அக்டோபர் 28, 2012 அன்று பல்லவிதா வழங்கும் 'விவ்ருத்தி'யின் இரண்டாம் ஆண்டு விழா ஃப்ரீமான்டில் உள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கில் நடத்தப்பட்டது. காலையில் நிகழ்ச்சியின் முதல் அங்கமாக 'சர்வலகு பெர்கஷன் சென்டர்' மாணவர்கள் 'தாளவாத்ய விருந்தா' ஒன்றை மறைந்த வித்வான் வேலூர் ராமபத்ரன் அவர்களுக்கு அஞ்சலியாக வழங்கினர். தொடர்ந்து 'லாஸ்யா' நடன நிறுவனத்தின் இயக்குனரான வித்யா சுப்ரமணியன் வழங்கிய 'சரித்திரமும் பழக்கவழக்கங்களும்' என்ற நிகழ்ச்சியும், 'அபிநயா' நடன நிறுவனத்தின் நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இடையிடையே ஸ்ரீலலிதகான வித்யாலயாவின் மாணவர்கள் வினய் ரகுராமன் வயலினும் விக்னேஷ் வெங்கட்ராமன் மிருதங்கமும் வாசிக்கக் கீர்த்தனை விருந்து படைத்தனர்.
மதியம் ஸ்ரீலலிதகான வித்யாலயாவின் 20ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அதன் மாணவ, மாணவியர் 'ஷண்முகா' என்ற இசைநிகழ்ச்சியை அரங்கேற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்புகழை அடிப்படையாகக் கொண்டு ஆறுபடை வீடுகளின் ஸ்தல புராணங்களைச் சித்திரிக்கும் கீர்த்தனைகளுடன் இணைத்து இந்நிகழ்ச்சியை வழங்கினர். லாவண்யா கோதண்டராமன் வயலின், ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மற்றும் அவரது பள்ளி மாணவர்களின் மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் பக்கவாத்தியங்களும் இசைவாக அமைந்திருந்தன. இந்நிகழ்ச்சியை வடிவமைத்து இயக்கியவர் பல்லவிதாவின் நிர்வாகி குரு லதா ஸ்ரீராம் அவர்கள். விழாவின் சிறப்பம்சமாகவும், இறுதி நிகழ்ச்சியாகவும் அமைந்தது பத்மஸ்ரீ அருணா சாய்ராம், தமது குரு டி. பிருந்தா அவர்களைப் பற்றி ஆற்றிய இசைச் சொற்பொழிவு பாணியில் அமைந்த கலந்துரையாடல். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வயலின் வித்வான் எம்.என். பாஸ்கர், மிருதங்க வித்வான் பத்ரி சதீஷ் குமார் ஆகியோர் படைப்புகளைப் பாராட்டிப் பேசினர்.
வசந்தி வெங்கடராமன், சரடோகா, கலிஃபோர்னியா |