அட்லாண்டாவில் செயல்பட்டு வரும் கௌடிய வைணவ சங்கம் 'இலையுதிர்கால விழா'வை அண்மையில் கொண்டாடியது. செப்டம்பர் 29 அன்று சங்க உறுப்பினர்கள் ரத யாத்திரை நடத்தினார்கள். பகவான் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர், ஸ்ரீ சுபத்ரா தேவி ஆகியோர் பல்லக்கில் ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் பவனி வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சி சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மகாராஜ் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவாகும். ஆல்ஃபரெட்டா, கம்மிங் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் 17ம் தேதி வரை ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் இரண்டாம் காண்டத்திலிருந்து விரிவாக விளக்கினார்.
சொற்பொழிவின் இறுதி நாளன்று கேள்வி பதில் நேரத்தில் மார்மன் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு வேதம் மற்றும் பைபிளிலிருந்து சுவாமிகள் விளக்கமளித்தார். நியூ ஜெர்சி, டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியாவில் சுவாமிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 27 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார்.
அக்டோபர் 22-ம் தேதி, அட்லாண்டா இந்துக் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழா ஹரிநாம சங்கீர்த்தனத்த்துடன் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஊர்வலம் வந்தார். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குளோபல் மாலில் நடந்த குளோபல் மேளாவில் அக்டோபர் 27, 28 தேதிகளில் சங்கத்தினர் பங்கேற்றனர். பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் 'தாமோதர லீலை' நாட்டிய நாடகத்தை வழங்கினர்.
சங்கம் நியூ ஜெர்சி, டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியாவில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகளை வாரந்தோறும் நடத்துகின்றது. விவரங்களுக்கு: www.bhagavatvani.org; தொலைபேசி எண்: 1-888-9GVA-USA.
பத்ரிநாராயண தாஸ், டுலூத், ஜார்ஜியா |