NETS: குழந்தைகள் தினவிழா
நவம்பர் 3, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழாவை சிறப்பாக ஃப்ராமிங்ஹாமில் உள்ள கீப் டெக்னிகல் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. திருக்குறள், சூப்பர் சிங்கர், மாறுவேடம் ஆகியவற்றில் போட்டிகளோடு இந்த ஆண்டு புதிதாகக் களம் இறங்கியது 'சூப்பர் டான்சர்'.

கலைமகள் தமிழ்ப் பள்ளியின் குழந்தைகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்தது 5 வயதுக்குட்பட்ட சிறாரின் மாறுவேட அணிவகுப்பு. இரண்டாம் ஆண்டாகப் பல குழந்தைகள் பங்கேற்க அரங்கேறியது நெட்சின் 'சூப்பர் சிங்கர்'. வயது அடிப்படையில், குழந்தைகள், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக அபர்ணா பாலாஜி, மீனா சுந்தரம், எல்.கே. கிருஷ்ணன் பணியாற்றினர். ஒலியமைப்பாளர் ஜாவேத். அவருக்கு உதவி புரிந்தனர் ராஜ் வேல்முருகன் மற்றும் கமலநாதன் ஞானதேசிகன்.

குறளை அதன் அர்த்தத்துடன் எப்படிக் கேட்டாலும் கூறிய குழந்தைகளின் திறமை வியக்க வைத்தது. நடுவர்களாக உமா நெல்லைப்பன், இளங்கோ சின்னசாமி, வித்யா நாகராஜன் ஆகியோர் பணியாற்றினர். 'சூப்பர் டான்சர்' கண்களுக்கு விருந்தானது. குழுக்களாக நடனத் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகள் கைதட்டலை வாரிச் சென்றனர். நடுவர்களாக சுஜா மெய்யப்பன், அனு சுரேந்திரன், ஷீதல் புவனேந்திரா பங்கேற்றனர்.

சங்கத் தலைவர் ரமேஷ் வெங்கடரமணி, உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். சுபா சுரேஷ், பமிலா வெங்கட் விழாவைத் தொகுத்து வழங்கினர். சென்னகேசவன் நன்றியுரை வழங்கினார்.

பமிலா வெங்கட்,
போஸ்டன்

© TamilOnline.com