அந்தியூர் சாலையில் வந்தியத்தேவன் விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். மதிய சூரியனின் கூர் ரேகைகள் அவன் கட்டிளம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. பசியின் கொடுமை அவன் கண்களின் ஆழத்தில் தெரிந்தது. நிச்சயமாக அவன் நெடுந்தூரம் நடந்து வந்திருக்க வேண்டும் என்பது அவனது பின்னிய கால்களில் தெரிந்தது. அவன் வேறு யாருமில்லை. அந்த மகத நாட்டின் தளபதி. மாவீரன்! அரசனின் அந்தரங்கக் காவலன்.
நெடுந்தூரம் நடந்து வந்த வந்தியத் தேவனுக்கு அங்கு தென்பட்ட அகன்ற ஆலமரம் ஆறுதலாய் தெரிந்தது. அமரலாம் என்ற போதுதான் தெரிந்தது பறவைகள் அந்த இடத்தைப் பாழடித்து விட்டன என்று. சற்றே தள்ளியிருந்த நிழற்பகுதியில் சப்பரமாய் அமர்ந்து விட்டான்.
"என்ன தளபதியாரே!"
குரல் கேட்டு நிமிர்ந்த வந்தியன் எதிரே அரசவைப் புலவர் விசிலாந்தையார் வந்து அமர்ந்தார். அவர் அரசவையில் கவிதை மழை பொழியும்போது அவரது தொண்டையில் இருந்த புண் காரணமாகத் தொண்டைக் குழியிலிருந்து வரும் ஒலியைக் கொண்டு அவருக்கு விசிலாந்தையார் என்ற பட்டத்தை மகத நாட்டு மன்னன் வழங்கியிருந்தான்.
"அமருங்கள் புலவரே!"
"என்ன வந்தியத் தேவரே! மிகுந்த களைப்பாயிருக்கிறீர்கள் போல் இருக்கிறதே!"
"ஆம் புலவரே! வெகு தூரம் நடந்தே வந்துள்ளேன்"
"தங்களது பரி எங்கே? படைகள் எங்கே? பரிசுப்பொருட்கள் எங்கே? பரிவாரங்கள் எங்கே? சென்ற வாரம் தாங்கள் பகைவனிடம் புறமுதுகிட்டு ஓடி வந்ததற்காக மன்னன் அளித்த பொற்கிழி எங்கே? தங்களுக்கு இந்த நிலைமை வரக் காரணமென்ன?" புலவர் அடுக்கிக்கொண்டே போனார்.
வந்தியத் தேவன் கண்களில் நீர் மல்கியது.
"வந்தியரே! என்ன நடந்தது?"
வந்தியத் தேவன் ஒரு பெருமூச்சு விட்டான்.
"புலவரே!" சென்ற வாரம் அரசரிடம் பொற்கிழி வாங்கிச் சென்றேனல்லவா?"
"சொல்லுங்கள் தளபதியாரே"
"வழியில் ஆற்றைக் கடக்கும்போது துணி கிழிந்து பொற்காசுகளெல்லாம் ஆற்றில் கொட்டிவிட்டன"
புலவர் அதிர்ந்து போனார்.
"அப்புறம் என்ன செய்தீர்?"
“ஆற்றில் முழுகி கிடைத்தவரை கையில் அள்ளிக்கொண்டேன்."
"பின்பு என்ன சோகம்?"
அப்புறம் தான் தெரிந்தது அவை அனைத்தும் போலிக் காசுகள் என்று"
"ஐயகோ! அப்புறம்?"
"அரசவையில் எமக்கு அளித்த பொன்னாடை கிழிந்து வந்தது சலவையிலிருந்து. அப்புறம்தான் தெரிந்தது அதுவும் போலிப் பட்டு என்று."
புலவர் வாயடைத்து அமர்ந்திருந்தார். வீட்டுக்குச் சென்று அரசவையில் கிடைத்த காசுகளை எல்லாம் உரசிப் பார்க்க வேண்டும்.
"சொல்லுங்கள் தளபதியாரே!" இப்போது புலவரின் குரலில் கரிசனம் தெரிந்தது.
"புலவரே! இவற்றையெல்லாம் அரசரிடம் முறையிடலாம் என்று பரியேறி சென்று கொண்டிருந்தேன். வழியில் நீர் அருந்த இறங்கி நீரோடை சென்று திரும்பியபோது அந்தப் பரியும் பறிபோய் விட்டது."
புலவர் வந்தியத் தேவனின் நிலை கண்டு பெரிதும் வருந்தினார். "தளபதியாரே! நம் நாட்டில் இவ்வாறு நடப்பதை என்னால் நம்ப முடியவில்லையே!"
"என்னாலும் நம்ப முடியவில்லை புலவரே நம் மன்னரின் ஆட்சியில் இவ்வாறெல்லாம் நடப்பதை."
"வாருங்கள் தளபதியாரே! மன்னரிடம் சென்று முறையிடுவோம். மன்னருக்குத் தெரியாமல் இந்த நாட்டில் எவ்வளவு அநீதிகள் நடக்கின்றன என்று மன்னரும் அறியட்டும்"
இருவரும் இருள் கவ்வும் நேரத்தில் அரண்மனையை அடைந்தனர். காவலர்களைக் கடந்து அந்தப்புரத்தை அடைந்தனர். உள்ளே ஏதோ அரவம் கேட்கவே இருவரும் சற்று ஒதுங்கினர். மன்னர் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சரிடம்.
"அமைச்சரே!"
"சொல்லுங்கள் மன்னா"
"பரிகளைக் கொள்ளையடித்து அண்டை நாடுகளில் விற்றதில் நமக்கு எவ்வளவு கிடைத்தது?"
"மொத்தம் முப்பதினாயிரம் வராகன் அரசே!"
"பட்டுத் துணிகளை பழைய துணிகளுக்கு மாற்றியதில்....."
"அதில் ஒரு இருபதினாயிரம் வராகன் அரசே! அந்த வராகன்கள் எல்லாவற்றையும் அயல்நாடுகளில் மாற்றியதில் நூறு பொற்கட்டிகள் சேர்ந்துள்ளன அரசே!"
"அமைச்சரே! எல்லாவற்றையும் பாதாள அறையில் பத்திரப்படுத்துங்கள்! இன்னும் இருபது நாட்களில் எதிரி மன்னன் நம் நாட்டைப் பிடித்து நம்மைச் சிறையில் அடைத்து விடுவான். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீதிக் காலம் நாம் வாழ உதவும்."
வெளியே வந்தியத்தேவனும் புலவரும் வாயடைத்து நின்றனர்.
சந்திரசேகரன், லண்டன் |