சிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்
சிகாகோவின் திரிவேணி நாடகக் குழுவினர் அக்டோபர் மாதத்தில் தங்கள் புதிய படைப்பான 'ஆள் பாதி ஆவி பாதி' என்ற முழுநீள நகைச்சுவை நாடகத்தை சிகாகோ ஜெயின் சென்டர் அரங்கத்திலும், பிட்ஸ்பர்க் கோவில் அரங்கத்திலும் மேடையேற்றினர்.

ஒழுங்காகச் சம்பாதிக்காத கணவனிடம் சண்டையிட்டு அவனுக்கு மூன்று மாத கெடு விதித்துச் சவால் விடுகிறாள் பியூட்டி பார்லர் புவனா. சவாலைச் சமாளிக்க முடியாமல் சளைத்துப் போன கணவன் ஆதிமூலம், எதிர்பாராத விதமாக ஒரு ஆவிக்கு உதவுகிறான். அதற்கு நன்றிக்கடனாக அவனுக்கு உதவி செய்ய முன்வரும் ஆவி, அவனுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறது. அந்த விசித்திர நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் ஆதிமூலத்திற்கு சிக்கல்மேல் சிக்கல். அவற்றை எப்படி சமாளித்து சவாலில் ஜெயிக்கிறான் என்பதே நாடகத்தின் கதை.

விறுவிறுப்பான காட்சிகள், தொய்வில்லாத கதையோட்டம், தேர்ந்த நடிப்பு, அழகிய அரங்கஅமைப்பு என அனைத்தும் சேர்ந்த பொழுதுபோக்காக அமைந்தது இந்த நாடகம். நாடகத்தை நகைச்சுவையால் நிரப்பி அரங்கத்தையே அதிர வைத்தார்கள் திரிவேணி குழுவினர். ஆவி செய்யும் ஜால வித்தைகளும் தந்திரக் காட்சிகளும் கண்களுக்கு விருந்து. குறிப்பாக, ஆவி மேலே பறந்து சென்று மறைகின்ற காட்சியும், அழைத்தவுடன் ஓடி வரும் குத்துவிளக்கு காட்சியும், கொட்டக்கொட்ட தண்ணீர் வந்து கொண்டே இருக்கும் 'அட்சயபாத்திர' குடக்காட்சியும் வியப்பில் ஆழ்த்தின.

ஆவியாக ஸ்ரீவித்யா, கோவிந்தனாக மணி, ஏப்பம் ஏகாம்பரமாக ஸ்ரீராம், புவனாவாக தீபா, ஆதிமூலமாக ரங்கா என நடிப்பில் அனைவருமே அசத்தினார்கள். சிறிய பாத்திரங்களில் தோன்றினாலும் தனி முத்திரை பதித்துக் கைதட்டல் வாங்கியவர்கள் ஜெயஸ்ரீ, அரவிந்த், ரகுவீர் மற்றும் ரமேஷ். ஜன்னல் அமைப்பு, தோட்டம், வீட்டின் உட்புறம் என மேடையை அழகாக அமைத்திருந்த ஸ்ரீராம்-ஹரி-ஸ்ரீனிவாஸிற்குப் பாராட்டுக்கள். இந்த நாடகத்திற்கு ஒலி-ஒளி அமைப்பும் சவாலானதே. தந்திரங்கள், திடீர் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளில் ஒளி (கார்த்திக்) ஒலி (ரமேஷ்-அரவிந்த்) அமைப்பாளர்களின் கடின உழைப்பு பளிச்சிட்டது. விழா ஏற்பாடுகளை ரகுராமன் நிறைவாக செய்திருந்தார். இந்த நாடகத்தை எழுதி இயக்கிய ரங்காவிற்கு பாராட்டுக்கள்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த், “இந்த நாடகத்தை பார்க்கும்போது, நான் சென்னை மியூசிக் அகாடமியில், புகழ் பெற்ற ஒரு குழு போட்ட நாடகத்தைப் பார்த்தது போல இருந்தது. அமெரிக்காவில் இத்தனை திறமையையும், நடிப்பாற்றலையும் கண்டு நான் அசந்து போனேன்” என்றார். திரிவேணி குழுவினருடன் தொடர்பு கொள்ள மின்னஞ்சல்: triveni.chicago@gmail.com

ராஜ் வரதன்,
இல்லினாய்

© TamilOnline.com