அதிகாலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்ட ஆறுமுகத்துக்கு நல்ல பசி. நடந்து வந்த களைப்பு. அப்பாடா, டவுனுக்கு வந்தாச்சி. ஓட்டலுக்குள் சென்றார். ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்தார்.
"பெரியவரே என்ன வேணும்?"
"நாலு இட்லி, ஒரு தோசை. அப்புறமா காபி, தண்ணி" ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். நாலைந்து அழகு தேவதைகள். அவர்கள் அழகை வர்ணிக்க கவிஞன் கூட தடுமாறுவான்.
நிமிடங்கள் கடந்தன. இட்லி, தோசை வரவில்லை. மீண்டும் ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார். சர்வர் வருகிறாரா எனப் பார்த்தார். வரவில்லை. திரும்பவும் ஜன்னலுக்கு வெளியே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்கள் ஆறுமுகம் ஜன்னல் பக்கமே தன் பார்வையைச் செலுத்துவதைக் கண்டனர். அவர்களில் ஒருவன் "என்ன பெரிசு.. ஜொள்ளா?" என்றான்.
"சங்கு ஊதுற காலத்துல சைட்டா?" என்றான் வேறொருவன்.
"பழைய நெனப்பா ஓல்டு?" என்றான் மற்றொருவன்.
இன்னும் சில கிசுகிசுப்புகள். முணுமுணுப்புகள். ஆறுமுகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டவுன்காரங்க கிட்ட வாய் கொடுக்க பயந்து சும்மா இருந்தார் பட்டிக்காட்டு ஆறுமுகம்.
இட்லியும் தோசையும் வந்தன. இலையைப் பார்த்துக் கூடச் சாப்பிடாமல் ஜன்னலுக்கு வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார். அழகு தேவதைகளின் கலகல சிரிப்பும் அரட்டையும் தொடர்ந்தது.
காப்பித் தண்ணியும் வந்தது. அதையும் ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டு குடித்ததால் அவர்மீதும் காப்பி சிந்தியது. பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு ஆறுமுகம் வெளியில் வந்தார்.
அது ஒரு பஸ் நிறுத்தம். கல்லூரி மாணவர்கள் சிலர் வழக்கமாக ஏறும் இடம். அத்தனை பெண்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். ஆறுமுகத்தை ஓட்டலில் கேலி பேசிய வாலிபர்களும் அங்கு வந்தனர்.
"நல்லவேளை, ஜன்னல் பக்கம் உட்கார்ந்தது வசதியாய்ப் போனது. டவுன்ல திருட்டும் கொலையும், கொள்ளையும் பெருகிப் போச்சுன்னு சொன்னாங்க. எந்தக் களவாணிப் பய கண்ணிலும் படலை இது" ஆறுமுகம் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
ஓட்டலுக்குச் செல்லும் முன் அந்தத் தூணில் அவர் கட்டிவைத்த வெள்ளாடு அப்படியே இருந்தது. அந்தப் பெண்கள் ஆறுமுகத்தின் வெள்ளாட்டைக் காவல் காப்பது போல நின்றுகொண்டிருந்தனர். "பாப்பா... கொஞ்சம் நகருங்க’’ என்று சொல்லித் தன் ஆட்டைக் கட்டவிழ்த்துக் கொண்டு புறப்பட்டார் ஆறுமுகம்.
அந்த வாலிபர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, "பெரியவரே... உங்கள தப்பா நெனச்சி ஏதேதோ பேசிட்டோம். மன்னிச்சிடுங்க.." என்றனர்.
தன்னை அப்படி என்ன தப்பாச் சொன்னாங்க இப்படி மன்னிப்புக் கேட்கறதுக்கு என்று ஆறுமுகத்துக்குப் புரியவில்லை. முன்பு தவறாக நினைத்து பின்னால் மன்னிப்புக் கேட்டாலும் அந்த வாலிபர்களின் மனம் அந்த ஆட்டைப் போல கறுப்புதான். கறுப்பாயிருந்தாலும் பழுப்பாய் இருந்தாலும் அதற்கு வெள்ளாடு என்றுதான் பெயர். ஆனால் இவர்களை அப்படிக்கூடச் சொல்ல முடியவில்லை.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தன் மகனின் படிப்புச் செலவுக்காக ஆட்டை விற்றுப் பணம் அனுப்புவதற்குச் சந்தையை நோக்கிப் புறப்பட்டார் ஆறுமுகம். இந்தப் புரியாத வாலிபர்களைப் போல ஆறுமுகத்தின் மகனும் இல்லாமலிருந்தால் சரி...
பாவலர் தஞ்சை தர்மராஜன், செயின்ட் லூயி, மிசௌரி |