்ப்பணிப்பு உணர்வு. அது எப்போதும் இருக்க வேண்டும். இரண்டாவது, இசை என்பது பகவத் சங்கல்பம். அதனால் அந்த தெய்வ பக்தி, குரு பக்தி வேண்டும். மூன்றாவது முழுமையாகப் பாடக் கற்றுக் கொண்ட பிறகுதான் மேடை ஏற வேண்டும். சீக்கிரம் அரங்கேற வேண்டும், பேப்பரில் பெயர் வர வேண்டும் என்று பெற்றோர் துடிப்பதைப் பார்க்கிறேன். அது வேண்டாம். நல்ல சாதகமும், உழைப்பும்தான் நீடித்த பயனைக் கொடுக்கும்.
ஒரே ராகத்தை வெவ்வேறு பாரம்பரியங்களில் எப்படிப் பாடமுடியும் என்று அவர் பாடிக் காண்பித்ததை தென்றல் இணையத்தில் (www.TamilOnline.com) கேட்கலாம். கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் நடுநடுவே பாடுகிறார். கேள்வி கேட்கவே மறந்து போகிறது நமக்கு. நான்கு வயது அபிநவ் கிருஷ்ணா ஓடிவந்து கட்டிக் கொள்கிறான். அவனைத் தூக்கிக் கொஞ்சுகிறார். "அடிக்கடி டூர் போறதனால நிறையவே குடும்பத்தை மிஸ் செய்யவேண்டி இருக்கிறது. இப்பெல்லாம் ஃபோன், நெட் எல்லாம் வந்துட்டதால தினந்தோறும் பேச முடியுது" என்கிறார். டிசம்பர் சங்கீத சீஸனின் பரபரப்பில் இருந்தபோதிலும் தென்றலுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
மறக்க முடியாத கச்சேரி 1988ல் இங்கிலாந்து டூர் போயிருந்தோம். அதன் கடைசிக் கச்சேரி அயர்லாந்தின் டப்ளினில். மாலை 4.30 மணி இருக்கும். டூர் மேனேஜர் என்னிடம் வந்து, "இன்று கச்சேரியின் கிராண்ட் ஃபினாலே. இந்தக் கேசட்டைக் கேளுங்கள். இதை நீங்கள் நிகழ்ச்சியில் பாட வேண்டும்" என்றார். அது "Oh Danny Boy" என்னும் ஐரிஷ் பாடல்.ஆறரை மணிக்குக் கச்சேரி. அதற்குள் எப்படித் தயார் செய்வது? "வேண்டாம் சார் விஷப் பரீட்சை" என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "இல்லை அருண். உங்களால் முடியும்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். பக்கவாத்தியமாக கர்நாடிக் ஃப்ளூட், ஹிந்துஸ்தானி சரோட், தபலா, மிருதங்கம் இருந்தது. அந்த கேசட்டைக் கேட்டுப் பார்த்தால் பாட்டு மோகன ராக அடிப்படையில் இருந்தது. கர்நாடக சங்கீதம் தெரிந்தால் இதுதான் நீங்கள் உலகின் எந்த மொழியின் எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்த ராக பாவத்தைப் புரிந்து கொள்ள முடியும். தெரிந்தால், அந்த மொழியில் ரொம்பத் தேர்ச்சியோடு பாட முடியாவிட்டாலும், நன்றாகப் பாட முடியும். நான் அதை அந்த நிகழ்ச்சியில் பாடினேன். அதைக் கேட்டதும் அங்கு வந்திருந்த அத்தனை பேரும் பத்து நிமிடம் எழுந்து நின்று கைதட்டினார்கள். சிரிப்பு, அழுகை, ஆனந்தம் என்று எல்லாம் கலந்த உணர்வு எனக்கும் குழுவினருக்கும். கச்சேரி முடிந்து நாங்கள் உள்ளே போகலாமென்றால், "ஆங்க்கோர், ஆங்க்கோர்" (இன்னும் ஒருமுறை) என்று கத்தினார்கள். அது மாதிரி ஒரு வரவேற்பை நான் பார்த்ததில்லை. டூர் மேனேஜர் ஓடி வந்து மேடையிலேயே என்னைக் கட்டிக் கொண்டு விட்டார்.
ஓ.எஸ். அருண்
*****
கானமழைக்குப் பணமழை ஆர்.ஆர். சபாவில் ஒரு கச்சேரி. ஒரு பாடலை முடித்துவிட்டு, அடுத்ததைப் பாட ஆரம்பிக்கும் முன் ஒரு அம்மா திடீரென்று எழுந்து நின்று "ஒரு நிமிஷம் நிறுத்துங்க" என்றார். எனக்குப் பதட்டமாகி விட்டது. ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ என்று. அதற்குள் அவர் விடுவிடுவென்று மேடை ஏறி வந்துவிட்டார். வந்தவர் மைக்கைப் பிடித்து, "யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு என்னால் அங்கே உட்கார முடியவில்லை. எனக்கு என்னவோ செய்கிறது" என்றவர், தன் பர்ஸைத் திறந்து அதில் இருந்து 500 ரூபாய், 100 ரூபாய் என நோட்டுக்களை எடுத்து அப்படியே என் தலைமீது போட்டார். பின் அப்படியே என்னைக் கட்டிக் கொண்டு, மனதார ஆசிர்வாதம் செய்தார். பின் கீழே போய் அமர்ந்து கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அம்மா. அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி, "Melody queen showers currency notes on O.S. Arun " என்று. அப்படித்தான் ஜானகி அம்மா எனக்கு பரிச்சயமானார். பி.பி.ஸ்ரீனிவாஸ் சார் என் சங்கீதத்தைப் பற்றிப் பாடல்கள் எழுதியிருக்கிறார். என்னை அவர் news என்பார். அதாவது north, east, west, south என்று எல்லாம் பாடக் கூடியவன் என்னும் பொருளில். முகமது ரஃபியோடு ஒப்பிடுவார். நான் கூச்சத்தோடு "அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்" என்பேன். உடனே அவர், "இதோ பார், உன் வயசுக்கு நீ சொல்றது சரி. ஆனா, என்னோட வயசுக்கு நான் சொல்றதுதான் சொல்வேன். அதுதான் சரி." என்பார். அவர்களுடைய பெருந்தன்மை என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
அதுபோல இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு டிசம்பர் சீஸன். கச்சேரியில் நான் பாடி முடித்ததும் பாலமுரளி கிருஷ்ணா சார் மேடையேறினார். அவர், "அருண் பாடும்போது நான் நினைத்தேன், 'ஒருவேளை நாரதர் இப்படித் தான் பாடியிருப்பாரோ?' என்று. அருண் மாதிரி ஆட்கள் இருக்கும் போது, கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு ஆபத்தும் வராது" என்று சொல்லிப் பாராட்டினார். அது எனக்கு பத்மபூஷண் விருது கிடைத்த மாதிரி
ஓ.எஸ். அருண்
*****
"பாட்டின் நடுவுல என்ன ஆச்சு?" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா முன் பாடியது ஒரு பெரிய அனுபவம். எங்கெல்லாமோ பாடியிருக்கிறேன். ஆனால் புட்டபர்த்தியில் பாடியதில்லை. அதனால் ஆரம்பத்தில் நிறைய கோபப்பட்டிருக்கிறேன். 'தெலுங்கர்களைத்தான் பாடக் கூப்பிடுவார்கள் போல' எனப் பொறுப்பில் இருக்கும் சிலரிடம் சண்டைகூடப் போட்டிருக்கிறேன். புட்டபர்த்தியில் அதிருத்ர மஹா யக்ஞம் நடந்தபோது என்னைப் பாடக் கூப்பிட்டார்கள். அப்போது நான் லண்டனின் இருந்தேன். மனைவிதான் அமைப்பாளர்களிடம் பேசிவிட்டு என்னிடம் விஷயம் சொன்னார். அதில் என்ன சிக்கல் என்றால், நான் அந்தத் தேதியில் வேறு ஒரு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெரிய நிகழ்ச்சி. சித்ரா விஸ்வேஸ்ரன், அனிதா குஹா எல்லாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அதே சமயம் அதுநாள்வரை கூப்பிடாத புட்டபர்த்தியில் இருந்து அழைப்பு. என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தப் பெற்றோர்களுக்கே ஃபோன் செய்து தயங்கித் தயங்கி விவரத்தைச் சொன்னேன். அவர்கள் என்ன சொல்வார்களோ என்று நான் பயப்பட, அவர்களுக்கோ ஒரே சந்தோஷம். "சார், இது பெரிய விஷயம். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அவசியம் போய் வாருங்கள்" என்று சொன்னார்கள். காரணம், அவர்கள் பாபாவின் பக்தர்கள். அரங்கேற்றம் ஆகப்போகிற குழந்தையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கே வந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். பாபாவிடம் அந்தப் பத்திரிகையைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கச் சொன்னார்கள். நான் அதற்கு ஏற்பாடு பண்ணினேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
பாபாவின் முன்னால் கச்சேரி நடந்தது. பொதுவாக நாம் பாடும்போது அவர் நேரே உட்கார்ந்து கேட்பார். ஆனால் அதிருத்ரம் என்பதால் அவர் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் கீழே பக்கவாட்டில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தேன். ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்திருந்தார்கள். பாடி முடித்ததும் "சரி, இப்போ என்னோட குழந்தைகள் பாடுவார்கள்" என்றார் பாபா. "இல்ல பாபா, நான் இன்னோரு பாட்டும் பாடணும். உங்க மேல ஒரு பாட்டு கத்துண்டிருக்கேன். அதையும் பாடணும்" என்றேன். "சரி, பாடு" என்றார். நானும் பாட ஆரம்பித்தேன். பாடிக்கொண்டே இருந்தவன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார். பாபாவின் கண்களை என்னால் பார்க்கவே முடியவில்லை. அப்படியே தொண்டை அடைத்து விட்டது. கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. எனக்குள் என்னவோ செய்தது. பாடி முடித்தபின் பாத நமஸ்காரம் செய்தபோது, "நன்னாயிருந்தது பாட்டு. ஆனா நடுவுல என்ன ஆச்சு" என்றார் புன்சிரிப்புடன். நான் உடனே, "உங்களுக்குத் தெரியாதா, அதைப் பண்ணினதே நீங்கதானே!" என்றேன். பாபா சிரித்தபடி ஆசிர்வாதம் செய்தார். அது மறக்க முடியாத அனுபவம்.
ஓ.எஸ். அருண் |