தென்றல் பேசுகிறது...
கருணைக் கடலான ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கனெக்டிகட்டில் அந்த 20 வயது இளைஞன், பள்ளிக் குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு உலகையே முதலில் அதிர்ச்சியிலும் பின்னர் துக்கத்திலும் ஆழ்த்தியது. கையில் மூன்று துப்பாக்கிகளோடு நியூ டௌனின் சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளிக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஆதம் லான்ஸா, தன் வீட்டிலிருந்த தாயாரைச் சுட்டுக் கொன்றான். 20 பள்ளிச் சிறார், 6 பெரியவர்கள் இதில் இறந்தனர். இறுதியாகத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டான். மொத்த உயிரிழப்பு 28 பேர்.

"நான் இங்கே அதிபர் என்ற முறையில் பேசவில்லை, ஒரு தந்தையாகப் பேசுகிறேன்" என்று கூறிய ஒபாமா தன் அனுதாப உரையின் இடையில் இரண்டு முறையேனும் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவருடைய கண்ணீர் உண்மையா, நடிப்பா என்று விவாதம் செய்பவர்கள் கூட "நாம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளதை மறுக்க முடியாது. 'அர்த்தமுள்ள நடவடிக்கை' என்றால் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆதம் லான்ஸா கையில் இருந்த கொலைக்கருவி எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு கைத்துப்பாக்கிகள் தவிர ஒரு தானியங்கி ரைஃபிள் அவனிடம் இருந்தது. அந்தத் தானியங்கியால்தான் மிகச் சிறிய கால இடைவெளியில் அத்தனை பேரையும் துல்லியமாக, விரைந்து கொன்று குவிக்க முடிந்தது. அத்தகைய கருவிகளை எளிதாக எவரும் வாங்கமுடியாமல் செய்துவிட்டால்....

1994ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட துப்பாக்கித் தடைச் சட்டம் 2004ல் காலாவதி ஆகிவிட்டது. அரசியல் மற்றும் வணிகச் சக்திகள் மீண்டும் இந்தத் தடை வந்துவிடாமல் கவனமாக அரண் செய்துவருகின்றன. 2007ல் வர்ஜீனியா டெக்கில் 32 பேர் கொன்று குவிக்கப்பட்டபோது புத்துயிர் பெற்ற இந்த உரையாடல் வழக்கம்போல காலப் போக்கில் ஒலியடங்கிப் போனது. கனெக்டிகட் சோகம் இதை வீரியத்தோடு கிளப்பி விட்டுள்ளது.

தமது குடும்பத்தை, குழந்தைகளை நேசிப்பவர்களும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்டவர்களும் இதயத்தால் சிந்திக்க வேண்டிய தருணம் இது. துப்பாக்கித் தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக்குவது, அதிநவீனத் தானியங்கித் துப்பாக்கிகளை எளிதில் வாங்க முடியாமல் செய்வது என்கிற இரண்டு வழிகள் பேசப்படுகின்றன. பெற்றோரும் மற்றோரும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், குரல்கள் ஓய்ந்து போகும். அதிபர் ஒபாமா கூறியதுபோல அர்த்தமுள்ள செயல்கள்தாம் நீடித்த பலன் தரும்.

பிடிவாதமாக குடியரசுக் கட்சியினர் தமது பலத்தால் எந்தச் சீர்திருத்தமும் வரவொட்டாமல் செய்து வருகின்றனர். வோட்டு அரசியல், மக்கள் நல அரசியலுக்கு விடுக்கும் சவால் இது. வணிக சக்திகள், சமுதாய அமைதிக்கு விடுக்கும் சவால் இது. இதை எப்படிச் சட்ட ரீதியாகச் சமாளிக்க வழிகோலுகிறோம் என்பதில்தான் அமெரிக்க மக்களாட்சியின் முதிர்ச்சி வெளிப்படும். "இங்கே ஒரு கருமேகம் கவிந்து நிற்கிறது. அது நெடுங்காலம் விலகாது" என்று சேண்டி ஹூக் பள்ளியிலிருந்து தனது 4 வயது மகளை அழைத்துப் போக வந்த அன்னை ஒருவர் கூறினார். அந்தச் சோக மேகம் மேலும் பல இடங்களுக்குப் பரவிவிடாமல் தடுப்பது அரசியல்வாதிகளின் கடமை, அந்த உணர்வு அணைந்துவிடாமல் விசிறி வளர்ப்பது குடிமக்களின் கடமை.

*****


இந்தியாவில் வேறுவகைச் சோகம். பலர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருத்தி டெல்லியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். சொந்த மகளை பலாத்காரம் செய்தல், பலர் சேர்ந்த வன்புணர்வு, காதல் திருமணம் செய்தவர்களை கௌரவக் கொலை செய்தல் என்று பலவகையிலும் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களை நிறைக்கின்றன. நாம் ஏதோவொரு வனவாச கலாசாரத்தில் வாழ்கிறோமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. எல்லாரும் எல்லாமும் பெற்ற போதும், மனிதரிடம் மனிதம் மட்டும் குறைந்து வருகிறதோ என்ற அச்சம் ஈரமனம் கொண்டவர்களை வாட்டுகிறது. அப்படியானால் ஏட்டுக் கல்வியும், வங்கிக் கையிருப்பும் மட்டுமே வாழ்க்கையின் உச்சமல்ல; அதைத் தாண்டித் தன்னை முழுமைப்படுத்துவது என்ன என்று ஒவ்வொருவரும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

*****


கருமேகங்களிடையே ஒளிக்கீற்றுக்களாக வருகிறார்கள் கானமழை பெய்யும் ஓ.எஸ். அருணும், பிரகதி குருபிரசாத்தும். குரல் வளத்தாலும், பன்முக இசைத் திறனாலும் வெவ்வேறு வகையில் எண்ணற்ற ரசிகப் பெருமக்களைக் கட்டிப் போட்டிருக்கும் இவ்விருவரின் நேர்காணல்கள் வாசிக்கப் பெருஞ்சுவை. திறன்மிக்க இளைஞர்கள் பற்றிய குறிப்புகள், வாழ்க்கையின் பரிமாணங்களைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று புத்தாண்டில் வருகிறது மற்றுமொரு நவரசத் தென்றல் இதழ்.

வாசகர்களுக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!


ஜனவரி 2013

© TamilOnline.com