நாட்யா: 'சீதா ராம்' நாட்டிய நாடகம்
2012 டிசம்பர் 14-15 தேதிகளில் இசையும் நாட்டியமுமாக உருப்பெற்றுள்ள நாட்டிய நாடகமான 'சீதா ராம்' சிகாகோவின் மில்லெனியம் பார்க்கிலுள்ள ஹாரிஸ் தியேட்டர் ஃபார் டான்ஸ் அண்ட் மியூசிக் அரங்கில் மீண்டும் காணக்கிடைக்கும். மகத்தான இந்திய புராணமான ராமாயணம் இன்றைய ரசனைக்கும் கலை வடிவங்களுக்கும் உகந்ததா என்று கேள்வி எழுப்புபவர்களை அது மறுபரிசீலனை செய்ய வைக்கும். நாட்யாவின் இணைக் கலை இயக்குனர் கிருத்திகா ராஜகோபாலன், லுக்கிங்கிளாஸ் தியேட்டர் கம்பெனியின் டேவிட் கெர்ஸ்னரை 2002ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது ஏற்பட்டது இந்தக் கருத்துரு. லுக்கிங்கிளாஸின் வித்தியாசமான கதைசொல்லும் உத்தியை, பரத நாட்டியத்தின் அழகியலோடு இணைக்கும் எண்ணம் 'சீதா ராம்' ஆக உருப்பெற்றது. சிகாகோ சில்ட்ரன்ஸ் கோயரின் கலை இயக்குனர் ஜோசஃபைன் லீ இதற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தியப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டபோதும், இந்தப் படைப்பில் முக்கியப் பாத்திரங்கள் இந்தியரல்லாதவரால் வகிக்கப்படுகிறது. பன்மைக் கலாசாரப் புரிதலை ஏற்படுத்தும் வகையில் பாத்திரங்கள் சில இடங்களில் இந்தியப் பாரம்பரிய உடைகளையும், சில இடங்களில் பாரம்பரியமல்லாத ஆடை அணிமணிகளையும் அணிகின்றனர். இந்தப் படைப்பு 2003ல் இல்லினாயில் உள்ள ஹைலண்ட் பார்க்கில் முதல் வெற்றியைச் சுவைத்த போதும், இது வெறும் மறு அரங்கேற்றமல்ல. இதற்காகக் கெர்ஸ்னரும் கிருத்திகாவும் இந்தியா சென்று ராமாயண வல்லுனர்களைச் சந்தித்து உரையாடினர். 2006ல் மீண்டும் சிகாகோவின் வாட்டர் டவர் வாட்டர் வொர்க்ஸ் அரங்கில் புனரமைத்த வடிவம் அரங்கேறியபோது தொடர்ந்து 29 அரங்குநிரம்பிய காட்சிகளாக இருந்தது. ரசிகர்களும் விமர்சகர்களும் மிக விரும்பிப் பார்த்த 'சீதா ராம்' கிருத்திகாவுக்கு நடன அமைப்புக்கான ஜோஸஃப் ஜெஃபெர்ஸன் பரிசைப் பெற்றுத் தந்தது. இதை வென்ற முதல் இந்திய-அமெரிக்கர் இவராவார்.

இந்த ஆண்டின் நிகழ்ச்சி கிருத்திகா வடிவமைத்த ஒரு புதிய நடனத்துடன் தொடங்கும். “பாரம்பரிய இறைவணக்கம் போலத் தோன்றினாலும் இதில் வாத்திய ஒலிகளையும் குரலாலேயே பாடகர்கள் வழங்குவார்கள்” என்கிறார் கிருத்திகா ராஜகோபாலன். சிகாகோ சில்ட்ரன்ஸ் கோயரின் 120 பேர், 35 நடனக்காரர்கள், 15 பிரதான நடிகர்கள், 30 அக்ரோபேட்ஸ் என இதில் ஒரு பெரும் கலைப்படையே பங்கேற்கிறது. “மூன்றடுக்கு மேடையமைப்பு பிரமிக்க வைப்பதாக இருக்கும்” என்கிறார் கிருத்திகா கண்ணில் சுடரும் பொறியுடன். 'சீதா ராம்' ஆங்கிலத்தில், எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும்.

நிகழ்ச்சி நேரங்கள்:
டிசம்பர் 14, வெள்ளிக்கிழமை, இரவு 7:30 மணி
டிசம்பர் 15, சனிக்கிழமை, மதியம் 2:00 மணி; இரவு 7:30 மணி
இடம்: Harris Theater for Music and Dance at Millennium Park, 205 E. Randolph Dr., Chicago, IL, 60601

நுழைவுச்சீட்டு வாங்க:
வலைமனை: www.harristheaterchicago.org
தொலைபேசி: (312) 334-7777.
சீட்டு விலையில் தள்ளுபடி பெறக் குறிப்பிடுங்கள்: SRNATYA

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com