பல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி
அக்டோபர் 27, 2012 அன்று மாலை 'பல்லவிதா'வும், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய பத்மஸ்ரீ அருணா சாய்ராம் அவர்களின் இசைக் கச்சேரி, பாலோ ஆல்டோவில் உள்ள ஸ்பேங்கன்பர்க் தியேட்டரில் நடந்தது. சுத்த தன்யாசியில் 'ஸ்ரீ ராஜமாதங்கி' வர்ணம், அடுத்து 'கானமூர்த்தே', பின்னர் ஆபோகி ராகத்தில் 'சபாபதிக்கு வேறு தெய்வம்' பாடல்களுடன் கச்சேரி களைகட்டத் தொடங்கியது. பைரவியில் 'உபசாரமு' என்னும் தியாகராஜ கீர்த்தனைக்கு ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் யாவும் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். H.N. பாஸ்கரின் வயலின் வாசிப்பு இந்த பைரவி ராகத்தில் மட்டுமல்லாமல் கச்சேரி முழுவதிலுமே சிறப்பாக இருந்தது. பத்ரி சதீஷ்குமாரின் லயமான மிருதங்க வாசிப்பு கச்சேரியைப் பரிமளிக்கச் செய்தது. ஷண்முகப்ரியாவில் அமைந்த ராகம், தானம், பல்லவியைத் தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய 'மாடு மேய்க்கும் கண்ணா'வையும், நிகழ்ச்சியின் நிறைவாக 'காளிங்க நர்த்தன' தில்லானாவையும் உற்சாகமாகப் பாடினார். தில்லானாவுக்கு முன் அவர் பாடிய 'வெங்கடேச கவசம்' கச்சேரிக்கு மகுடம் வைத்தாற்போல, பக்திப் பரவசம் ஊட்டியது.

வசந்தி வெங்கடராமன்,
சரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com