அணி மாறும் காட்சிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. அரசு தி.மு.க. தலைமையிலான ஏழுகட்சிக் கூட்டணியைத் தேர்தலில் வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது.

இதன் ஒரு கட்டமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணன், அ.தி.மு.கவில் முதல்வரின் முன்னிலையில் சேர்ந்து பா.ம.க.விற்கு அதிர்ச்சி அளித்தார். தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். சில நாட்களாகவே பா.ம.க. தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.கவிற்கு வந்துவிடும், அதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் உலவி வந்தன. ஆனால் பா.ம.க. தலைவர் ராமதாஸ் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று பேட்டிகளில் அழுத்தமாகக் கூறிவந்தார்.

அந்தியூர் கிருஷ்ணனின் விலகலைத் தொடர்ந்து பா.ம.க.வைச் சேர்ந்த சிவகாமி வின்சென்ட், முருகவேல் ராஜன் ஆகியோரும் தமது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதை மறக்கமுடியாது.

பாட்டாளி மக்கள் கட்சியில் வன்னியர் களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் அக்கட்சியிலிருந்து விலகியதற் கான காரணங்களாக மூவரும் கூறியுள்ளனர்.

வரும் காலங்களில் பா.ம.க.விலிருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவிற்கு வரத் தயாராக இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

கேடிஸ்ரீ

© TamilOnline.com